Essays

நிரல் எழுத்து

Tamil Translation of Vedica Kant’s article “Source Code” – https://fiftytwo.in/story/source-code/ 

Author: Vedica Kant  

Translated by: Viswanathan Mahalingam 

ஆசிரியர்: வேதிகா காந்த்

மொழியாக்கம்: விஸ்வநாதன் மகாலிங்கம்

கட்டுரையை பரிந்துரைத்த மகேந்திரராஜன் சந்திரசேகரனுக்கும், கட்டுரையை படித்து பிழைகளை திருத்தியதற்கு அபிநயா சம்பத்திற்கும் நன்றி.

—-

தாராளமயமாக்கல் இந்தியாவை உலகின் மென்பொருள் தலைநகரம் ஆக்கியது. இந்தியாவின் வெற்றிகரமான மென்பொருள் நிறுவனமான இன்ஃபோசிஸ் உருவான கதை.

Source Code by Vedica Kant; Illustration by Akshaya Zachariah for FiftyTwo.in

1990 ஜனவரி மாதத்தில் ஒரு நாள் மதியம் பெங்களூர் ஜெயநகரில் இருந்த ஷாலினி உணவகத்தில் நான்கு பேர் மதிய உணவிற்காக அமர்ந்தார்கள்.  அவர்களுடைய சிறிய மென்பொருள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை பூனேவில் இருந்து பெங்களூரின் ஜெயநகருக்கு சிறிது காலத்திற்கு முன்பு மாற்றி இருந்தார்கள். N.S.ராகவன் , K.தினேஷ், நந்தன் நீலகேனி, நாராயண மூர்த்தி. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஏழு நிறுவனர்களில் நால்வர். 

அன்றைய காலை பொழுதை ஒரு முக்கியமான முடிவை குறித்து விவாதிக்க செலவிட்டு இருந்தார்கள். மிக பிரபலமான தொழில் குழுமம் ஒன்று அந்த நிறுவனர்களின் பங்குகளை $1 மில்லியன் டாலருக்கு (இரண்டு கோடி ரூபாய்) வாங்க விருப்பம் தெரிவித்து இருந்தது. ஒரு வருடம் முன்புதான் அழிவின் விளிம்பை தொட்டு மீண்டு இருந்தது இன்ஃபோசிஸ். கர்ட் சால்மன் அஸோசியேட்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தோடு கூட்டாக தொழில் செய்யும் முயற்சி உடைந்து இருந்தது. அதிலிருந்து மெல்ல மீண்டு இருந்தார்கள். அந்த பெரிய நிறுவனத்தின் விருப்பத்தை அப்படி எளிதில் புறம் தள்ளிவிட முடியாது. 

இன்ஃபோசிஸ் ஒன்பது வருடங்கள் முன்பு துவங்கப்பட்டது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இருந்த நிறுவனங்களுக்கு மென்பொருள் கட்டுமான ஒப்பந்தங்களை எடுத்து மென்பொருள் சேவைகளை வழங்கியது.[1]

அதற்கு முந்தைய பத்து வருடங்களில், குறுங்கணினிகளின் (microcomputers) எழுச்சி மென்பொருளையும் அந்த மென்பொருளை இயக்கும் உபகரணங்களையும் தனியாக பிரிக்க உதவியது. அதன்மூலம் கணினித்துறை பெரிய மாற்றங்களை கண்டது. குறுங்கணினிகளுக்கு முன்பு இருந்த மெயின்ஃபிரேம் பெருங்கணினிகள் ஒரு பெரிய அறையை அடைத்தபடி இருக்கும். அவற்றை இயக்க ஒரு படையே தேவைப்படும். குறுங்கணினிகளால் மெயின்ஃபிரேம் பெருங்கணினிகளின் காலம் முடிவிற்கு வந்தது. அதன் விளைவால் நிறுவனங்கள் மலிவான கணினிகளை வாங்கி, தாங்களே தங்களுக்கு தேவையான மென்பொருளை எழுதி, அந்த கணினிகளில் ஓட்ட முடிந்தது. இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் திட்டம், அந்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தியாவில் இருந்த அதே அளவு திறமையான ஆட்களை வைத்து மிகக் குறைந்த விலையில் மென்பொருளை எழுத வைக்கலாம் என்பது.

ஷாலினி உணவகத்தில் மதிய உணவு உண்டபடியே, அந்த நால்வரும் விவாதித்து கொண்டு இருந்தார்கள். ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தை துவங்குவதற்கு அது சரியான காலகட்டமோ, சரியான இடமோ இல்லை. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வாங்கிய பத்தாயிரம் ரூபாயில் (அன்று ஆயிரம் டாலர்கள்) இன்ஃபோசிஸ் துவங்கப்பட்டது. எல்லா அளவுகோல்களின் படியும், துவங்கப்பட்ட இடத்திலிருந்து நிறுவனம் தொலைதூரத்தை கடந்து வந்திருந்தது. இன்ஃபோசிஸ்ஸின் பெரும்பாலான நிறுவனர்கள் அதனை விற்கும் யோசனையை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்களைவிட பத்து வருடங்கள் மூத்தவரான நாராயண மூர்த்தி நிறுவனத்தை விற்க விரும்பவில்லை. இன்னும் சில காலம் தாக்கு பிடித்து பார்க்கலாம் என்றார். 

“சிக்கனமான ஒரு வாழ்வை வாழ்ந்து இருக்கிறோம். நம் பேராசைகளுக்கு அடிமை ஆகாமல், நம் செயல்களுக்கு எஜமானாக இருக்கிறோம்.” நாற்பது வருடங்களுக்கு பின்பு இந்த கோடை காலத்தில், மூர்த்தி ஒரு சூம் காணொளியில் என்னிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். “நம் குடும்பங்களுக்காக, இந்த நிறுவனத்தில் இருக்கும் இளைஞர்களுக்காக, இந்த துறைக்காக, சமூகத்திற்காக, உண்மையிலே நமக்காக, இந்த மாராத்தான் ஓட்டத்தை நாம் ஓடித்தான் ஆக வேண்டும்.” அடுத்த ஒரு மணிநேரத்தில், மற்ற அனைவரையும், தன் முடிவை ஏற்கச்செய்தார். இன்ஃபோசிஸ்ஸை வாங்க விரும்பிய தொழில்குழுமத்தின் விருப்பத்தை நிராகரித்தார்கள். 

பின்பு நினைத்து பார்த்தால் அது சரியான முடிவு. இந்தியாவின் பெரு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்த இன்ஃபோசிஸ்ஸின் சமீபத்திய சந்தை மதிப்பு $100 பில்லியன் டாலர்கள். அதன் வளர்ச்சியும் வெற்றியும் ஒரு வகையில் இந்திய மென்பொருள் துறையின் வளர்ச்சியையும், வெற்றியையும் ஒத்து இருந்தது. அவர்கள் ஷாலினியில் உணவு அருந்திய அந்த நாளில் (1990 ஆண்டு), மொத்த இந்திய மென்பொருள் துறையின் மதிப்பே $100 மில்லியன்தான். 1996ஆம் ஆண்டில் $1 பில்லியன்.[2]

மென்பொருள் துறை எதிர்காலத்தில் பிரம்மாண்டமாக வளரும் என்று அன்று எந்த உத்திரவாதமும் இல்லை. “1980களில், இந்தியா ஒரு தோல்வி அடைந்த நாடு. நாம் வரிசையின் கடைசியில் இருந்தோம்.” தேசிய மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின் (NASSCOM) இணை-நிறுவனர்களில் ஒருவரான சௌரப் ஸ்ரீவத்ஸவா என்னிடம் சொன்னார் .[3] ”நாம் இரண்டு சதவீத இந்து வளர்ச்சிவிகிதத்தில் இருந்தோம்.”  1950-1980 காலகட்டதில் இந்தியாவின் ஆமை வேக வளர்ச்சி விகிதத்தை குறிக்கும் பதம்  – “இரண்டு சதவீத இந்து வளர்ச்சி விகிதம்”. “நாம் குப்பைகளை ஏற்றுமதி செய்து கொண்டு இருந்தோம். நமக்கு குரலே இல்லை. அந்த காலகட்டத்தில், முதல்தர அறிவு துறையின் உச்சத்தில் இருப்பதாக மேற்கு உலகு கருதிய ஒன்றை இந்தியா ஏற்றுமதி செய்ய முடியும் என்பதே ஒரு சவாலான விஷயம்”.

முப்பது வருடங்களுக்கு முன்பு, இந்திய பொருளாதாரத்தில் எதேச்சையாக நிகழ்ந்த திருப்பம், இந்திய மென்பொருள் துறையையே மாற்றி அமைத்தது என பரவலாக அனைவரும் ஏற்று கொள்கிறார்கள். 1991 ஆம் ஆண்டு, ஏற்றுமதி இறக்குமதி பண பற்றாக்குறை பெருநெருக்கடியை சமாளிக்க, பி.வி.நரசிம்ம ராவின் அரசாங்கம், இந்திய பொருளாதாரத்தை தாராளமயமாக்கலை நோக்கி திருப்பியது. 1960 களுக்கு பிறகு உலக பொருளாதாரத்தில் மீண்டும் இந்தியா இணைந்தது.

1980களின் பிந்தைய ஆண்டுகளில் மெல்ல மாற்றங்கள் தென்பட துவங்கின. சிறிய அளவில் மாற்றங்கள் நடந்தாலும், ஜூலை 1991 பெருந்திறப்பிற்கு அவை முக்கிய பங்களிப்பு ஆற்றின. வெளியுறவு கொள்கைகளில் மாற்றம், தொலைநோக்கு பார்வை கொண்ட அரசு அதிகாரிகள், ஒரு புகழ்மிக்க அமெரிக்க தலைமை அதிகாரியின் இந்திய வருகை – இவை எல்லாம் இந்தியாவையும், அதன் மென்பொருள் துறையையும்  சரியான பாதையில் செலுத்தின. இவை நிகழவில்லை என்றால் மென்பொருள் துறை பாதை மாறி போயிருக்கலாம். அல்லது மென்பொருள் துறை என்ற ஒன்றே இல்லாமலும் போயிருக்கலாம்.

1980களில் நடந்த இந்த சிறிய  மாற்றங்களின் மூலம், இந்தியா தன் சோசியலிச கொள்கைகளில் இருந்து மெல்ல விலக துவங்கியது என்று அறிஞர்கள் ஏற்று கொள்கிறார்கள்.[4]

இன்ஃபோசிஸ் மற்றும் அதன் நிறுவனர்களின் கதை, இந்தியா முதலாளித்துவ வளர்ச்சியை நோக்கி நகர்ந்த கதையின் ஒரு பகுதி. குறைந்தபட்சம் வணிகத்திற்கு எதிரான தடைகள் சற்று குறைந்ததின் கதை. இன்ஃபோசிஸ்ஸின் கதை தொழில்முனைவோரின் வெற்றிக்கதை மட்டுமல்ல பொருளியல் தத்துவ கொள்கை மற்றும் நடைமுறை அரசியல் சார்ந்த ஒரு பார்வையும் கூட.  முதலில் மெதுவாக, பின்பு அதிவேகமாக மாறிய இந்தியாவின் கதையில் பின்னி பிணைந்தது இன்ஃபோசிஸ்ஸின் பயணம்.

திட்டமிட்ட பொருளாதாரத்தையும், தொழிற்கட்டமைப்பையும் உருவாக்க விரும்பிய சுதந்திர இந்தியா, கணினிகளை முதலில் பயன்படுத்திய நாடுகளில் ஒன்று.  பி.சி,மகானுலோபிஸ்[5]  மற்றும் ஹோமி பாபா[6] போன்ற செல்வாக்கு உடைய அடிப்படை கட்டமைப்பை உருவாக்கியவர்கள் நவீன கணினியை பயன்படுத்தினார்கள். IBM நிறுவனம் 1951 இலேயே இந்தியாவில் கணினி விற்பனையை துவக்கி ஆய்வகங்கள், எண்ணெய் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு விற்றார்கள்.[7]

 பிரிட்டிஷ் நிறுவனமான இண்டெர்னேஷனல் கம்ப்யூட்டர்ஸ் லிமிட்டட் (ICL) IBM நிறுவனத்தின் போட்டியாளராக இருந்தது. சுதந்திரம் அடைந்தபோது, இந்திய கல்லூரிகளில் பயின்ற மொத்த பொறியாளர்களின் எண்ணிக்கை 2500. பெரும்பாலானவர்கள் கட்டுமான துறையில் தான் பயின்றார்கள்.[8]

பொதுத்துறை நிறுவனங்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் பல பொறியியல் துறைகளில் தேர்ச்சி பெற்ற  பொறியாளர் படை  தேவைப்படுகிறார்கள் என்று உணர்ந்து இந்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) உருவாக்கும் எண்ணம் இந்திய அரசிற்கு தோன்றியது. IITக்கள் மிகவேகமாக அந்த தேவையை பூர்த்தி செய்ய துவங்கின. ஒன்பது அமெரிக்க பல்கலை கழகங்களின் கூட்டமைப்பின் உதவியுடன் IIT கான்பூர்  துவங்கப்பட்டது. அமெரிக்க பல்கழைகழகங்கள் அளித்தவற்றில் அதிவேக  IBM 620 கணினியும் இருந்தது. 1963இல் அந்த பெரும்கணினி நிறுவப்ப்பட்டது. இந்திய மென்பொருளாளர்களில், ஒரு தலைமுறையே அந்த பெருங்கணினியில் தான் நிரல் எழுதி பழகினார்கள். அவர்களில் ஒருவர் நாகவர ராமாராவ் நாராயண மூர்த்தி. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிறிய ஊரான சித்லகட்டாவில் பிறந்த நாராயண மூர்த்தி, மைசூர் பல்கலை கழகத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றார். மின் பொறியியலில் அவருக்கு விருப்பம் இருந்தது. IIT கான்பூரில் முதுகலையில் சேர்ந்த பிறகு, அவருக்கு கணினி துறையில் ஆர்வம் ஏற்பட்டது. 

முதுகலையில் பட்டம் பெற்ற பிறகு மிக வித்தியாசமான ஒரு வேலையை தேர்வு செய்தார்.  அவருடைய கல்லூரி நண்பர்கள் அனைவருமே பெரிய நிறுவனங்களை தேர்வு செய்து இருந்தார்கள். இந்திய மேலாண்மை கழகம், அகமதாபாத் (IIM-A) ஒரு புதிய கணினி ஆய்வகத்தை நிறுவினார்கள். அமெரிக்க பல்கலைகழகம் MITயில் பட்டம் பெற்ற பேராசிரியர் ஜெ.ஜி.கிருஷ்ணய்யா தலைமையில் அந்த ஆய்வகம் இயங்கியது.  அவர் HP 2100A TSS கணினியை இறக்குமதி செய்ய முடிவு செய்தார்.[9]

பலர் ஒரே நேரத்தில் பகிர்ந்து பயன்படுத்த கூடிய நேர-பகிர்வு கணினிகளை ( Time Sharing System -TSS) இந்தியாவில் IIM-A தான் முதலில் நிறுவியது. உலகிலேயே ஸ்டான்ஃபோர்ட் மற்றும் ஹார்வேர்ட் பல்கலை கழகங்களை தவிர TSS ஐ பயன்படுத்திய மூன்றாவது மேலாண்மை பல்கலைகழகம் IIM-A. இங்கு மூர்த்தி தலைமை நிரல் எழுத்தாளராக (Chief Systems Programmer) பணிக்கு சேர்ந்தார். “கணக்கியல், உற்பத்தி முறைகள், சரக்கு மேலாண்மை போன்றவற்றை புத்திசாலியான இள மாணவர்களுக்கு கற்று கொடுப்பதற்காக கற்றல் மென்பொருளை இங்கு உருவாக்கினேன். மேனாண்மை விளையாட்டு மென்பொருள்களையும் எழுதினேன்.” என்றார் மூர்த்தி.

அகமதாபாத்தில் செய்த வேலையின் மூலம் மூர்த்திக்கு புதிய வாய்ப்புகள் திறந்தன. 1970களின் துவக்கத்தில் பாரிஸ் நகரில் இருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. “பிரான்ஸ் வளர்ந்த நாடு. அவர்கள் பயன்படுத்தக்கூடிய இயங்குதளத்தை (Operating System) 18 பேர் கொண்ட அந்த நிறுவனம் உருவாக்கிய்து. அந்த சிறிய நிறுவனத்தில் கிடைத்த வேலை என்னை ஈர்த்தது.” மூர்த்தி தொடர்ந்தார். “உலகின் துடிப்பான நகரமான பாரிஸ் வாழ்க்கையும் என்னை ஈர்த்தது. நல்ல சம்பளம். நான் அன்று இளைஞன்!” முனைவர் படிப்பிற்கு பதிலாக மூர்த்தி பாரிஸ் வேலையை தேர்வு செய்தார். 

அந்த மொத்த அனுபவமும் அவரை முழுமையாக மாற்றியது. “பிரான்ஸ் செல்லும்வரை நான் விமானத்தில் பயனித்தது கிடையாது.  பம்பாய்-லண்டன்-பாரிஸ் சிரியன் ஏர்லைன்ஸ் விமானம். ₹800 ரூபாய் கட்டணம்.” மூர்த்தி தொடர்ந்தார். “ விமானத்தில் இருந்து இறங்கி ஹீத்ரோ விமான நிலையத்தில் நுழைந்த போது, அந்த கண்ணாடி கதவில் இருந்த ஃபோட்டோ எலக்ட்ரிக் சென்ஸாரின் மூலம் கதவுகள் தானே திறந்து மூடுகின்றன என்று சிறிது நேரம் கழித்தே புரிந்தது.”

உலகத்தை அறிந்து கொள்ள அது ஒரு வாய்ப்பை அளித்தது. வணிகத்தின் வழிமுறைகளையும், அரசியலையும் புரிந்து கொள்ளவும் உதவியது. “சுத்தமான நாடு. அழகான நகரம். எல்லா இடங்களிலும் வளம்.” மூர்த்தி நினைவு கூர்ந்தார். பெரிய திட்டங்கள் மூலம் நாட்டை கட்டமைக்கும் நேருவிய கனவின் வழிவந்த இடதுசாரியாகவே அதுவரை தன்னை உணர்ந்தார். “1961இல் இருந்து எனக்கு கல்விக்கான தேசிய உதவி தொகை கிடைத்தது. எல்லா IITக்களிலும், எல்லா துறைகளிலும் அமெரிக்காவில் இருந்து இரண்டு அல்லது  மூன்று பேராசிரியர்கள் வேலை செய்தார்கள். அவர்கள் எல்லோரும் இடதுசாரி-தாராளவாதிகள். நேருவையும், அவர் கொள்கையையும் மிகவும் போற்றினார்கள்.”

உலகை குறித்த நாராயண மூர்த்தியின் அந்த பார்வையை, பாரிஸின் அறிவு புலம் சவாலுக்கு அழைத்தது. சோர்போனிலும், மேற்கு கரையில் இருக்கும் கஃபேக்களிலும் இந்த கருத்தியல் சார்ந்த விவாதங்களில் கவனிக்கவும், பங்குகொள்ளவும் மூர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தது. பாரிஸில் இருந்து கிளம்பும் போது, தான் எந்த பக்கம் என்பதை தேர்வு செய்து இருந்தார். இப்போது, இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதிக மதிப்புடைய வேலைகளை உருவாக்க வேண்டும். அதை அரசாங்கம் உருவாக்க முடியாது. தனியார் துறையின் தொழில் முனைவோர்  உருவாக்க வேண்டியது என்று உணர்ந்தார். இந்த உணர்வால், “தொழில்முனைவில் ஒரு பரிசோதனை” செய்வதற்காக 1976இல் மீண்டும் இந்தியா வந்தார்.

1976இல் “ஸாஃப்ட்ரானிக்ஸ்” என்ற மென்பொருள் நிறுவனத்தை மூர்த்தி துவங்கினார். ஆனால் அது சரியான நேரம் இல்லை: கணினிகள் வேலைகளை எடுத்துக்கொள்ளும் என்ற பயம் உச்சத்தில் இருந்தது. அடுத்த சில மாதங்களில் ஜனதா அரசாங்கம் IBM நிறுவனத்தை இந்தியாவை விட்டு துரத்திவிட்டது. மேலும், இந்தியாவில் கணினி பயன்பாடு மிக குறைந்த அளவே இருந்தது. ஸாஃப்ட்ரானிக்ஸிற்கு போதுமான வாடிக்கையாளர்கள் இல்லை. ஒரு வருடத்தில் மூர்த்தி நிறுவனத்தை மூட வேண்டி வந்தது. [10]

ஆனால் அமெரிக்காவில் நிலைமை வேறாக இருந்தது. மிக வேகமாக வணிக தொழில்நுட்பம் மக்கள் மயமாகி கொண்டு இருந்தது. DEC மற்றும் டேட்டா ஜெனரல் நிறுவனங்கள் உருவாக்கிய விலைகுறைந்த திறன்மிகுந்த குறுங்கணினிகள் அதற்கு உதவின. அமெரிக்க சந்தையில் பங்கெடுக்க இந்திய நிறுவனங்களுக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருந்தது. இந்திய அரசாங்கத்தின் ஒரு சட்டம் அந்த சிறிய வழியை உருவாக்கியது – “ கணினிகளை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால், இறக்குமதியாளர் அந்தக் கணினியின் மதிப்பை போல 200 சதம் ஏற்றுமதி செய்ய உறுதியளிக்க வேண்டும்”. அதன் வாயிலாக சில முன்னோடி நிறுவனங்கள் உருவாகி இருந்தன – டாட்டா கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் (இப்போது டாட்டா கல்சண்டன்சி சர்வீஸ் – TCS), ஹிண்டிட்ரான் மற்றும் பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்.  

பட்னி என்பது இப்போது மறக்கப்பட்ட ஒரு பெயராக இருந்தாலும், அது இந்திய மென்பொருள் வரலாற்றிலும், இன்ஃபோசிஸ் வரலாற்றிலும் ஒரு முக்கிய பங்கை ஆற்றியது. ரூர்கி பல்கலை கழகம் (இப்போது IIT ரூர்கி) மற்றும் MITயில் பயின்ற  நரேந்திர பட்னி அதன் நிறுவனர். இப்போது நாம் பரவலாக பயன்படுத்தும் நிறைய மின் கருவிகளை பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் அப்போது உருவாக்கின. உதாரணத்திற்கு லீகல் எக்ஸ்சேஞ்ச் இன்ஃபர்மேஷன் சர்வீஸஸ் (Lexis) நிறுவனம் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளையும், சட்டங்களையும் மின்-மயப்படுத்தி  ஒரு மின்-தொகுப்பை உருவாக்கி கொண்டு இருந்தது.[11]

கணினியில் தகவல்களை உள்ளிடும் வேலையை மிகக்குறைந்த விலையில் இந்தியாவில் இருந்து செய்ய முடிந்தது. இந்தியாவில் இருந்த டைப்பிஸ்டுகள் தகவல்களை பேப்பர்-டேப்பில் பதிந்து அமெரிக்காவிற்கு அனுப்பினார்கள். அங்கே, அதை கணினியில் ஏற்றிக்கொள்வார்கள். இந்த வேலை பெருவளர்ச்சி அடையவே, இந்தியாவில் இருந்து நேரடியாகவே கணினியில் பதித்துக் கொள்வது அதிக லாபம் தரும் என்ற முடிவிற்கு பட்னி வந்திருந்தார்.    

1970இல் குறுங்கணினிகளின் உற்பத்தியாளர் டேட்டா ஜெனரலுடன் (DG) ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். கணினிகளை வாங்குவது மட்டுமல்ல, டேட்டா ஜெனரலின் இந்திய விற்பனையர் ஆகவும் பட்னி மாறியது. 200% சத லாபம் சட்டத்திற்கு உடன்படுவதற்காக, DGயின் மென்பொருள் எழுதும் வேலையையும் பட்னி ஏற்றுக்கொண்டது. 

இந்தியாவில் தன் கிளையை நிறுவுவதற்காக பட்னி நாராயண மூர்த்தியை வேலைக்கு சேர்த்து கொண்டார். ஸாப்டிரானிக்ஸில் ஏற்கனவே தன் கையை சுட்டு கொண்டிருந்த மூர்த்திக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருந்தது. மென்பொருள் துறைதான் தன்னுடையது என்று ஏற்கனவே மூர்த்தி முடிவு செய்து இருந்தார். ஆனால் சர்வதேச மென்பொருள் சந்தை குறித்து மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு தோன்றியது. “ஏற்றுமதிக்கான சந்தை இருக்கிறது என்று தெரிந்து கொண்டேன். அமெரிக்காவில் கணினியின் பயன்பாடு பெரிய அளவில் அதிகரிக்கும், மென்பொருள் பயன்பாடும் அதிகரிக்கும் என்று உறுதியாக தோன்றியது.” 2019 ஹார்வேர்ட் மேலாண்மை கல்விகூடத்தின் பேராசிரியர் ஜோ ஃபுல்லரிடம் மூர்த்தி சொன்னார். “இந்தியாவில், வேலை தேவைப்படும் பொறியியல் படித்த இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவிற்கும், பெரிய அளவில் டாலர் பற்றாக்குறை இருக்கிறது ”[12]

பட்னியில், மூர்த்தி மென்பொருள் எழுதுவதைக்காட்டிலும் பலமடங்கு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். டேட்டா ஜெனரலின் கணினிகளை இந்திய நுகர்வோருக்கு விற்கும் பொறுப்பையும், டேட்டா செண்டரின் மேற்பாற்வையையும் ஏற்று கொண்டார். பொறுப்புகள் அதிகரிக்கவே, தனக்கு உதவுவதற்கு ஒரு மென்பொருள் குழுவையும் உருவாக்கி கொண்டார். நந்தன் நீலகேனி –  மின்துறை பொறியாளர் IIT-பாம்பே; எஸ்.கோபாலகிருஷ்ணன் –  IIT-மெட்ராஸில் கணினி முதுகலை; எஸ்.டி.ஷிபுலால், கேரளா பல்கலையில் இயற்பியலில் முதுகலை; கெ.தினேஷ் – பெங்களூர் பல்கலையில் கணிதத்தில் முதுகலை; என்.எஸ்.ராகவன், ஆந்திரா பல்கலை பட்டதாரி, அஷோக் அரோரா – IIT-பாம்பே.

1979இல் இந்திய மென்பொருள் வரலாற்றிலே மிகப்பெரிய ஒப்பந்தம் ஒன்றை பட்னி வென்றது –  டேட்டா பேசிக்ஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திடம் செய்து கொண்ட $500,000 ஒப்பந்தம். துணி உற்பத்தியாளர்களுக்கான மென்பொருளை (CAMP) உருவாக்கும் ஒப்பந்தம் அது. இந்த ஒப்பந்தம் தான் ‘அவுட்சோர்சிங் துறை’  என்று நாம் இப்போது சொல்வதின் துவக்கம். அதுவரை குறுங்கணினி தயாரிக்கும் சில நிறுவனங்களுக்காக குறுங்கணினியின் மென்பொருளை உருவாக்கினார்கள். அதன்பின்பு குறுங்கணினியை பயன்படுத்த போகும் எண்ணற்ற நிறுவனங்களுக்கான மென்பொருளை அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களுடன் கூட்டாக சேர்ந்து ஒப்பந்த முறையில் எழுதி தந்தார்கள். வெவ்வேறு துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப மென்பொருளை மாற்றி அமைத்தார்கள். [உதாரணம்: அமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் சரக்கு மேலாண்மைக்கான மென்பொருளை உருவாக்கும். இந்திய நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கார் உற்பத்தியாளருக்கோ, பல்பொருள் அங்காடிக்காகவோ அந்த சரக்கு மேலாண்மை மென்பொருளை மாற்றியமைக்கும்.  வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், அமெரிக்க நிறுவனம் பாலிஸ்டர் துணியை உற்பத்தி செய்யும். இந்திய நிறுவனங்கள் அந்த துணியில் இருந்து ஆளுக்கு ஏற்றார்போல சட்டை தைத்து தந்தார்கள்.]  டேட்டா பேசிக்ஸ் ஒப்பந்தம் இந்தியாவை பெரிய அளவில் அமெரிக்க மென்பொருள் ஒப்பந்ததாரர்களிடம் கொண்டு சேர்த்தது. இதன்மூலம் உலகின் மறுபாதியில் இருக்கும் மென்பொருள் திறனை பற்றி தெரிந்து கொண்டார்கள்.  

அந்த ஒப்பந்தத்தின் வெற்றி, பட்னியின் மென்பொருள் பொறியாளர்களின் தன்னம்பிக்கையை பல மடங்கு அதிகரித்தது. துணிச்சலான முடிவுகளுக்கு தூண்டியது. 1981இல் மூர்த்தியும் அவருடைய அணியும் பட்னியில் இருந்து விலகி சொந்தமாக நிறுவனம் துவங்கினார்கள். அதுதான் இன்ஃபோசிஸ்.

இந்த புதிய நிறுவனம் ஏற்கனவே இருக்கும் ஒரு நிறுவனம் தன்னிலிருந்து பணம் தந்து பிரித்தனுப்பிய நிறுவனம் இல்லை. பெரிய குடும்ப நிறுவனங்களின் மென்பொருள் நிறுவனமும் இல்லை (விப்ரோ, டி.சி.எஸ்); அமெரிக்காவில் இருந்த இந்தியர்கள் துவங்கியதும் இல்லை (பட்னியை போல). 1980ல் தொழில் துவங்குதல் என்பது இந்த பொறியாளர்களுக்கு ஒரு சவாலான தேர்வு. அவர்கள் மதிப்புமிக்க கல்லூரிகளில் பட்டம் பெற்று இருந்தார்கள். ஆனால் வணிக குடும்ப பின்புலம் இல்லை. இந்தியாவில் பெரிய கனவுடன் நிறுவனங்கள் துவக்க வேண்டும் என்றால் அரசு அதிகார வர்க்கத்துடனும், சட்டத்தின் தடைகளையும் எதிர்த்து போராட வேண்டியிருக்கும்.  

“அப்போது, தொலைபேசி இணைப்பு பெறுவதற்கு ஆண்டுகள் ஆகும். வங்கிகளுக்கு மென்பொருள் புரியவில்லை. அவர்கள் தரும் கடனிற்கு அவர்கள் தொட்டு உணரக்கூடிய ஒரு பொருளை அடமானமாக கேட்டார்கள். ஒரு கணினியை இறக்குமதி செய்வதற்கு 20-30 முறை புது தில்லிக்கு பயணம் செய்ய வேண்டியிருக்கும்.” என்றார் மூர்த்தி.

பெரிய அளவில் வெளிநாட்டு நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக கொண்டு இருக்கும் இந்திய நிறுவனங்களுக்கு ஒரு சவால் இருந்தது. “நீங்கள் வெளிநாட்டில் ஒரு நாளிற்கு $8 மட்டுமே செலவிட முடிவும் என்ற கட்டுப்பாடு அப்போதுதான் தளர்த்தப்படுகிறது.” NASSCOM ஶ்ரீவத்சவா சொன்னார். “அந்நிய செலாவணியை மாற்றும் வசதி அப்போது இல்லை. நம் கையிருப்பில் எப்போதுமே அடுத்த சில மாதங்களுக்கான டாலர்கள் மட்டுமே இருந்தது.” ஒவ்வொரு வெளிநாட்டு பயணத்திற்கும் மத்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெற வேண்டியிருந்தது. 

இன்ஃபோசிஸ் தன் தொழிலை ஒரு முக்கிய ஒப்பந்தத்தை வென்றதன் மூலம் துவக்கியது. ஆம்! பட்னியின் மிக முக்கியமான ஒப்பந்ததாரர்: டேட்டா பேசிக்ஸ். பட்னி கம்ப்யூட்டர்ஸுடனான அவர்களின் ஒப்பந்தம் முடிவிற்கு வந்தவுடன், இன்ஃபோசிஸ் டேட்டா பேசிக்ஸுடன் ஆறு வருட புதிய ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டது. [13]

ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால், இன்ஃபோசிஸ்ஸிடம் கணினியை வாங்குவதற்கும் இறக்குமதி செய்வதற்கும் பணம் இல்லை.[14]

அதனால் இன்ஃபோசிஸ் ஒரு வழியை கையாண்டது. மற்ற எல்லா இந்திய மென்பொருள் நிறுவனங்களும் பின்பு அந்த வழியை பின்பற்றின: இன்ஃபோசிஸ் பொறியாளர்கள் அமெரிக்காவிற்கு “ஆன் சைட்” டில் வேலை செய்ய சென்றார்கள். “‘பாடி ஷாப்பிங்’ – (உடல் விற்பனை)  என்பது பின்பு ஒரு மட்டமான சொல்லாக மாறியது.” ஶ்ரீவத்சவா சொன்னார், “ஆனால், அந்த காலத்தில் மென்பொருள் ஏற்றுமதியாளர்களால் அதை மட்டும்தான் செய்ய முடிந்தது. நாங்கள் வாடிக்கையாளர்களிடம் சொல்வோம்: இதுதான் எங்கள் மென்பொருளாளரின் பயோடேட்டா. நீங்கள் தொலைபேசியில் இண்டர்வியூ செய்துகொள்ளலாம். தேர்வடைந்தால், நாங்கள் விமான கட்டணத்தையும், இந்திய சம்பளத்தையும் தருகிறோம். அங்குள்ள செலவுகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.”

அந்த நாட்களில் மென்பொருளாளரின் இந்திய சம்பளம் மாதத்திற்கு  ₹2000-3000 என்று ஶ்ரீவத்சவா சொன்னார். அமெரிக்காவில் வீடு, உணவு உள்ளிட்ட செலவு மாதத்திற்கு தோராயமாக $1000. ஒப்பந்த நிறுவனங்களுக்கு ஒன்றோ அல்லது இரண்டோ மாதங்கள் கழித்து கட்டணம் வசூலிப்பதற்கு பதில், முன்தொகையை வாங்கி கொண்டார்கள் (சலுகை விலையில் சேவையை தருவதற்காக). “அப்படித்தான் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து எங்கள் தொழிலை நடத்துவதற்காக பணம் வாங்கினோம்” என்றார் ஶ்ரீவத்சவா. 

இன்ஃபோசிஸ் டேட்டா பேசிக்ஸுடன் ஆறு வருட ஒப்பந்தம் போட்டிருந்தது. CAMP மென்பொருளை அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் துணி மற்றும் ஷூ தயாரிப்பு நிறுவங்களில், அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி, பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் விரிவும் அதில் நாங்கள் செய்த வேலையும் அமெரிக்காவில் மற்ற துறைகளில் எங்களுக்கு கிடைத்த நுழைவுச்சீட்டு. அட்லாண்டா நகரில் உள்ள கர்ட் சால்மன் அசோசியேட்ஸ் நிறுவனத்துடன் இன்ஃபோசிஸ் ஒரு கூட்டு ஒப்பந்தம் போட்டு கொண்டார்கள். டிஜிட்டல் எகுப்மெண்ட் கார்பரேஷன் மற்றும் ரீபக் பிரான்ஸ் நிறுவனங்கள் புதிய வாடிக்கையாளர்களாக ஆனார்கள். 1987இல், அமெரிக்காவின் இரு கரையிலும் கிளைகளை துவங்கி, மேலும் வாடிக்கையாளர்களை பெறுவதற்காக தீவிரமாக முயன்றார்கள். 

1989இல், ஜாக் வெல்ச் – ஜெனரல் எலக்ட்ரிக் (GE) நிறுவனத்தின் புகழ்பெற்ற தலைமை செயல் அலுவலர் (CEO) இந்தியாவிற்கு வந்தார். அவருடைய நோக்கம் இந்தியாவிற்கு தன் நிறுவனத்தின் விமான இன்ஞின்களை விற்பது. ஆனால் அவரிடம், அவருடைய நிறுவனத்தின் மென்பொருட்களை இந்தியாவில் இருந்து குறைவான விலையில் உருவாக்கலாமே என்று வணிக யோசனையை இருவர் சொல்லி கொண்டிருந்தார்கள். பிரதமர் ராஜீவ் காந்தியின் தொழில்நுட்ப ஆலோசகர்கள் சாம் பிட்ரோடா மற்றும் ஜெய்ராம் ரமேஷ். 

“வெல்ச்சின் இந்திய பயணம், இந்திய மென்பொருள் துறையின் ஒரு திருப்புமுனை.” நீலகேனி விவரித்தார். “இந்திய மூளையின் செயல்திறனை கண்டுகொண்ட முதல் அமெரிக்க தலைமை செயல் அலுவலர் அவர்.” 1989இல் இருந்து 1994 வரை இன்போசிஸ் வளர பெரிதும் காரணம் GE. அந்த அனுபவம் நிறைய கற்று கொடுத்தது. தன் ஆட்டத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றியது இன்ஃபோசிஸ்ஸை தொலைநோக்கில் சிந்திக்க வைத்தது.

இன்ஃபோசிஸ்ஸும், இந்திய மென்பொருள் துறையும் பதின்பருவத்திலிருந்து முதிர்ந்து கொண்டிருந்தன. அதே காலத்தில் உலகளவில் நடந்த சில பெரிய மாற்றங்கள் இந்தியாவையும் மாற்றியது. இந்திய பொருளியல் சூழல் 1991இல் ஒரு பெரிய மாற்றத்தை அடைந்தது. ஆனால் 1980களில் நடந்த நிறைய கொள்கை மாற்றங்கள் இந்த பெரிய மாற்றத்திற்கு வழிவகுத்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்த இந்திரா காந்தி இந்த மாற்றங்களை துவக்கினார். இந்தியாவில் எப்போதும் உள்ள வழக்கம்போல பொருளாதாரத்தை அரசியல் நிர்ணயித்தது.    

அரசியல் ஆய்வாளர் அதுல் கோலி, “அரசியல் ரீதியான அணிதிரட்டலுக்கு இரண்டு வெவ்வேறு சமன்பாடுகள் இருந்தன. மதச்சார்பின்மையும் சோசியலிசமும், இந்து பெரும்பாண்மைவாதமும் முதலாளித்துவமும்”[15]

ஜனதா கட்சியின் சவாலை சமாளிப்பதற்காக, இந்திரா காந்தி முதல் சமன்பாட்டை கைவிட்டு இரண்டாவது சமன்பாட்டை கைக்கொண்டார்.

வெளியுறவு கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படத்துவங்கியது. 1970களில் இந்தியாவின் சோவியத் யூனியன் சாய்வு, இந்திரா காந்திக்கும் அமெரிக்க அதிபர் நிக்சனுக்கும் நல்லுறவு இல்லாததால், மேலும் தீவிரமாகியது. 1971இல் அமெரிக்கா பாகிஸ்தான் பக்கம் நின்றதும் உதவவில்லை. ஆனால் 1980களில் நிலைமை மாறி இருந்தது. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்ரமித்து இருந்தது. அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இருந்த நல்லுறவு தளர்ந்தி இருந்தது. மேலும், இந்திரா காந்தி அமெரிக்க அதிபர் ரீகனுடன் நல்ல உறவை பேணினார். இரண்டு நாடுகளுக்கும் இடையே இருந்த உறவின் தொனி மாறியது, குறிப்பாக தொழில்நுட்பத்தை பொறுத்த வரையில். 

1984இல் இந்திராவின் படுகொலைக்கு பின்பு, பொறுப்பு ஏற்று கொண்ட அவர் மகன் ராஜீவ் காந்தி தொழில்நுட்பத்தை பரவலாக்க மேலும் முயற்சிகள் மேற்கொண்டார். 1982 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஏற்கனவே வண்ணத் தொலைகாட்சிகளும், கணினி மயமாக்கப்பட்ட டிக்கட்டுகளும் அறிமுகம் செய்யப்பட்டன. ராஜீவ் பிரதமரான பின்பு, அரசாங்க அலுவலகங்களில் கணினிகள் நிறுவப்பட்டன. “நிறைய அரசு அதிகாரிகளுக்கு, நிரல் எழுதுவதையோ, கணினியை பயன்படுத்த கற்று கொள்வதையோ ஒரு தொந்தரவாக பார்த்தார்கள். ஆனால் ஒரு அடையாளமாக திடீரென்று எல்லோருடைய மேசைமீதும் கணினி இருந்தது.” கெ.ராய் பால் என்னிடம் சொன்னார். ராய் பால், முன்னாள் IAS அதிகாரி. மின்னனுத்துறையின் இணைசெயலராக 1980களில் இருந்தார்.

தகவல் தொழில்நுட்ப துறையின் வெற்றிக்கு அது அரசு அதிகாரிகளின் பார்வைக்கு வெளியே இருந்ததுதான் காரணம் என்று பரவலாக ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அது முழு உண்மையில்லை. “தகவல் தொழில்நுட்பத்துறையின் வெற்றியில் அரசாங்கத்தின் பங்கு எதுவும் இல்லை என்று யாராவது சொன்னார்கள் என்றால், அது முழுதும் உண்மை இல்லை.” ஶ்ரீவத்சவா சொன்னார். “சில அருமையான அதிகாரிகள், இந்த துறையின் எதிர்கால சாத்திய கூறுகள் என்ன என்பதை கண்டு கொண்டார்கள். அவர்களின் எல்லைக்கு வெளியே சென்று, தனிப்பட்ட முறையில் ரிஸ்க் எடுத்து எங்களுக்கு உதவினார்கள்.”

எங்கள் உரையாடல்களில் ஒரு அதிகாரியின் பெயர் தொடர்ந்து உச்சரிக்க படுகிறது. நாகராஜன் விட்டல் – திருவனந்தபுரத்தில் பிறந்து, தமிழகத்தில் வளர்ந்த மராத்தியர். குஜராத்தில் IAS அதிகாரியாக பணிபுரிந்தவர். பின்பு மின்னனுத்துறையின் செயலராக இருந்தவர். தன் அலோசகர்களுடன் வேலை செய்து, அரசாங்கத்தின் உள்ளிருந்து மாற்றங்களை கொண்டு வந்தவர். “எங்கள் தொழிற்துறையை பொறுத்தவரையில் அவர் ஒரு பெரும் நாயகன்.” ஶ்ரீவத்சவா சொன்னார். மூர்த்தி என்னிடம் விட்டலைப்போல தொழிற்துறையின் நலன்விரும்பிய இன்னோரு அரசு அதிகாரியை பார்த்ததில்லை என்றார்.  

“மின்னனுத்துறையின் செயலராக பொறுப்பு  ஏற்குமாறு என்னிடம் சொன்ன கேபினட் செகரட்டரி,  மென்பொருள் துறை இந்திய பொருளியலில் ஒரு புதிய வளரும் துறை என அருண் நேரு நினைக்கிறார் என்றார்.” 83 வயதான விட்டல் என்னிடம் பேசியபோது – ராஜீவ் காந்தியின் அலோசகரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான அருண் நேருவை நினைவுகூர்ந்தார். தொழில்நுட்பத்தில் ஆர்வமிருந்த விட்டலுக்கு அது போதுமான சிக்னலை தந்தது.

1980களின் இறுதியில், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் ஆட்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு பதில் தொலைவில் இருந்தே (இந்தியாவிலிருந்தே) சேவை வழங்கும் முறைக்கு மாற விரும்பின. நேரத்தையும், பணத்தையும் மிச்சப்படுத்துவதுதான் நோக்கம். அதிநவீன தொலைதொடர்பு கருவிகளும், நெட்வொர்க்கும் மிக அதிக விலையில் இருந்தது. அவற்றை வாங்கி, நிறுவி, பரமாரிப்பதும் மிக கடினமாக இருந்தது. அதிவிரைவான தொலைதொடர்பு அலைவரிசைக்கு எர்த் ஸ்டேஷன் (earth station) ஒன்றை நிறுவ வேண்டிய தேவை எழுந்தது. அதற்குண்டான செலவை எந்த இந்திய நிறுவனத்தாலும் அப்போது தரமுடியவில்லை.

“அப்போது, VSNL செயற்கைகோள் தொடர்புகளை கட்டுப்படுத்தியது. எதற்காக உங்களுக்கு இவ்வளவு அலைகற்றை தேவைப்படுகிறது? எதற்காக பெரிய ஆட்களை போல நடந்து கொள்கிறீர்கள் ? என்று கேள்வி கேட்பார்கள்” டி.வி.மோகன்தாஸ் பாய், இன்ஃபோசிஸின் முன்னாள் தலைமை நிதி அலுவலர் சொன்னார். “அப்போது என்ன முறைமை என்றால், VSNL இடம் பேண்ட்வித் கேட்டு விண்ணப்பிப்போம். அவர்கள் எப்போது கிடைக்கும் என்று சொல்ல மாட்டார்கள், அதன் விலையையும் சொல்ல மாட்டார்கள்.” ஶ்ரீவத்சவா சொன்னார், “எந்த வாடிக்கையாளர் இந்த பதிலை கேட்டு ஆர்டர் தருவார்?”   

ஒரு அமெரிக்க நிறுவனம் இந்த பிரச்சனையை தீர்த்து வழிகாட்டியது. 1985இல், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு தனிப்பட்ட செயற்கைகோள் தொடர்பை நிறுவி தன்னுடைய பெங்களூர் மென்பொருள் அலுவலகத்தையும், அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இருந்த அலுவலகத்தையும் இணைத்தது. “டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் வேலை செய்த மோகன் ராவ் என்பவர், உண்மையிலே ஒரு பெரிய நம்பிக்கையின் அடிப்படையில், இந்தியாவின் முதல் எர்த் ஸ்டேஷனை நிறுவினார்.” நீலகேனி சொன்னார். “மில்லர் ரோட்டில் இருந்த சோனா டவர்ஸ் என்ற கட்டிடத்தில் அது நிறுவப்பட்டது. அவர்களின் மென்பொருள் துறை இன்ஞினியர்கள் பெங்களூரில் அமர்ந்தபடி, டல்லாஸிலும், ஹூஸ்டனிலும் இருந்த அலுவலகங்களுடன் செயற்கைக்கோள் வழியாக தொடர்பு ஏற்படுத்தி மென்பொருளை எழுதி கொண்டிருந்தார்கள்.” [16]

டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஒரு வழிமுறையை இந்திய மென்பொருள் துறைக்கு காட்டியது.  அரசு நிர்வகிக்கூடிய மென்பொருள் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்கும் முயற்சிகளை விட்டலின் கீழ் இருந்த அரசு மின்னதுத்துறை மேற்கொண்டது. அவை தன்னாட்சி அதிகாரத்துடன், அரசின் மேற்பாற்வையில் இயங்கும். அலைக்கற்றை பிரச்சனையை தீர்ப்பதற்காக எல்லா நிறுவனங்களின் அலைக்கற்றை தேவைகளையும் மின்னனுத்துறையே ஒருங்கு இணைத்து, VSNLக்கு முன்தொகை தந்து,  பூங்காக்களில் எர்த் ஸ்டேஷன்களை நிறுவி, அதிவேக தகவல் தொடர்பை உறுதிசெய்யும். 

இந்த காலகட்டத்தில்தான் மென்பொருள் துறையும் அரசிடம் வரி சலுகைகள் உள்ளிட்ட பொருளியல் சலுகைகளை எதிர்பார்த்து லாபி செய்தது. விட்டல் தன் சகாக்களிடம் சலுகைகள் தர சொல்லி அழுத்தம்  தந்தார். ஆகஸ்ட் 1990 நடந்த கூட்டத்தில், அரசின் நிதித்துறை செயலர் பிம்லால் ஜலன் மென்பொருள் துறைக்கு ஒரு இலக்கு வைத்தார்.  அடுத்த ஆண்டு $400 மில்லியன் ஏற்றுமதி செய்வீர்களா ? என்று கேள்வி எழுப்பினார். அந்த வருட ஏற்றுமதியைவிட கிட்டத்தட்ட அது நான்கு மடங்கு. விட்டல் ஜலானிடம் இலக்கை அடைவோம் என்றார். “நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். கூட்டத்தில் இருந்து வெளியே வந்தபின், விட்டல் என்ன செய்துவிட்டீர்கள்? என்று கேட்டேன்.” ராய் பால் சொன்னார்.

NASSCOM இல் உறுப்பினராக இருந்த மென்பொருள் நிறுவனங்களுக்கு தான் ஒத்து கொண்ட இலக்கை விட்டல் பகிர்ந்தபோது, அவர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள். “ஆனால் அவர்களுக்கு நான் அக்பர், பீர்பால் மற்றும் பறக்கும் குதிரை கதையை நினைவு படுத்தினேன்.” என்றார் விட்டல். “அக்பர் பீர்பாலின்மீது கோபத்தில் இருந்தார். பீர்பால் ஒரு பறக்கும் குதிரையை கண்டுபிடித்தால் மட்டுமே பீர்பாலின் தலை தப்பும் என்று எச்சரித்தார். பீர்பால் ஏற்று கொண்டார். ஏன் ஒத்து கொண்டார் என்றால் மறுநாள் என்ன நடக்கும் என்று யாருக்கு தெரியும் என்றார் பீர்பால் – பேரரசர் மறந்துபோகலாம் அல்லது பீர்பால் உண்மையிலே பறக்கும் குதிரையை கண்டுபிடிக்கலாம். என்னுடைய எண்ணமும் அதுதான். மென்பொருள் துறை சில சலுகைகளை எதிர்பார்க்கிறது. அதை நாம் பெற்றுவிட்டோம்.”

மென்பொருள் பூங்காக்களில் இருக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கணினிகளை தீர்வை இல்லாமலும், அரசாங்க முன் அனுமதி இல்லாமலும் இறக்குமதி செய்து கொள்ளலாம். லாபத்திற்கு வரி சலுகை உண்டு. மென்பொருள் துறையின் தாராளமயமாக்கல் துவங்கியது.

பிறகு 1991 ஆம் ஆண்டின் சீர்திருத்தங்கள் மென்பொருள் துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றது. இந்திய ரூபாயை டாலருக்கு (மற்ற வெளிநாட்டு பணத்திற்கும்) அப்போதைய சந்தை மதிப்பிற்கு ஏற்ப மாற்றி கொள்ளலாம் என்பது வெளிநாட்டு செயல்பாடுகளை எளிதாக்கியது.  வெளிநாட்டிற்கு செல்வதும், வெளிநாட்டில் அலுவலகங்கள் திறப்பதும் எளிதாகியது. மென்பொருள் நிறுவனங்கள் பங்கு சந்தையில் முதல் திரட்டுவதற்கு, சந்தை சீர்திருத்தங்கள் மிகவும் உதவின.   1991 ஆம் ஆண்டிற்கு முன்பு, முதலீட்டை நிர்வகிக்கும் அரசாங்க அலுவலர் ஒரு நிறுவனத்தின் IPO பங்கின் விலையை நிர்ணயிப்பார்.

“நிறுவனத்தின் பங்கு என்ன விலையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று அந்த அலுவலர் தீர்மானிப்பார்.” 2006ஆம் ஆண்டு யேல் பல்கலையில் ஒரு பேட்டியில் மூர்த்தி தெரிவித்தார். “அந்த அலுவலருக்கு பங்கு சந்தைகள் பற்றி எதுவுமே தெரியாது. உங்களுடைய par valueவிற்கு மேலே அவர் பங்குகளை பட்டியலிட ஒத்து கொள்ளவே மாட்டார்.”[17]

ஜூன் 1993 அரசாங்கம் விதிகளை மாற்றிய பின்பு, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இரண்டாவது மென்பொருள் நிறுவனம் இன்ஃபோசிஸ்.[18]

பங்கு சந்தையில் பட்டியலிப்பட்ட போது அதற்கு கிடைத்த வரவேற்பு மூர்த்தியை ஆரம்பத்தில் வருத்தப்பட வைத்தது. “பெரும்பாலான பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மென்பொருள் பற்றி கேள்விப்பட்டது இல்லை.” மூர்த்தி தொடர்ந்தார். “வங்கிகளுக்கும் மென்பொருள் புரியவில்லை.” பங்குகளை விற்பது கடினமாக இருந்தது. “நண்பர்களும் உறவினர்களுக்கும்” என்று ஒதுக்கிய பங்கு கோட்டாவையே விற்பது பெரும்பாடாக இருந்தது. “நான் விற்க விரும்பிய பெரும்பாலான உயர்-நடுத்தர வர்க்க நண்பர்களும் உறவினர்களும் சந்தேகத்தோடு பார்த்தார்கள். எக்கச்சக்க கேள்விகளை கேட்டார்கள். பங்கின் வரவை குறித்து கேரண்டி கேட்டார்கள்” மூர்த்தி சொன்னார். “கடைசியாக, நண்பர்களிலும், உறவினர்களிலும் ஒருவர் கூட பங்கை வாங்கவில்லை.” 

இந்திய பங்குசந்தை முதலீட்டாளர்கள் அவநம்பிக்கையோடு இருந்தாலும், இன்ஃபோசிஸ் $4.4 மில்லியன் டாலர்கள் முதலீட்டை திரட்டியது. இதற்கு காரணம்: வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருகை. அதை சாத்தியமாக்கிய தாராளாமயமாக்கல் சீர்திருத்தங்கள். இந்திய சந்தையில் உற்சாகத்தோடு பங்குபெற்ற முதல் மதிக்கத்தக்க முதலீட்டு நிறுவனம் மார்கன் ஸ்டேன்லி அசெட் மெனேஜ்மெண்ட். அவர்கள் இன்ஃபோசிஸை நம்பி முதலீடு செய்தார்கள். “அவர்கள் அமெரிக்காவில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு இன்ஃபோசிஸ்ஸின் ஆரம்பகால வளர்ச்சியில் பெரும் பங்கு உண்டு. ” என்றார் நீலகேனி.  

அமெரிக்காவில் நிகழ்ந்த சில மாற்றங்கள் மீண்டும் இன்ஃபோசிஸ்ஸின் வளர்ச்சிக்கு உதவியது. சரியான காலகட்டம் என்று சொல்ல வேண்டும். 1990 ஆம் ஆண்டு, அமெரிக்க அதிபர் ஜார்ஜ் H.W. புஷ் குடியேற்ற சட்டத்தில் கையெழுத்திட்டார். அது H-1B விசா திட்டத்திற்கு வழிவகுத்தது. அமெரிக்காவில் அதிவேகமாக வளரும் சிறப்பு திறன் தேவைப்படும் சில துறைகளில் (உயர் தொழில்நுட்ப துறை, ஆய்வு, கணினி நிரல் எழுத்து ) ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை தீர்க்க H-1B விசா திட்டம் செயல்படுத்தப்பட்டது. 

1970களிலும், 1980களிலும் இருந்த மந்த நிலை நீங்கி அமெரிக்க பொருளாதாரமும் வளர்ச்சி அடைய துவங்கியது. அமெரிக்க நிறுவனங்கள் பெரிய அளவில் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்து, தங்கள் செயல்திறனை பெருக்கியது வளர்ச்சிக்கு காரணம். இன்ஃபோசிஸ்ஸின் சந்தை அதிவேக வளர்ச்சி அடைந்தது. அதன் பங்கு மதிப்பும் உயர்ந்தது. பங்கு சந்தையில் பட்டியலிட்டதன் (IPO) மூலம் இன்ஃபோசிஸ் திரட்டிய செல்வத்தின் பெரும்பகுதி பெங்களூர் அலுவலக வளாகத்தின் கட்டமைப்பிற்கு செலவிட்டார்கள்.

தாராளமயக்கலின் பின்பும் பல ஆண்டுகளுக்கு இந்தியா தேவைக்கு  ஏற்ப கணினித்துறை பொறியாளர் பட்டதாரிகளை உருவாக்கவில்லை. இந்த பிரச்சனையை தீர்க்க, இன்ஃபோசிஸ் நேரடியாகவே கல்லூரிகளுடன் இணைந்து கணினித்துறை மற்றும் மின்னனுத்துறையை சாராத மற்ற பொறியியல் துறைகளை சேர்ந்தவர்களுக்கும்  “கற்றல் தேர்வு” முறையை அறிமுகப்படுத்தியது. அந்த தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உறைவிடத்துடன் கூடிய 32 வார கடுமையான பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

இந்த காலகட்டத்தில், இன்ஃபோசிஸ் தங்கள் கட்டமைப்பை பெருக்குவதில் பெரிய அளவிற்கு கவனம் செலுத்தினார்கள். அவர்கள் செய்த ஒரு புகழ்பெற்ற விஷயம் – ஊழியர்களுக்க்கான பங்கு ஆப்ஷன்களை தருதல் (ESOP). (அந்த பங்குகளை உடனடியாக விற்க முடியாது. முதல் வருடம் கழித்து 25%, பின்பு மாத மாதம் ஒரு பகுதி என நான்கு வருடங்களில் விற்றுக்கொள்ளலாம்.) பாய் தொடர்ந்தார், “இன்ஃபோசிஸ்ஸில் வேலை செய்த டிரைவர்கள்கூட அவர்களின் பங்கு ஆப்ஷன்கள் மூலம் லட்சாதிபதிகள் ஆன கதைகள் உண்டு. அவையெல்லாம் உண்மைதான்.”

இன்ஃபோசிஸ் போன்ற ஒரு தகவல் தொழில்நுட்ப துறையில் ஒரு வேலை வாங்க வேண்டும் என்பது நிறைய இளைஞர்களின் கனவாக மாறியது. தாராளமயாக்கலால் நிறைய தனியார் பொறியியல் கல்லூரிகளும் காளான்போல பெருகின. “அரசுகள் தாராளாவாத சிந்தனையை கொண்டிருந்தன. குறிப்பாக தென்மாநில அரசுகள். அவை பெரிய அளவில் பொறியியல் கல்லூரிகளை திறந்ததன் மூலம், நாட்டின் பொறியாளர்கள் எண்ணிக்கை 1990களுக்கு பிறகு பலமடங்கு பெருகியது.” நீலகேனி சொன்னார்.[19]

2000 ஆம் ஆண்டு முடிவில் இன்ஃபோசிஸ்ஸிற்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. கணினியில் இடத்தை சேமித்து அதன் மூலம் செலவை குறைப்பதற்காக, பல நிரல்கள் ஆண்டுகளை நான்கு எண்களாக சேமிக்காமல், சுருக்கி இரண்டு எண்களாக சேமித்தன. (உதா: 1-1-1985 என்ற தேதி 1-1-85 என்று சேமிக்கப்படும். கணினி உருவான காலங்களில் கணினி மின்பொருட்கள் மிக விலை உயர்ந்தவை. மனிதன் நிலவிற்கு சென்றபோது நாசாவிடம் இருந்த மொத்த கணினித்திறனை (செயல்திறனை) விட இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் கணினி செயல்திறனும், சேமிப்புதிறனும் அதிகமாக உள்ளது!!) 1990களின் இறுதியில், ஒரு சிக்கல் எழுந்தது. 2000 என்ற ஆண்டை, “00” என்று சேமிக்கும்போது, கணினி நிரல்கள் அதை 1900 என்று புரிந்து கொள்ளும். டிசம்பர் 31, 1999 ஆம் ஆண்டு இரவு முடிந்து 2000 ஆம் ஆண்டு பிறக்கும்போது, கணினிகள் ஆண்டுகளை தவறாக புரிந்து கொண்டு பெரிய சிக்கல்கள் ஏற்படும் என்று வதந்தி பரவியது. இதை Y2K பழுது என்றார்கள். அமெரிக்க பெருநிறுவனங்கள் குறைவான விலையில் இந்த பழுதை நீக்க இந்திய மென்பொருள் நிறுவனங்களை நாடினார்கள். 1998 ஆம் அண்டு இன்ஃபோசிஸின் வருமானத்தில் 22% Y2K பழுது நீக்கும் ஒப்பந்தத்தில் இருந்து வந்தது. [20]

இந்த பழுது பெரிய பிரச்சனையாக எழுந்ததையும், அதை இந்திய மென்பொருள் நிறுவனங்கள் சரிசெய்ததையும், அதன்மூலம் இந்திய மென்பொருள் துறையின் மதிப்பு உயர்ந்ததையும், இன்ஃபோசிஸ் தனக்கு சாதமாக பயன்படுத்த விரும்பியது. அமெரிக்க தொழில்நுட்ப பங்குசந்தையான நாஸ்டாக்கில் தன் பங்குகளை மார்ச் 1999 ஆம் ஆண்டு பட்டியலிட்டது. 2004 ஆம் ஆண்டு, வயர்ட் பத்திரிக்கை ஒரு பெண்ணின் கையில் கணினி நிரல் எழுத்துகளில் இடப்பட்ட மருதாணி அட்டைப்படமாக இருந்தது.  “தொழில்நுட்ப வேலைகள் எப்போதையும் விட அதிகமாக இந்தியாவிற்கு செல்கின்றன. அதில் உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா?” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.

Y2K சிக்கல் தீர்ந்தபிறகு, 2004 ஆம் ஆண்டில் இன்ஃபோசிஸ்சின் வருமானம் $1 பில்லியன் டாலரை தொட்டது. அடுத்த சில ஆண்டுகளில் அது $2 பில்லியன் டாலராக வளர்ந்தது. இன்ஃபோசிஸ், இந்திய சமூகத்தில் ஒரு சாராரைப்போல, உலகமயமாக்கலின் நன்மைகளை அறுவடை செய்தது. 

அந்த காலகட்டத்தின் புகழ்பெற்ற கதைசொல்லியான தாமஸ் ஃபிரிட்மேன் “தி வேர்ல்ட் இஸ் ஃபிளாட்” என்ற புத்தகத்தை 2005இல் எழுதினார். இந்திய பெருநிறுவனங்களில் அந்த புத்தகம் பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த புத்தகத்தில் பெங்களூருவையும், இன்ஃபோசிஸ்ஸையும் புகழ்ந்து எழுதப்பட்டிருந்தது. இன்ஃபோசிஸ்ஸின் தலைமை செயல் அலுவலரான நந்தன் நீலகேனி தட்டையான உலகத்தை ஃபிரிட்மேனுக்கு  காட்சியாக விவரித்தார். “டாம், விளையாட்டுக்களம் சமன்படுத்தப்பட்டுள்ளது” என்றார் நீலகேனி.

இன்ஃபோசிஸின் வரலாறை இந்த சர்வதேச பின்னனியில் வைத்து மீண்டும் நோக்கும்போது சில விஷயங்கள் ஆச்சிரியமாக உள்ளது. 2000ங்களின் மத்தியில் இந்தியாவிற்கு செல்லும் வேலைகளை பற்றி கவலைகள் எழுந்தன. பின்பு யாரும் அதை சொல்வதில்லை.

2007இல் வெளியிடப்பட்ட  ஐபோன், 2008இல் ஆண்டிராய்ட், அதன் பின்பு கிளவுடிற்கு மாற்றம் வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் மாற்றிவிட்டது. (கிளவுட் மாற்றம்: நிறுவனங்கள் தங்களின் கணினி மற்றும் சர்வர்களை தாங்களே நிறுவி, பராமரிக்காமல்  அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் பராமரிக்கும் கணினி பண்ணைகளில் இருந்து தேவைக்கேற்ப கணினித்திறனை பயன்படுத்திக்கொள்ளும் முறை. சொந்தமாக மாடு வைத்திருக்காமல், பால் பண்ணைகளில் இருந்து தேவைக்கேற்ப பால் வாங்கிக்கொள்வது போல. நேரப்-பகிர்வு பெருங்கணினிகள் குறுங்கணினிகளாக மாறி, மீண்டும் ஒருவகையில் நேரப்-பகிர்வு கணிணிகளின் 2.0வாக ஆனதை மேகங்கள் என்று பொருள்படக்கூடிய “கிளவுட்” தொழில்நுட்பம் என்கிறார்கள்.) இப்போது நிறுவனங்களின் தகவல் தொழில்நுட்ப குழு மட்டுமே, இந்தியாவிற்கு வேலைகளை அனுப்பலாமா என்று முடிவெடுக்க முடியாது. நிறைய அமெரிக்க நிறுவனங்கள் அவர்களே தங்கள் கிளைகளை இந்தியாவில் துவங்கி இந்திய மென்பொருள் மனிதத்திறனை பயன்படுத்த துவங்கிவிட்டார்கள்.   

அரசியல் ரீதியிலும் ஃபிரீட்மேனின் “தட்டையான உலகம்” என்ற கருத்து காலவதி ஆகிவிட்டது. 2008இல் ஏற்பட்ட அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி, வேலைகளை குறித்த அமெரிக்கர்களின் பார்வையை மாற்றிவிட்டது. சீனாவிற்கு போய்விட்ட உற்பத்தி துறையின் கடைமட்ட அல்லது அதிக திறன் தேவைப்படாத வேலைகள் குறித்த கவலை அமெரிக்காவில் எழுந்தது. பெங்களூருக்கு போய்விட்ட மேல்மட்ட அல்லது திறன் தேவைப்படும் வேலைகள் குறித்து அந்த அளவிற்கு இன்னும் பிரச்சனை எழவில்லை. அமெரிக்க அரசியல்வாதிகள் தொழில் உற்பத்தி குறித்து மீண்டும் பேச ஆரம்பித்தார்கள். பொருளியல் ரீதியில் பாதிக்கப்பட்ட அமெரிக்க தொழிலாளர்களை கவர்வதற்காக அந்த நிலைப்பாட்டை அரசியல்வாதிகள் எடுத்தார்கள். (ரஸ்ட் பெல்ட் எனப்படும் தொழில் நிறுவனங்கள் நிறைந்திருந்த சில மாகாணங்களை சேர்ந்தவர்கள் அவர்களின் இலக்கு. அங்கிருந்த நிறுவனங்கள் மெல்ல மெல்ல சீனாவிற்கு மாறிவிட்டன.)

எங்களுடைய பேட்டியில், நீலகேனி இப்போது இருக்கும் உலகமயமாக்கலுக்கு எதிரான போக்கை ஆமோதித்தார், “இருப்பினும், மற்ற துறைகளை ஒப்பிடும்போது எங்கள் மென்பொருள் துறை பெரிய அளவிற்கு சிக்கல் இல்லாமல் வெளிவந்தது. ஏனென்றால் சீனாவை நோக்கியே எல்லா தோட்டாக்களும் பாய்வதால், இந்தியா ஓரளவு தப்பித்துள்ளது” என்றார். மாறும் உலக சூழலுக்கு ஏற்ப, இன்ஃபோசிஸ் எந்தெந்த நாடுகளில் இயங்குகிறதோ, அந்த இடங்களில் மென்பொருள் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. 

“அமெரிக்காவில் வேலை உருவாக்கத்தில் இன்ஃபோசிஸ் இப்போது பெரிய பங்களிப்பு ஆற்றுகிறது. இண்டியானாபோலிஸ் போன்ற இடங்களில் நாங்கள் மென்பொருள் பயிற்சி இடங்களை அமைத்திருக்கிறோம். அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களே அங்கெல்லாம் போவதில்லை.” நீலகேனி சொன்னார். 2017இல் இருந்து இன்ஃபோசிஸின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடாத தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். (non-executive chairman). “இன்ஃபோசிஸை நாங்கள் ஒருவகையில் விசா சிக்கலை சமாளிக்கும்படி மாற்றியுள்ளோம். கடந்த இரு வருடங்களில் விசா தேவைப்படாத ஊழியர்கள் – அமெரிக்கர்கள் மற்றும் கிரீன் கார்ட் வைத்திருப்போர் – நிறைய பணிகளுக்கு அமர்த்தியுள்ளோம்.”

ஆனால் இந்த மாற்றத்தால் இந்தியாவில் சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீண்ட காலத்திற்கு, நிறைய இந்திய பொறியாளர்களுக்கு, இன்ஃபோசிஸ் வேலை என்பது உயர்-நடுத்தர வர்க்க வாழ்க்கைக்கான ஒரு நுழைவாயில், வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல ஒரு வாய்ப்பு, இறுதியாக அமெரிக்காவில் கிரீன் கார்ட் விசாவிற்கான ஒரு பாதை. அந்த வழிகள் பெரிய அளவில் அடைபட்டுள்ளன.

பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக உள்ளதால், ஆரம்ப நிலை ஊழியர்களின் சம்பளம் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயரவில்லை. 2005இல் ஒரு பயிற்சி நிலை பொறியாளர்  ₹2.8 லட்சம் வாங்கினார். 15 வருடங்கள் கழித்து அது ₹3.5 லட்சமாகத்தான் உள்ளது. (2005இல் தங்கத்தின் விலையையும், டாலர்-ரூபாய் மதிப்பையும் இன்றைய நிலைமையும் ஒப்பிட்டால் “உண்மையில்” சம்பளம் குறைந்துள்ளது). கூகிள் அமேசான் போன்ற நிறுவனங்களின் இந்திய வருகையும் இளைஞர்களின் பார்வையை மாற்றியுள்ளது. 2000க்கு பிறகு பிறந்த இளைஞர்களுக்கு இன்ஃபோசிஸ் பழைய உலகமாக தெரிகிறது – ஒரேவிதமாக பயிற்சி அளிக்கப்படும் பொறியாளர்கள் வழக்கமான நிரல்களை எழுதுகிறார்கள். இப்போது, “ராக்ஸ்டார் கோடர்ஸ்” எனப்படும் அதிதிறன் நிறைந்த நிரலாளர்கள் மேட்-இன்-இந்தியா யுனிக்கார்ன் நிறவனங்களின் செல்வத்தால் ஈர்க்கப்படுகிறார்கள். [$1 பில்லியன் டாலர் சந்தைமதிப்புள்ள அதிவேகமாக வளரும் ஸ்டார்டப் நிறுவனங்களை “யுனிக்கார்ன்” நிறுவனங்கள் என்கிறார்கள். அவற்றில் சில , பங்குச்சந்தையில் இன்னும் பட்டியஇ இடப்படாதவை. அவை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் போது மேலும் அவற்றின் மதிப்பு உயரும் என்பது பொதுவான கணிப்பு. ஜனவரி 2022 கணக்கின்படி 80 ஸ்டார்டப் நிறுவனங்கள் இந்தியாவில் யுனிக்கார்ன் அந்தஸ்த்தை அடைந்துள்ளது. தமிழகம் இதில் பின்தங்கி உள்ளது. சென்னையில் இருந்து ஒன்று/இரண்டு நிறுவனங்கள் மட்டுமே யுனிக்கார்னாக கருதப்படுகிறது. பெங்களூரு (35), டெல்லி (18), மும்பையில் (11) பெரும்பாலான யுனிக்கார்ன்கள் உள்ளன.] 

ஆனால் இந்தியா இன்னும் தேவையான வேலைகளை உருவாக்கவில்லை. வேலையற்றோர் சதவீதம் 7-8% விகிதமாக உள்ளது. லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளை உள்ளிழுத்துக்கொள்ளும் திறன் இந்தியாவில் மிக சில துறைகளிலேயே உள்ளது. கண்டிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை அதில் ஒன்று. (2019-2020 ஆண்டிற்கான அனைத்திந்திய தொழில்நுட்ப குழுமத்தின் தகவல் ஆய்வின்படி 36% பொறியியல் பட்டதாரிகளுக்கு  வேலை கிடைக்கவில்லை என்கிறது.) [21]

உண்மையான ஒரு பெரிய சிக்கல் எழாமல், இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை தன் அடிப்படையை மாற்றி கொள்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு ஊழியருக்கான வருமானம், கடந்த பத்து வருடங்களாக ஒரே அளவில் உள்ளது. இந்தியாவில் மென்பொருள் துறை தொடர்ந்து சிறப்பாக செயல்படுவதற்கு குறைந்த சம்பளம்  மட்டுமல்ல, ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக 70% சரிந்துள்ளதும் ஒரு காரணம். 

தொழில்நுட்ப சூழல் அதிவேகமாக மாற்றமடையும்போது, இந்தியாவின் பழைய தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் இன்னும் ஆற்ற வேண்டிய பங்குள்ளது என சிலர் நினைக்கிறார்கள். “இன்ஃபோசிஸ், டி.சி.எஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்கள் செய்யும் வேலை காலாவதியாகப்போவதில்லை.” முன்னாள் இன்ஃபோசிஸ் அதிகாரியும், துறை நிபுணருமான பிரகாஷ் செல்லம் சொன்னார். “ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப தேவை அதிகரிக்கும்போது, அதை பராமரிப்பதற்கான தேவையும் அதிகரிக்கும். பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.”

ஷாலினியில் உணவு சாப்பிடபோன அந்த நான்கு பேரும், தங்கள் நிறுவனத்தை விற்கவேண்டாம் என்று எடுத்த முடிவு, ஒரு தலைமுறையே மென்பொருள் துறையில் தொழில்துவங்க ஊக்கப்படுத்தியது. அவர்களுடைய நிறுவனம் அதன் பங்குதாரர்களுக்கு உண்மையான செல்வத்தை ஈட்டித்தந்தது. இந்தியாவின் தகவல்தொழில் நுட்பத்துறையின் மதிப்பை உலகளவில் அதிகரிக்க செய்ததில் பெரும் பங்காற்றியது. இந்தியாவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணித (STEM) கல்விகளில் வலிமையாக இருப்பதற்கு இந்திய மென்பொருள் துறையும், இன்ஃபோசிஸ்ஸும் பெரிய அளவில் பங்களிப்பாற்றி உள்ளன. இன்றைய இளம் பொறியாளர்கள் அவர்களின் தோளில்தான் நின்றுள்ளார்கள்: இப்போதைய யுனிக்கார்ன்கள் தங்களின் வெற்றிக்கு தங்கள் துறையின் முன்னோர்களுக்கு கடன்பட்டுள்ளார்கள். ஏனென்றால், அவர்கள்தான் இந்தியா பாம்பாட்டிகளின் நாடாக அறியப்பட்டபோது உலகத்திற்கான மென்பொருளை எழுதியவர்கள்.    

கட்டுரையின் மூல ஆசிரியர்: வேதிக்கா காண்ட் – மேலாண்மை ஆலோசகர், எழுத்தாளர், வரலாற்றாசிரியர்.  அவருடைய டுவிட்டர் கணக்கு @vedicakant 

நன்றி:

இன்ஃபோசிஸின் கதையையும் தன்னுடயை கதையையும் என்னுடன் பகிர்ந்து கொண்டதற்காக N.R.நாரயண மூர்த்தி அவர்களுக்கு நன்றி. அந்த இரண்டு கதைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளது. நந்தன் நீலகேனி அவர்களுக்கு, திரு.மூர்த்தியை அறிமுகப்படுத்தியதற்கும் என்னுடன் பேச நேரம் ஒதுக்கியதற்கும் என் நன்றிகள். மோகன்தாஸ் பாய், நாகராஜன் விட்டல், கெ.ராய் பால் மற்றும் பிரகாஷ் செல்லம் ஆகியோருக்கும் தங்கள் பார்வைகளை பகிர்ந்து கொண்டதற்காக நன்றிகள். இந்த கட்டுரையை எழுதுவதற்கு அவை உதவின. மனீஷ் ஷபர்வால் இந்த கட்டுரையின் முன்வரைவை படித்ததற்காகவும், திருத்தங்கள் சொன்னதற்காகவும் நன்றிகள்.   

பல ஆண்டுகளாக சௌரப் ஶ்ரீவத்சவாவுடன் அவருடைய தொழில்முனைவர் பயணத்தை பற்றி உரையாடி இருக்கிறேன். இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை குறித்தும். அந்த உரையாடல்களை தொகுக்க வேண்டும் என்று விரும்பினேன். இந்த துறையின் ஆரம்பகாலம் குறித்து பேசியதற்கும், அவற்றின் சூழலை விளக்கியதற்கும், என்னுடன் நீண்ட உரையாடல் நடத்தியதற்கும் என் நன்றிகள்.   

அருண் மோகன் சுகுமாரின் தூண்டுதல் இல்லாமல் நான் இன்ஃபோசிஸ் குறித்து எழுதியிருக்க மாட்டேன். தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்தி, கட்டுரையின் வடிவை குறித்து உரையாடி, முன்வரைவை படித்து திருத்தங்கள் சொன்னதற்காகவும் அருணிற்கு நன்றிகள்.

[1] அவுட்சோர்ஸிங் என்பது – ஒப்பந்தம் தந்த நிறுவனத்தின் மென்பொருளை மாற்றியமைப்பதாக இருக்கலாம், இல்லை ஒப்பந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மென்பொருளை மாற்றியமைப்பதாகவும் இருக்கலாம்.

[2] K.S. Gopalakrishnan, Indian IT and ITeS journey: Liberalization and Beyond”.

[3] NASSCOM is the Indian IT industry’s trade association.

[4] D. Rodrik, A. Subramanian, “From Hindu Growth to Productivity Surge: The Mystery of the Indian Growth Transition”. 2004.

[5] திட்ட கமிஷன் உறுப்பினர் மற்றும் இந்திய புள்ளியல் கழகத்தின் நிறுவனர். 

[6]  இந்திய அணுஆய்வு திட்டத்தின் தந்தை. Tata Institute of Fundamental Research (TIFR) நிறுவனர்களில் ஒருவர்.

[7] இந்திய ரயில்வேதான் IBM நிறுவனத்தின் பெரிய இந்திய வாடிக்கையாளர். தினேஷ் சர்மா எழுதிய The Outsourcer: The Story of India’s IT Revolution, p 52 (2015) புத்தகத்தில் இருந்து.

[8] சர்மா, The Outsourcer, p 29.

[9] தங்கள் மேஜையின் மீதிருந்த  திரையின் மூலன் தொலைவில் இருந்த ஒரு பெருங்கணினியை பலர் ஒரே சமயம் பயன்படுத்துவதை TSS என்கிறார்கள். 1950 களில் பெரிய நிறுவனங்கள் தங்களில் எல்லா ஊழியர்களுக்கும் கணினியை தர முடியவில்லை. (அன்று கணினி விலை உயர்ந்தவை). TSS இந்த சிக்கலை தீர்த்தது. TSS இன்று கிளவுட் கம்ப்யூட்டிங் என்று சொல்லப்படுவதின் அடிப்படை. 

[10] 1977இல் பதவிக்கு வந்த ஜனதா அரசாங்கம், ஜார்ஜ் பெர்ணாடஸ்ஸை தொழில்துறை  அமைச்சராக நியமித்தது.1960 களில் கணினிமயமாக்கலுக்கு எதிராக பம்பாயில் போராடிய தொழிற்சங்கவாதியாக இருந்தார்.  1973இல் வந்த FERA சட்ட திருத்தம், 40 சதவீதத்திற்கும் மேல் வெளிநாட்டு முதலீட்டில் இயங்கிய நிறுவனங்கள் மத்திய ரிசர்வ் வங்கியின் இன் ஒப்புதலை மீண்டும் பெறவேண்டும் என்று சொன்னது. இந்த சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க IBM பெர்ணாடஸ்ஸை அனுகியது தவறாகிப்போனது. பெர்ணாடஸ் IBMஐ “திமிர் பிடித்தவர்கள்” என்று பின்பு சொன்னார். நிறுவனத்தின் பங்குகளை உள்ளூர் நிறுவனத்திற்கு விற்கும்படி பிரெஞ்ச் அதிபர் ஜெனரல் சார்ல்ஸ் டி கால் சொன்னதைகூட அவர்கள் ஏற்க மறுத்துவிட்டோம் என்றார்கள். “உங்களுக்கு ஜெனரல் வேண்டுமானால் அடிபணிவார், நான் அடிபணிய முடியாது. வெளியே போங்கள்” – சர்மா, The Outsourcer, p. 68

[11] LexisNexis என்று இன்று அழைக்கபடும் LEXIS சட்ட, வணிக நிறுவனங்களுக்கும், நூலகங்களுக்கும் ஆன  முதல் மின்தகவல் சேமிப்பு நிறுவனம். நீதிமன்ற தீர்ப்புகளை எளிதாக தேடிக்கொள்ள உதவியது. 

[12] நாராயண மூர்த்தியின் 2019 நவம்பர் ஹார்வேர்ட் மேலாண்மை கழகத்திற்கான பேட்டி. Creating Emerging Markets Oral History Collection.

[13] பட்னி கோபமடைந்தார். “மூர்த்தி பட்னி நிறுவனத்தில் இருந்து டிசம்பர் 1980 விலகினார். நிரல் எழுத்தாளர்கள் அவரை பின்தொடர்ந்தார்கள். மொத்த மென்பொருள் அணியே விலகியது எங்களை மிகவும் பாதித்தது…இந்த மொத்த நிகழ்வும் நரேந்திர பட்னிக்கு கடும் கசப்பை ஏற்படுத்தியது. அவர் மூர்த்தியின் செயல் அறம் இல்லை என்றார். பட்னியின் வாடிக்கையாளராக இருந்த DBC, இன்ஃபோசிஸின் முதல் வாடிக்கையாளாராக ஆனது, பட்னியின் கோபத்தை மேலும் அதிகப்படுத்தியது. சர்மா, The Outsourcer, p 136

[14] 1984இல் சொந்தமான Data General கணினியை வாங்கினார்கள்.

[15] A. Kohli, “Politics of Economic Liberalization in India,” World Development, vol. 17, No. 3, 1989, pp. 305-328.

[16] நந்தன் நீலகேனியின் “oral history for the Computer History Museum” பேட்டி.

[17] யேல் பல்கலை கழகத்தில் நாராயணா மூர்த்தியின் பேட்டி 2006.

[18] 1992இல் Mastek நிறுவனம் முதலில் IPO போனது.

[19] நீலகேனியின் “oral history for the Computer History Museum” பேட்டி.

[20] நந்தன் நீலகேனியின் Rediff.com பேட்டி – 20 மார்ச் 1999.

[21] AICTE தளத்தில் உள்ள “மாணவர்கள் தேர்ச்சி” விகிதமும் “வேலை கிடைத்தோர்” விகதத்தையும் வைத்து இந்த எண்ணிக்கையை கணக்கிட்டேன்.

Essays

நான் என்ன செய்து கொண்டிருந்தேன்.

Tamil translation of Paul Graham’s essay “What I Worked On“.

Paul Graham is the founder of Y Combinator (YC). YC is an American technology startup accelerator launched in March 2005.[1] It has been used to launch more than 3,000 companies, including  StripeAirbnbCruisePagerDutyDoorDash, CoinbaseInstacart,  DropboxTwitchFlightfox, and Reddit.[3] The combined valuation of the top YC companies was more than $300 billion by January 2021. [From Wikipedia.]

Paulgraham 240x320.jpg

Author: Paul Graham

Translated by: Viswanathan Mahalingam

ஆசிரியர்: பால் கிரஹாம்.

மொழியாக்கம்: விஸ்வநாதன் மகாலிங்கம்

மொழிபெயர்ப்பு பிரதியை வாசித்து, பிழைகளை திருத்தியதற்கு நன்றி: மகேந்திரராஜன் சந்திரசேகரன், ஜெகதீஷ் குமார்

பெப்ரவரி 2021

கல்லூரியில் சேர்வதற்கு முன்னால், பள்ளிக்கு வெளியே, நான் செய்தது இரண்டு காரியங்கள் – எழுத்து மற்றும் நிரல் எழுத்து (programming). நான் கட்டுரைகள் எழுதவில்லை. ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் அன்று முயற்சித்தது போல சிறுகதைகள் தான் எழுதினேன். என் கதைகள் நன்றாக இல்லை. அவற்றில் கதையே இல்லை. என் கற்பனையில் உருவாக்கிய ஆழமான உணர்ச்சி மிகுந்த கதாபாத்திரங்கள் தான் இருந்தன. 

எங்கள் பள்ளி மாவட்டம் “தகவல் பகுப்பிற்காக” பயன்படுத்திய IBM 1401 மெயின்ஃபிரேம் பெரும்கணினியில் (mainframe) தான் என் ஆரம்பகால நிரல்களை எழுத முயன்றேன். ஒன்பதாம் வகுப்பில் – என் பதிமூன்று பதினான்கு வயதில். பள்ளி மாவட்டத்தின் IBM 1401 எங்கள் நடுநிலைப் பள்ளியின் தாழ்வறையில் இருந்தது. என் நண்பன் ரிச் ட்ரேவ்ஸும் நானும்  அதைப் பயன்படுத்த அனுமதி பெற்றோம். அந்தத் தாழ்வறை ஒரு ஜேம்ஸ்பாண்ட் திரைப்பட வில்லனின் சிறிய கிடங்கு போல இருக்கும் – வேற்றுலக இயந்திரங்கள் – CPU, தகவல் சேமிப்பான்கள் (disk drives), பதிப்பான்கள் (printers), அட்டை படிப்பான்கள்(card readers) — பளிச்சிடும் ஒளிவெள்ளத்தில் ஒரு மேடையில் அமைந்திருக்கும்.

நாங்கள் ஃபோர்ட்ரான் (Fortran)  நிரல் மொழியின் முதல் வடிவைப் பயன்படுத்தினோம். உங்கள் நிரல்களை நீங்கள் துளை அட்டைகளில் (punch cards) எழுதி, அவற்றை வரிசையாக அட்டை படிப்பான்களில் அடுக்கி, ஒரு பட்டனை அழுத்தினால், பெரும்கணினியின் மெமரியில் நிரல் பதிந்து ஓடத்துவங்கும். பெரும் ஓசையிடும் பிரிண்டரில் எதையாவது பதிப்பதுதான் அந்த நிரலின் நோக்கம்.

IBM 1401 என்னை குழப்பியது. அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. இப்பொழுது யோசித்தால் பெரிதாக ஒன்றும் செய்திருக்க முடியாதுதான். நிரல்களுக்கு தகவல்களை உள்ளிடுவதற்கு (input) ஒரே வழி துளை அட்டைகள்தான். துளை அட்டைகளில் சேமிப்பதற்கான எந்த தகவலும் என்னிடம் இல்லை. உள்ளீடுகள் எதுவும் தேவையற்ற நிரல்களை எழுதலாம் – பை(pi) யின் தோராயமான மதிப்பைக் கணக்கிடுவதைப்போல. ஆனால் சுவாரஸ்மாக ஏதாவது செய்யும் அளவிற்கு எனக்கு கணிதம் தெரியவில்லை. அதனால் நான் எழுதிய எந்த நிரலும் என் நினைவில் இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இல்லை. எனக்குத் தெளிவாக நினைவிருப்பது நிரல்கள் முடிவில்லாமல் ஓடக்கூடும் என்பதுதான். ஏனென்றால் என் நிரல் ஒன்று முடிவில்லாமல் ஓடியது. அது ஒரு தொழில்நுட்பப் பிழை மட்டுமல்ல சமூகப்பிழையும்கூட என அந்தத் தகவல் மையத்தின் மேலாளரின் முகம் காட்டியது.    

குறுங்கணினிகள் (microcomputers) வந்தபோது அனைத்தும் மாறியது. இப்பொழுது உங்கள் மேஜையிலே உங்களுக்கே உங்களுக்கான கணினி இருக்கிறது. அது ஓடிக்கொண்டிருக்கும் போதே உங்கள் விரல் அசைவுகளால் அதை இயக்கலாம். துளை அட்டைகளின் காலம் முடிவிற்கு வந்தது. [1]

என் நண்பர்களில் முதல் குறுங்கணினி வைத்திருந்தவன் அவனே அதை கட்டமைத்திருந்தான். ஹீத்கிட் (HeathKit) குறுங்கணினியின் பாகங்களை விற்றது. அவன் தன் கணினியின் முன் அமர்ந்து, அதில் நிரல்கள் எழுதுவதை நான் பேரார்வத்தோடும், பொறாமையோடும் பார்த்தது என் நினைவில் நிற்கிறது. 

கணினிகள் அன்று விலை உயர்ந்தவை. பல வருட நச்சரிப்பிற்குப்பின் என்னுடைய கணினியை – TRS-80 – அப்பா 1980இல் வாங்கித்தந்தார். அன்றைய கெத்து கணினி என்பது – ஆப்பிள் II, ஆனால் TRS-80 ஒன்றும் மோசமில்லை. அதில்தான் நான் உண்மையில் நிரல்களை எழுதத்துவங்கினேன். எளிய விளையாட்டுகளை எழுதினேன். என்னுடைய பொம்மை ஏவுகணைகள் எவ்வளவு உயரம் பறக்கும் என்பதை கணிக்கக்கூடிய நிரல்கள், என் அப்பா எழுதிய ஒரு மென்பொருள். இரண்டே பக்கங்கள் மட்டுமே சேமிக்ககூடிய அளவுதான் மெமரி இருக்கும். ஒரு நேரத்தில் இரண்டு பக்கங்கள் எழுதிய உடன் அவர் பதிப்பானில் பதிப்பார். பின்பு கணினியில் எழுதியவற்றை அழித்துவிட்டு மீண்டும் அடுத்த பக்கங்களை எழுதுவார். ஆனால் அன்று அது டைப்ரைட்டரை விட பல மடங்கு மேலானதாக இருந்தது.

எனக்கு நிரல் எழுதுதல் பிடித்திருந்தாலும், அதைப்பற்றி கல்லூரியில் படிப்பது என் திட்டம் இல்லை. கல்லூரியில் நான் படிக்க தேர்ந்தெடுத்தது தத்துவம். நிரல்களை விட சிறப்பானதாக எனக்கு தோன்றியது. என்னுடைய எளிய இளமனதிற்கு தத்துவம் வாழ்வின் உண்மைகளை பற்றிய கல்வியாக தோன்றியது. மற்ற அனைத்தும் சாதாரண அறிவுத்துறைகளாக இருந்தன. கல்லூரிக்கு சென்ற பின்பே மற்ற அனைத்து துறைகளும் அவற்றின் சிந்தனைகளும் ஏகப்பட்ட வெளியை எடுத்துக்கொண்டன – தத்துவத்திற்கு மட்டுமே உரியது என்பதன் பரப்பு மிக சிறிதாகிவிட்டிருந்தது. வேறு யாரும் தொடாத விளிம்பு நிலைகள் மட்டுமே தத்துவத்திடம் இருந்தது.

பதினெட்டு வயதில் எனக்கு இதை சரியாக சொல்ல தெரியவில்லை. தொடர்ந்து தத்துவ பாடங்களை எடுத்துப் படித்தேன். அவை என் ஆர்வத்தை தொடர்ந்து சோதித்தன. அதனால் நான் செயற்கை அறிவிற்கு (AI) என் கவனத்தை திருப்பினேன். 

செயற்கை அறிவு 1980களின் மத்தியில் ஓரளவு பிரபலமானது. இரண்டு விஷயங்கள் அந்த தளத்தை நான் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தன:  தி மூன் இஸ் எ ஹார்ஷ் மிஸ்டிரஸ் – ஹென்லெயினின் நாவலில் வரும் மைக் என்னும் அறிவாளியான கணினி மற்றும் பிபிஸ் (PBS) டாக்குமெண்டரியில்  டெர்ரி வின்னொகிராட் பயன்படுத்தும் SHRDLU. நாவலை நான் மீண்டும் படிக்கவில்லை. அதனால் மீள்வாசிப்பில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. ஆனால் அன்று படித்தபோது அது தன் உலகிற்கு என்னை முழுதும் இழுத்துக்கொண்டது. வின்னோகிராட் SHRDLU வை பயன்படுத்தவதை பார்த்தபோது, மேலும் சில வருடங்களிலிலே, நான் புனைவில் படித்த மைக் பயன்பாட்டிற்கு வந்துவிடும்  என்று தோன்றியது. SHRDLU க்கு மேலும் சில சொற்களை சொல்லித்தரவேண்டும். அவ்வளவுதான்.

கார்னல் பல்கலையில் அப்போது செயற்கை நுண்ணறிவைப் பற்றிய வகுப்புகள் எதுவுமில்லை. முதுகலையில் கூட. அதனால் நானே கற்றுக் கொள்ளத் துவங்கினேன். லிஸ்ப் படிக்கவேண்டியிருந்தது. ஏனென்றால் செயற்கை நுண்ணறிவின் அன்றைய நிரல் மொழி லிஸ்ப். அன்று பயன்பாட்டில் இருந்த நிரல் மொழிகள் எளியவை. நிரல் எழுத்தாளார்களின் ஐடியாக்களும் எளிமையானதுதான். கார்னல் பல்கலையில் அன்று எல்லோரும் பயன்படுத்திய நிரல் மொழி – பாஸ்கல் மொழி போல இருந்த PL/I. மற்ற இடங்களிலும் PL/I த்தான் பயன்படுத்தினார்கள். நிரல்களைப்பற்றிய என் புரிதல்களை லிஸ்ப் விரிவாக்கியது. புதிய எல்லைகளை நான் தெரிந்து கொள்ள மேலும் வெகுகாலம் ஆனது. கல்லூரியில் இதைத்தான் செய்ய வேண்டும் என்று தோன்றியது. அடுத்த சில வருடங்கள் எனக்கு சிறப்பானதாக இருந்தன. எனக்கு என்ன செய்யவேண்டும் என்று தெளிவாகியது. 

என்னுடைய இளங்கலை ஆய்விற்கு SHRDLU வை பகுத்துப் புரிந்து கொண்டேன். நான் மிகவும் விரும்பிச் செய்த செயல் அது. அந்த நிரல் எனக்குப் பிடிக்கக் காரணம் நான் அறிவின் அடிவாரத்தில் ஏறத் துவங்கிவிட்டேன் என்ற எண்ணம்தான்.

கார்னல் பல்கலையில் நான் சேர்ந்த படிப்பு எந்த குறிப்பிட்ட துறையையும் சேர்ந்தது இல்லை. நீங்கள் எந்த பாடத்தையும் படிக்கலாம். நீங்கள் எந்த பட்டத்தை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். “செயற்கை அறிவு” என்று நான் போட்டு கொண்டேன். அடைப்பு குறிகளையும் (“ “) சேர்த்தே என் பட்டத்தில் போட்டிருந்ததை பார்த்த போது கடுப்பானேன். அடைப்புக்குறிகள் என்னை தொந்தரவு செய்தன. ஆனால் அது மிகச்சரியானது என்று பின்னால் நான் கண்டு கொண்ட காரணங்கள் உணர்த்தின. 

நான் மூன்று பல்கலை கழகங்களுக்கு விண்ணப்பித்து இருந்தேன்: எம்.ஐ.டி மற்றும் யேல் – செயற்கை அறிவிற்கு அவை புகழ்பெற்றிருந்தன. மூன்றாவது ஹார்வேர்ட் – என் நண்பன் ரிச் ட்ரேவ்ஸ் அங்கு சேர்ந்திருந்தான். மேலும் நான் நகலெடுத்திருந்த SHRDLUவின் பகுப்பானை (parser) கண்டுபிடித்திருந்த பில் வுட்ஸ் ஹார்வேர்ட்டில் இருந்தார். ஹார்வேர்ட் மட்டுமே என் விண்ணப்பத்தை ஏற்றது. அதனால் நான் அங்கேதான் சேர்ந்தேன்.

எனக்கு எப்போழுது தோன்றியது என்று தெரியவில்லை, அல்லது ஏதாவது ஒரு குறிப்பிட்ட நிகழ்வா என்றும் நினைவில் இல்லை. ஆனால் என்னுடைய முதுகலைப்படிப்பின் முதல் வருடத்தில், அன்றைய செயற்கை அறிவு என்பது ஒரு ஏமாற்று என்பதை நான் உணர்ந்தேன். நான் எந்த செயற்கை அறிவைக் குறிப்பிடுகிறேன் என்றால் – “ஒரு நாய் தன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறது” என்ற சொற்றொடரை பகுத்து, ஏதோ ஒரு முறைமையின் வடிவில் தன் அறிதல்களில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளும் நிரல்களைப்பற்றி.

இந்த நிரல்கள் உண்மையில் என்ன காட்டியது என்றால் – இயற்கை மொழியில் ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரு முறைமையான மொழி. இயற்கை மொழியை உண்மையிலே புரிந்து கொள்வதற்கும், இந்த நிரல்கள் உண்மையிலே செய்தவற்றிற்கும் ஒரு நிரப்பவே முடியாத இடைவெளி உள்ளது என்பது தெளிவாகியது. அது SHRDLU க்கு மேலும் சில சொற்களை சொல்லித்தருவது மட்டுமல்ல. செயற்கை அறிவை உருவாக்கிக்கொண்டிருந்த மொத்த வழிகளும் – தகவல் கட்டமைப்பை உருவாக்குதல், சில கொள்கைகளை வடிவமைத்தல் – தவறென்று தோன்றியது. அதன் மோசமான நிலை – நிறைய ஆய்வுகளையும், பல்வேறு பிளாஸ்திரிகளை போடுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கினவே தவிர, மைக்கை ஒருநாளும் உருவாக்கப்போவதில்லை என்று தெளிவாக்கியது. 

என்னுடைய தோல்வி அடைந்த திட்டத்தில் எது மிஞ்சும் என பார்த்தேன். லிஸ்ப் மட்டும் இருந்தது. அன்று மக்கள் அதை பொருட்படுத்தியது செயற்கை அறிவிற்காகத்தான். லிஸ்பில் வேலை செய்த அனுபவத்திலிருந்து, அது தன்னளவிலேயே பயனுள்ள நிரல்மொழி என்பதும் செயற்கை அறிவைத்தவிர மற்றவற்றிற்கும் பயன்படும் என்றும் தெரிந்தது. அதனால் லிஸ்ப்பில் கவனத்தை திருப்பினேன். உண்மையில் லிஸ்ப்பை பற்றி ஒரு புத்தகம் எழுத தீர்மானித்தேன். லிஸ்ப் பற்றிய என் அறிவு மிக குறைவானது. லிஸ்ப் ஹாக்கிங் பற்றிய புத்தகம் என்ற எண்ணமே எனக்கு திகிலை ஏற்படுத்தியது. ஆனால் ஒன்றை கற்றுக்கொள்வதற்கு அதைப்பற்றிய புத்தகம் எழுதுவது மிகச்சிறந்த வழி. “ஆன் லிஸ்ப்” (On Lisp) என்ற அந்த புத்தகம் 1993 வரை வெளிவரவில்லை. ஆனால் அதன் பெரும்பகுதியை நான் முதுகலை கல்வியின் போதே எழுதிவிட்டேன்.

கணினி இயல் என்பது இரண்டு பொருந்தாத பகுதிகளின் கூட்டு — கோட்பாடு (theory) மற்றும் தொழில்நுட்பம் (system). கோட்பாட்டாளர்கள் ஒன்றை நிறுவார்கள், தொழில்நுட்பத்தினர் அவற்றை வடிவமைப்பார்கள். எனக்கு கோட்பாட்டாளர்கள் மீது மிகுந்த மதிப்பிருந்தாலும் – இரண்டில் மதிக்கத்தக்கது கோட்பாடே என்று உள்ளூர குடையும்  ஓர் எண்ணமிருந்தாலும் – எனக்கு தொழில்நுட்ப வடிவமைப்புதான் மிக பிடித்திருந்தது. 

தொழில்நுட்பத்தின் பிரச்சனை என்னவென்றால் அதன் ஆயுள் குறைவு. இன்று நீங்கள் எந்த நிரலை எழுதினாலும், அது எவ்வளவு சிறந்த நிரலாக இருந்தாலும், அதிகபட்சம் சில தசாப்தங்களில் அது காலாவதியாகிவிடும். உங்கள் மென்பொருள் எங்கோ ஒரு அடிக்குறிப்பாக இருக்கலாம். ஆனால் அதை யாரும் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் காலம் செல்லச்செல்ல அது மிக சிறியதாக ஆகும். அந்த துறையின் வரலாற்றில் ஆர்வமுள்ள யாரோ ஒருவர் வேண்டுமானால் அதன் காலத்தில் அது சிறந்ததாக இருந்தது என்று நினைக்கலாம்.

எங்கள் கணினி ஆய்வகத்தில்  தேவைக்கு அதிகமான சில ஜெராக்ஸ் மெஷின்கள் இருந்தன. யாருக்காவது அவை தேவையென்றால் உபயோகப்படுத்தி கொள்ளலாம். எனக்குக்கூட  அவற்றைப் பயன்படுத்தலாம் என்று தோன்றியது. ஆனால் அன்றைய காலத்திற்கே அது மிகவும் மெதுவாக வேலைசெய்தது. அதனால் என்ன பயன்? யாருக்கும் அது தேவைப்படவில்லை. அதனால் அவை குப்பை கூடைக்கு சென்றன. தொழில்நுட்பத்தால் வடிவமைக்கப்பட்டவற்றின் நிலை அதுதான். 

எனக்கு ஏதோ சிலவற்றை உருவாக்க வேண்டும் என்று மட்டும் தோன்றவில்லை. நிலைத்து நிற்கக்கூடிய ஒன்றை உருவாக்கவேண்டும் என்றும் தோன்றியது.

 திருப்தியற்ற இந்த நிலையில், 1988இல் ரிச் டேவிஸை அவன் முதுகலை படித்துக்கொண்டிருந்த CMU பல்கலையில் சந்திக்கச்சென்றேன்.  ஒரு நாள், நான் இளமையில் நிறைய நேரம் செலவழித்த கார்னகி இன்ஸ்டிட்யூட்டிற்கு சென்றேன். ஒரு ஓவியத்தை அன்று பார்த்துக்கொண்டிருந்தபோது மிக அப்பட்டமான ஒரு எண்ணம் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்தச் சுவரில் – நீங்கள் உருவாக்ககூடிய ஒன்று – நீண்ட நாள் நிலைத்து நிற்கக்கூடிய ஒன்று இருந்தது. ஓவியங்கள் அழிவதில்லை. மிகச்சிறந்த ஓவியங்கள் பல நூற்றாண்டுகளை தாண்டியும் நிலைத்து நிற்கக்கூடியன. 

மேலும், நீங்கள் வரையும் ஓவியத்தால் உங்களுக்கு வருமானமும் வரலாம். மென்பொருள் நிரல் எழுதும் அளவிற்கு எளிமையாக வருமானம் வராது என்றாலும், நீங்கள் தொடர்ந்து உழைத்தால், மிகச்சிக்கனமாக இருந்தால், நீங்கள் சமாளித்துக்கொள்ளலாம். ஒரு கலைஞனாக நீங்கள் உண்மையிலேயே சுதந்திரமாகவும் இருக்கலாம். உங்களுக்கு ஒரு மேலாளர் இருக்கமாட்டார் அல்லது நீங்கள் ஆய்வு நிதிக்காக அலைய தேவையில்லை.

எனக்கு எப்பொழுதுமே ஓவியங்களை பார்க்கப் பிடிக்கும். என்னால் அவற்றை உருவாக்க முடியுமா ? எனக்கு தெரியவில்லை. முடியும் என ஒருநாளும் கற்பனைகூட செய்தது இல்லை. கலைஞர்கள் கலையை உருவாக்குகிறார்கள் என்று எனக்கு தெரியும். கலை தானாக தோன்றுவதில்லை. ஆனால் அந்த கலைஞர்கள் வேறு ஒரு இனம் என்று தோன்றியது. அவர்கள் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் அல்லது அவர்கள் ஏதோ ஒரு மர்மமான அதிபுத்திசாலிகள். வாழ்வில் ஏதோ வித்தியாசமாக செய்து கொண்டிருந்தார்கள். கலையை உருவாக்குதல் — அந்த பெயர்ச்சொல்லை தொடர்ந்து வரும் வினைச்சொல் — என்ற சிந்தனையே ஒரு அற்புதம் போல தோன்றியது.

அடுத்த செமஸ்டரில் ஹார்வேர்டில் நான் கலையைப் பற்றிய வகுப்புகளில் சேர்ந்தேன். முதுகலை மாணவர்கள் எந்த துறையிலும் எந்த வகுப்புகளிலும் சேரலாம். என் வழிகாட்டி – டாம் சேத்தம் – சிக்கலற்றவர். நான் சேர்ந்த வகுப்புகளை பற்றி அவர் அறிந்தாலும் அவர் ஒன்றும் சொன்னதில்லை.

இப்படியாக நான் கணிப்பொறி துறையில் முனைவர் ஆய்வில் இருந்தாலும், ஒரு ஓவியனாக ஆக திட்டமிட்டிருந்த போதே, லிஸ்ப் ஹாக்கிங்கிலும் அதிவிருப்பத்துடன் “ஆன் லிஸ்ப்”(On Lisp) புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தேன். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், நிறைய முதுகலை மாணவர்கள் போல, என் ஆய்வைத்தவிர நிறைய விஷயங்களில் மிகுந்த ஊக்கத்தோடு செயலாற்றி கொண்டிருந்தேன்.

இந்த சூழலில் இருந்து எப்படி வெளிவருவது என்று தெரியவில்லை. முதுகலை படிப்பில் இருந்து வெளியேற விரும்பவில்லை. ஆனால் வேறெப்படி வெளியேறுவதாம் ? 1988இல் இணையத்தை ஸ்தம்பிக்க செய்த இண்டெர்னெட் வார்மை (internet worm) எழுதியமைக்காக என் நண்பன் ராபர்ட் மோரிஸ் கார்னெலில் இருந்து வெளியேற்றப்பட்டது நினைவிற்கு எழுந்தது. அதுபோல பொறாமைப்படக்கூடிய கெத்தாக வெளியேறும் வழி எதுவும் தோன்றவில்லை. 

பின்பு 1990 ஏப்ரலில் ஒரு நாள் சுவரில் ஒரு விரிசல் தோன்றியது. பேராசிரியர் சேத்தமை சந்திக்க நேர்ந்தது. அவர் அந்த ஜூன் மாதத்தில் நான் பட்டம் பெறுவேனா என்று கேட்டார். என் ஆய்வுக்கட்டுரையில் ஒரு வரி கூட நான் எழுதியிருக்கவில்லை. ஆனால் என் வாழ்வின் மிகக்குறுகிய காலத்தில் எடுத்த முடிவு அது. “ஆன் லிஸ்ப்” புத்தகத்திற்காக நான் ஏற்கனவே செய்த ஆராய்ச்சியை பயன்படுத்தி ஐந்து வாரத்தில், காலக்கெடுவிற்கு முன்பு, ஒரு ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்து விடலாம் என்று நினைத்தேன். அவருடைய கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் “ஆம் என்று நினைக்கிறேன். இன்னும் சில நாட்களில் உங்களின் பார்வைக்கு கட்டுரையை அனுப்புகிறேன்” என்றேன்.

என் கட்டுரையின் தலைப்பாக ‘செயல்வடிவங்களின் தொடர்ச்சி’யை தேர்ந்தெடுத்தேன். மேக்ரோக்களையும், எம்படட் நிரல் மொழியையும் பற்றி எழுதி இருக்கவேண்டும் என்று பின்பு தோன்றியது. யாருமே தொடாத ஆராய்ச்சிக்குரிய ஒரு முழு உலகம் அதில் ஒளிந்திருந்தது. ஆனால் என்னுடைய நோக்கமெல்லாம் எப்படியாவது முதுகலை பட்டத்தோடு பல்கலையில் இருந்து வெளியேற வேண்டும் என்றுதான். நான் அவரசமாக எழுதிய ஆய்வுக்கட்டுரை அதற்கு போதுமானதாக இருந்தது. 

அதே நேரம் நான் கலை கல்லூரிகளுக்கும் விண்ணப்பித்து கொண்டிருந்தேன். இரண்டு கல்லூரிகள்: அமெரிக்காவில் RISD, இத்தாலி ஃப்ளாரென்ஸ் நகரின் அகடெமியா டி பெல்லி ஆர்டி. இத்தாலி கல்லூரிதான் கலை கல்லூரியில் மிக பழமையானது, அதனால் அது சிறப்பானதாக இருக்கும் என்று நினைத்தேன். RISD என்னை ஏற்று கொண்டது. அகடெமியாவில் இருந்து எந்த தகவலும் இல்லை. பிராவிடண்ஸ் மாகாணத்திலிருந்த RISDக்கு சென்றேன்.

RISD இன் இளங்கலை (BFA) படிப்பில் சேர்ந்திருந்தேன். அப்படியென்றால் நான் இருபத்தி ஐந்தாவது வயதில் மீண்டும் கல்லூரிக்கு செல்ல வேண்டியிருந்தது. அது அப்படியொன்றும் வித்யாசமாக இல்லை. ஏனென்றால் கலைக்கல்லூரியில் எல்லா வயதிலும் மாணவர்கள் இருந்தார்கள்.  RISD என்னை மாற்றலாகி வந்த இரண்டாம் ஆண்டு மாணவனாக கருதியது. நான் கோடை வகுப்புகளில் அடிப்படைகளை கற்றுத் தேர வேண்டும் என்றது. அடிப்படை வகுப்புகள் என்றால் – எல்லோரும் சேரும் வகுப்புகள் – வரைதல், நிறங்கள் மற்றும் வடிவமைப்பு.

கோடை வகுப்பின் முடிவில் எனக்கு பெரிய ஆச்சிரியம் காத்திருந்தது: இத்தாலியின் அகடெமியாவிலிருந்து வந்த ஒரு கடிதம். கடிதத்தின் தாமதத்திற்கான காரணம் – அமெரிக்காவின் மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜிற்கு பதில் அவர்கள் கடிதத்தை இங்கிலாந்திலிருந்த கேம்பிரிட்ஜிற்கு அனுப்பிவிட்டார்கள். அந்த கடிதத்தில் என்னை ஃப்ளாரென்ஸ் நகரில் நடைபெறும் நுழைவு தேர்விற்கு அழைத்திருந்தார்கள். அதற்கு இன்னும் சில வாரங்களே இருந்தன. என் வீட்டு உரிமையாளர் அவருடைய பரணில் என்னுடைய பொருட்களை விட்டுச் செல்ல சம்மதித்தார். முதுகலை பயிலும் காலத்தில் நான் செய்த சில ஒப்பந்தப் பணிகளால் என்னிடம் கொஞ்சம் பணம் இருந்தது. சிக்கனமாக இருந்தால் ஒரு வருடம் தாங்கும். நான் செய்வதற்கு ஒன்றுதான் பாக்கி இருந்தது – அது இத்தாலிய மொழியைக் கற்பது மட்டுமே.

நுழைவு தேர்வு ஸ்டேனியரிக்களுக்கு (வெளிநாட்டினர்) மட்டுமே. யோசித்தால், அது ஸ்டேனியரிக்களை தவிர்ப்பதற்கான ஒரு வழி போல. ஏனென்றால் இத்தாலி ஃப்ளாரென்ஸில் கலையைப்பற்றி படிக்க ஏகப்பட்ட ஸ்டேனியரிக்கள் குவிந்தால், உள்ளூர் இத்தாலியர்களுக்கு இடமில்லாமல் போய்விடும். RISDஇல் சில மாதங்களில் நான் கற்ற ஓவிய அடிப்படை கல்வி எனக்கு  உதவியது. இருந்தும் அந்த நுழைவுத்தேர்வில் எப்படி தேர்வானேன் என்பது எனக்கும் ஆச்சிரியம்தான். சிஸேன் பற்றிய கட்டுரை எழுதினேன் என்று நினைவில் உள்ளது. என்னுடைய குறைவான இத்தாலிய சொற்களைக்கொண்டு, முடிந்தவரை என் அறிவை அதிகபட்சமாக பயன்படுத்தி அந்த கட்டுரையை எழுதியிருந்தேன்.[2]

எனக்கு 25 வயதுதான் ஆகியிருந்தது. ஆனால் அதற்குள்ளேயே சில விஷயங்கள் மீள நிகழ்ந்தன. இதோ மீண்டும் ஒரு பெருமைமிக்க கல்வி நிறுவனத்தில் ஒரு மதிப்புமிக்க ஒரு பாடத்தை கற்கப்போகிறேன், ஆனால் ஏமாற்றமடையப்போகிறேன். அகடெமியாவின் ஓவியத்துறையில் இருந்த மாணவர்களும் ஆசிரியர்களும் நான் சந்தித்தவர்களில் அருமையானவர்களாக இருந்தாலும், அவர்கள் நீண்ட காலத்திற்கு முன்பே  ஓர் ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டார்கள். அதாவது மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து ஏதுவும் கற்று கொள்வது இல்லை, ஆசிரியர்களும் மாணவர்களுக்கு எதுவும் கற்று கொடுப்பதும் இல்லை. வெளிப்பார்வைக்கு அனைவரும் 19ஆம் நூற்றாண்டின் கலைக்கூடத்தின் முறைமைகளை கடைபிடித்தார்கள். அங்கே உண்மையிலே 19ஆம் நூற்றாண்டின் ஓவிய அறையில் இருக்கும் சிறிய அடுப்புகள் இருந்தன. ஒரு நிர்வாண மாடல் சூடுபட்டு கொள்ளாமல் அதன் அருகில் அமர்ந்திருப்பாள். என்னை தவிர வேறு யாரும் அவளை வரையவில்லை. மற்ற மாணவர்கள் எல்லாம் தங்களுக்குள் அரட்டை அடித்துக்கொண்டும், எப்பொழுதாவது அமெரிக்க கலை இதழ்களில் பார்த்தவற்றை நகலெடுத்து கொண்டும் இருந்தார்கள்.

அந்த மாடல் எனக்கு அடுத்த தெருவில் தான் வசித்தாள். மாடலிங் மூலமூம், அங்கிருந்த ஒரு பழைய கலை விற்பனருக்கு போலிகள் செய்து கொடுத்தும் சம்பாதித்தாள். பிரபலமில்லாத ஓவியத்தை ஏதோ ஒரு பழைய புத்தகத்திலிருந்து நகலெடுத்து விற்பனரிடம் தருவாள். அவன் அதை மீண்டும் நகலெடுத்து, சிறிது சிதைத்து பழையது போல மாற்றி விற்பான்.[3]

நான் அக்கடெமியாவில் மாணவனாக இருந்தபோது, இரவில் என் அறையில் ஸ்டில் லைஃப் ஓவியங்களை வரைய துவங்கினேன். அந்த ஓவியங்கள் மிகச் சிறியவை. ஏனென்றால் என் அறையும் மிகச் சிறியது. மிச்சம் மீதியாக கிடைத்த கான்வாஸில் தான் வரையமுடியும். எனக்கு அதுதான் கட்டுபடியானது. மனிதர்களை வரைவதை விட பொருட்களை வரைவது வேறானது. மனிதர்களால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் அசையாமல் அமர்ந்திருக்க முடியாது. வழக்கமான முறை என்பது, நீங்கள் பொது வடிவத்தை வரைந்து, அதன் பின் நீங்கள் வரைபவருக்கு ஏற்ப உங்கள் ஓவியத்தை மாற்றிக்கொள்வீர்கள். இந்த சிக்கல் இல்லாமல், நிலை பொருட்களை வரையும் போது, நீங்கள் துளித்துளியாக அப்படியே வரைந்து கொள்ளலாம். நீங்கள் அதோடு நிறுத்திக்கொண்டால் ஒரு புகைப்பட துல்லியத்தை வரைந்திருப்பீர்கள். ஆனால் நிலை பொருள் ஓவியம் எதனால் சுவாரஸ்யமானது என்றால், அது உங்கள் தலை வழியாக கடந்து சென்றிருக்கிறது. காட்சி நுணுக்கங்களை நீங்கள் உயர்த்திக்காட்ட முயல்வீர்கள் – உதாரணமாக ஒரு இடத்தில் நிறம் சட்டென்று மாறுகிறது என்றால், அது அந்த பொருளின் விளிம்பு என்று பொருள். இப்படி சில நுணுக்கங்களின் மூலம் ஓவியத்தை புகைப்படத்தைவிட மேலும் ரியலிஸ்டிக்காக ஆக்க முடியும். இதை உருவகமாகச் சொல்லவில்லை, தகவல் கோட்பாட்டின் அடிப்படையில் சொல்கிறேன்.[4]  

எனக்கு நிலை பொருட்களை வரைவது பிடித்திருந்தது. நான் எதைக் காண்கிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் எதை பார்க்கிறோம் என்று நினைவில் வைத்து கொள்வதில்லை. முக்கால்வாசி காட்சி உணர்வுகள்  அடிநிலை உணர்வுகளால் பகுக்கப்பட்டு, மூளைக்கு தகவலாக அனுப்பப்படும் – உதாரணத்திற்கு “அது ஒரு நீர்த்துளி” என்ற தகவலாக போய் சேரும். எங்கே ஒளி அதிகமாக உள்ளது, எங்கே இருளாக உள்ளது என்ற விரிவான தகவல்களை அனுப்பாது. “அது ஒரு புதர்” என்ற செய்தி அதன் ஒவ்வொரு இலையின் வடிவத்தையோ அல்லது இடத்தையோ அனுப்பாது. இது நம் மூளை செயல்படும் விதம். இது ஒரு கோளாறல்ல. ஆனால் நீங்கள் ஒன்றை ஓவியமாக வரையவேண்டும் என்றால், நீங்கள் மேலும் உற்று நோக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் கவனித்தீர்களென்றால், அதில் நிறைய விஷயங்கள் உள்ளன. அனைவருக்கும் பொதுவாக தெரிந்தவற்றிலே பல நாட்கள் வரைந்தபின்பும் நீங்கள் புதியவற்றை கவனிப்பீர்கள். எல்லோருக்கும் தெரிந்தவற்றையே கட்டுரையாக பல நாட்கள் எழுதும்பொது புதியவற்றை கவனிப்பதைப்போல. 

இது மட்டுமே ஓவியம் வரைவதற்கான வழி இல்லை. ஓவியம் வரைவதற்கு இது சரியான முறையா  என எனக்கு நூறு சதவீதம் தெரியவில்லை. ஆனால் முயற்சி செய்யும் அளவிற்கு நன்றாக இருந்தது. 

என்னுடைய ஆசிரியர், பேராசிரியர் உலிவி நல்ல மனிதர். நான் கடினமாக உழைக்கிறேன் என்பது அவருக்கு தெரிந்தது. எல்லா மாணவர்களிடமும் இருந்த ஒரு பாஸ்போர்ட் அளவுள்ள குறிப்பேட்டில் எனக்கு நல்ல மதிப்பெண்களை எழுதித்தந்தார். ஆனால் அகெடெமியா எனக்கு இத்தாலி மொழியைத்தவிர வேறொன்றையும் கற்றுக் கொடுக்கவில்லை. பணமும் காலியாகிக்கொண்டிருந்தது. அதனால் முதல்வருட முடிவில் நான் அமெரிக்காவிற்கு திரும்பி வந்துவிட்டேன்.

நான் RISDக்கு திரும்பிப்போக முயன்றேன். ஆனால் என்னிடம் பணம் இல்லை. RISDயின் கல்வி கட்டணம் மிக அதிகம். அதனால் ஒரு வருடம் வேலைக்குச்சென்ற பின், அடுத்த ஆண்டு மீண்டும் RISDக்கு செல்லலாம் என திட்டமிட்டேன். இண்டெர்லீஃப் என்ற நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது. அவர்கள் கோப்புகள் உருவாக்கக்கூடிய மென்பொருளை உருவாக்கும் நிறுவனம். மைக்ரோஸாப்ட் வேர்ட் போன்றதா? ஆம். விலை குறைந்த மென்பொருள் எப்படி  விலை உயர்ந்த மென்பொருளை விழுங்குகிறது என்பதை நான் அங்கேதான் அறிந்து கொண்டேன். அப்போதைக்கு இண்டெர்லீஃப் மேலும் சில வருடங்கள் உயிருடன் இருந்தது.[5]  

இண்டெர்லீஃப் தைரியமான சில காரியங்களை செய்தது. Emacs ஆல் உந்தப்பட்டு அவர்கள் ஒரு ஸ்க்ரிப்டிங் மொழியை சேர்த்திருந்தார்கள். அதற்கு லிஸ்ப்பை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அவர்களுக்கு ஒரு லிஸ்ப் கொந்தர் தேவைப்பட்டார். பொதுவாக ‘வேலை’ என எல்லோரும் சொல்வதற்கு அருகில் வந்த ஒன்றை நான் செய்தது அப்போழுதுதான். ஒரு மோசமான ஊழியராக இருந்ததிற்கு என் மேலாளரிடமும், சக ஊழியர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். பெரிய கேக்கில் தடவப்பட்ட சிறிய கிரீமைப்போல, மென்பொருள் முழுவதும் C மொழியில் எழுதப்பட்டு, Lisp மொழி மிகக்குறைவாக பயன்படுத்தப்பட்டிருந்தது. C மொழி எனக்கு தெரியாததாலும், கற்க விரும்பாததாலும் அந்த மென்பொருள் என்னவென்றே எனக்கு புரியவில்லை. மேலும் மிக ஊதாரியாக இருந்தேன். அன்று நிரல் எழுத்தர் என்ற வேலை தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வர வேண்டும் என்று இருந்தது. எனக்கு அது மிக செயற்கையாக இருந்தது. நான் யோசித்ததை போலவே மென்பொருள் உலகம் யோசித்து வருவதற்கு கொஞ்ச காலம் ஆனாலும், அன்று நிறைய சிக்கல்களை ஏற்படுத்தியது. ஒரு வருட முடிவில் நான் பெரும்பாலும் ‘ஆன் லிஸ்ப்’ புத்தகத்தில் வெளியே சொல்லாமல் எழுதிக் கொண்டிருந்தேன். அந்தப் புத்தகத்தைப் பதிப்பிக்க ஒரு ஒப்பந்தமும் கிடைத்தது. 

இதில் நல்ல விஷயம் எனக்கு நிறைய பணம் தந்தார்கள்.  ஓர் ஓவியத்துறை மாணவனின் கணக்கில் அது பெரிய தொகை. ஃப்ளாரென்ஸில் வாடகை போக, ஒரு நாளிற்கான என் பட்ஜெட் ஏழு டாலர். இப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு அதைவிட நான்கு மடங்கு சம்பளம். சும்மா மீட்டிங்கில் உட்கார்ந்திருந்தாலும். சிக்கனமாக இருந்ததால் RISDக்கு திரும்பிச்செல்ல மட்டுமல்ல, என்னுடைய கல்விக் கடன்களையும் அடைக்க முடிந்தது.  

இண்டெர்லீஃபில் சிலவற்றை நான் கற்று கொண்டேன் – பெரும்பாலும் என்ன செய்யக்கூடாது என்று தான். ஒரு தொழில்நுட்ப நிறுவனம் விற்பனையாளர்களைவிட பொருளை உருவாக்குபவர்களால் நடத்தப்பட வேண்டும் (விற்பனை என்பது உண்மையிலே ஒரு திறமை. அதில் மிகச்சிறந்தவர்கள் உள்ளனர்.); நிறைய பேர் நிரலில் கை வைத்தார்கள் என்றால், அதில் நிறைய பிழைகள் உருவாகும்; வாடகை குறைவான அலுவலகக் கட்டிடம் மன சோர்வை உருவாக்கும்; திட்டமிட்ட மீட்டிங்குகளைவிட அறைகளுக்கு வெளியே நடக்கும் உரையாடல்கள் பயனுள்ளவை; பெரிய சிவப்பு நாடா கஸ்டமர்களிடமிருந்து வரும் பணம் அபாயகரமானது; திட்டமிட்ட அலுவலக நேரத்திற்கும் இடத்திற்கும் நிரல்களை எழுதுவதற்கும் பொதுவானவை குறைவு.    

ஆனால் நான் கற்றவற்றில் மிக முக்கியமானது – வியாவெப்பிலும் Y Combinator லும் பயன்படுத்தியது – கடைநிலை மேல்நிலையை உண்டுவிடும் என்பது: நீங்கள் விற்கும் பொருள் எளிமையான, விலை குறைவானதாக இருப்பது பெருமையாக இல்லையென்றாலும் நல்லது. இல்லையென்றால், வேறொருவர் வந்து உங்களை சுவரோடு சேர்த்து சாத்தி விடுவார்கள். பெருமை என்பது அபாயகரமானது.

அடுத்த ஆண்டு RISD க்கு திரும்பி செல்லும்போது, நான் வேலை செய்த அணியிலேயே ஒப்பந்தப்பணி ஒன்றை ஏற்றுக்கொண்டேன். அடுத்த பல ஆண்டுகள் என் வண்டி ஓடுவதற்கு அதில் கிடைத்த பணம் உதவியது. அடுத்த புராஜக்டுக்காக பின்பு வந்தபோது, யாரோ ஒருவர் HTML பற்றி சொன்னார். HTML நிரல் மொழி SGML மொழியிலிருந்து உருவானது. இண்டெர்லீஃபில் வேலை செய்த மார்கப் நிரல் மொழி (ML) ஆர்வலர்கள் பெரிய தொந்தரவு. அதனால் HTML பற்றி சொன்னவரை நான் கண்டு கொள்ள வில்லை. ஆனால் பின்பு என் வாழ்வில் HTML பெரும் பங்காற்றியது.

1992 இன் பின்பகுதியில் நான் மீண்டும் பிராவிடன்ஸ் மாநிலத்தின் RISD க்கு திரும்பி சென்றேன். ஏற்கனவே கற்று கொண்ட அடிப்படைகள் மிகவும் ஆரம்ப நிலை பாடங்களாகவும், இத்தாலியின் அகடெமியா சுத்த டுபாக்கூராகவும் இருந்தது. இப்போது உண்மையான கலைக்கல்லூரி எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளப்போகிறேன். ஆனால் அதுவும் அகெடெமியாவை போன்றே இருந்தது. கண்டிப்பாக அதிக செலவு பிடித்தது. மருத்துவத்திற்கும் மருத்துவ கல்லூரிக்கும் உள்ள தொடர்பு கலை கல்லூரிக்கும் கலைக்கும் கண்டிப்பாக இல்லை என்று தெளிவாக தெரிந்தது. குறைந்தபட்சம் ஓவியதுறைக்கும் ஓவியத்திற்கும் சம்பந்தமில்லை.  என் பக்கத்து அறை நண்பர் படித்த ஜவுளித்துறை மிகக்கடினமாக இருந்தது. கட்டிடத்துறையும் அவ்வாறே. ஆனால் ஓவியம் அதைத்தாண்டியதாக இருந்தது. ஓவியக்கல்லூரி மாணவர்கள் தங்களை  வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதனாலோ என்னவோ, தங்களுக்கான சிக்னேச்சர் ஸ்டைல் எனும் தனித்த ஒரு அடையாளத்தை போலியாக உருவாக்க முயற்சி செய்து கொண்டே இருந்தார்கள்.

சிக்னேச்சர் ஸ்டைல் என்பது ஒரு ஓவியத்தை பார்த்தவுடன் இந்த ஓவியருடையது என்று அடையாளம் காட்டக்கூடியது. இலக்கியத்தில் தனித்த நடை என்பதைப்போல. ஒரு கார்ட்டூன் போல இருக்கும் ஒரு ஓவியத்தை பார்த்த உடன் அது ராய் லிச்டன்ஸ்டீன் என்று தெரியும். ஒரு பங்குச்சந்தை தரகரின் அலுவலக சுவரில் அதை போன்ற பெரிய ஓவியம் ஒன்று மாட்டப்பட்டிருந்தால், அதற்காக அவர் பல மில்லியன் டாலர்களை செலவழித்திருப்பார் என்று உங்களுக்கு தெரியும். ஓவியர்கள் பணத்திற்காக ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள மாட்டார்கள் என்றாலும், வாங்குபவர்கள் தனித்த அடையாளத்திற்குத்தான் பெரும் பணம் செலவிடுவார்கள்.[6]   

உண்மையிலே சின்சியரான நிறைய மாணவர்கள் இருந்தார்கள். அவர்கள் பள்ளியிலே மிகச்சிறப்பாக வரைந்தவர்கள். இன்னும் சிறப்பாக வரைவதற்காக நாட்டிலேயே உள்ள சிறந்த ஓவியக்கல்லூரிக்கு வந்தவர்கள். ஆனால் RISD அவர்களை குழப்பியும், அவர்களின் தன்னம்பிக்கையை இழக்கவும் வைத்தது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து வரைந்தார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஓவியத்தை தவிர வேறொன்றும் தெரியாது. பள்ளியில் நான் வரைந்ததில்லை என்றாலும், அவர்களோடுதான் நான் இருந்தேன். தனித்த அடையாளத்தை தேடிய கூட்டத்தோடு இல்லை.

RISD இல் நிறங்கள் வகுப்பில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஆனால் மற்றபடி நானேதான் ஓவியம் கற்றுக்கொண்டிருந்தேன். அதற்கு எதற்கு கல்லூரிக்கு காசு கொடுக்க வேண்டும்? அதனால் 1993 இல் கல்லூரியில் இருந்து விலகி விட்டேன். பிராவிடன்ஸ் மாநிலத்தில் சிறிது நாள் சுற்றி கொண்டிருந்த போது, என் கல்லூரி நண்பர் நான்சி பார்மட் எனக்கு ஒரு பெரிய உதவி செய்தாள். அவளின் அம்மாவுடைய வீடு ஒன்று நியூயார்க்கில் காலியாகிறது. உனக்கு வேண்டுமா ? என்றாள். வாடகை-சட்டத்திற்கு உட்பட்ட அந்த வீட்டின் வாடகையை அரசாங்கம் நிர்ணயிக்கும். என்னுடைய அப்போதைய வீட்டு வாடகையை விட அது அதிகமில்லை. மேலும் கலைஞர்கள் எல்லாம் நியூயார்க்கில் தான் இருந்தார்கள். அதனால் அந்த வீடு எனக்கு தேவைப்பட்டது.[7] 

ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் ரோமன் கவுல் (Roman Gaul) ஒரு மூலையிலிருந்து துவங்கும். அது ரோமன்களின் ஆளுகைக்குக் கீழ் இருக்காது. அதுபோல நியூயார்க் நகரின் வட கிழக்குப் பகுதியின் ஒரு சிறிய மூலை பணக்காரர்களுடையது அல்ல. 1993இல் அது பணக்கார ஏரியா இல்லை. யார்க்வில் என்ற அந்த ஏரியாவில் தான் என் வீடு இருந்தது. இப்போது நான் ஒரு நியூயார்க்க நகர ஓவிய கலைஞனாகி விட்டேன்.

எனக்கு பணத்தைப் பற்றிய பதற்றம் உண்டாக துவங்கியது. இன்டெர்லீஃப் ஊத்தி மூடிக்கொண்டிருந்தது. லிஸ்ப் நிரல்மொழியில் ஒப்பந்த பணிகள் குறைந்து கொண்டிருந்தது. எனக்கு வேறு நிரல் மொழிகளை பயன்படுத்தப் பிடிக்கவில்லை. அதனால் தெளிவான பணத்தேவைக்காக இன்னொரு லிஸ்ப் புத்தகம் எழுத முடிவு செய்தேன். இது ஒரு பாப்புலரான புத்தகமாக இருக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். பாடப்புத்தகமாக வைக்க கூடியதாக இருக்க வேண்டும். கிடைக்கும் ராயல்டியில் சிக்கனமாக வாழ்ந்து, மிச்ச நேரத்தையெல்லாம் ஓவியத்தில் செலவிடலாம் என கற்பனையில் மிதந்தேன். “ANSI காமன் லிஸ்ப்” புத்தகத்தின் அட்டைப்பட ஓவியம் அப்போது நான் வரைந்தது. 

நியூயார்க் நகரில் எனக்கு பிடித்தது – ஐடில் மற்றும் ஜூலியன் வெப்பருடன் செலவிட கிடைத்த நேரம். ஐடில் வெப்பர் ஒரு ஓவியர். பெண். ஃபோட்டோ ரியலிஸ வகைமையில் வரையக்கூடியர். ஹார்வெர்டில் அவருடைய வகுப்புகளில் நான் அமர்ந்துள்ளேன். நிறைய முன்னாள் மாணவர்கள் அவருடன் தொடர்பில் இருந்தார்கள். நியூயார்க்கிற்கு வந்த பின்பு அவருடைய உதவியாளராக ஆனேன். 

நான்கு அல்லது ஐந்து அடி சதுர பெரிய கான்வாசில் வரைவது அவருக்கு படிக்கும். 1994 இல், ஒரு பெரிய கான்வாசை பிரித்துக்கொண்டிருந்தபோது, ரேடியோவில் ஒரு புகழ்பெற்ற பங்குச்சந்தை தரகரைப்பற்றி ஏதோ சொல்லி கொண்டிருந்தார்கள். அவருக்கு என்னுடைய வயதிருக்கலாம். ஆனால் பெரிய பணக்காரர். திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது. நான் ஏன் பணக்காரனாக ஆகக்கூடாது ? பணக்காரனாகி விட்டால் அப்புறம் நான் எதில் வேண்டுமானாலும் ஈடுபடலாமே. 

அதேசமயம் நான் வேர்ல்ட் வைட் வெப் (WWW – உலகாளவிய வலை அல்லது “வலை”) என்பதை பற்றி நிறைய கேள்விப்படத் துவங்கினேன். ஹார்வெர்டில் முதுகலை படித்து கொண்டிருந்த ராபர்ட் மோரிஸை சந்திக்க சென்றபோது, அவன் எனக்கு “வலை”யை அறிமுகப்படுத்தினான். இணையம் பெரியதாக ஆகும் என்று தோன்றியது. குறுங்கணினிகளின் புகழிற்கு கிராபிக்கல் இன்டெர்ஃபேஸ்தான் காரணம் என்பதை நான் பார்த்து வளர்ந்திருந்தேன். “வெப்”  அதுபோல இணையத்தைப் பரவலாக்கும் என்று தோன்றியது. (ஒரு பெரிய அறை அளவு இருந்த மெயின்ஃபிரேம் கணினிக்கு நீங்கள் கட்டளைகளை ‘துளை அட்டைகள்’ வழியே தரவேண்டும். பின்பு மேஜை மீது வைக்கக்கூடிய அளவுள்ள மைக்ரோ கம்ப்யூட்டர்கள் வந்தபோது அதற்கு நீங்கள் கட்டளைகளை உங்கள் விரல் நுனி அசைவில் அளிக்கமுடிந்தது. இணையம் 1980களில் வந்துவிட்டது. ஒவ்வொரு கணினிக்கும் எண்களால் ஆன முகவரி இருக்கும். ஒரு கணினியையும் உலகின் வேறொரு மூலையில் இருந்த இன்னொரு கணினியையும் இணைப்பது எளிதானதாக இல்லை. (அது பற்றி வேறொரு கட்டுரையில் பார்ப்போம்).  

நான் பணக்காரனாக வேண்டுமென்றால் இதோ ரயில் நிலையத்திலிருந்து அடுத்த வண்டி புறப்படுகிறது. வலைதளங்கள் பரவலாகும் என்ற என் கணிப்பு சரி. ஆனால் என்னுடைய வலைதளத்திற்கான ஐடியா தவறு. கலைக்கூடங்களுக்கான இணைய விற்பனை வலைதளம் துவங்கினேன். Y Combinator க்கு வரும் விண்ணப்பங்களை படிக்கும்போது, அது அப்படி ஒன்றும் ஒரு மோசமான ஐடியா இல்லை என்று தோன்றுகிறது. கலைக்கூடங்கள் இணையத்தில் வர விரும்பவில்லை. இன்றும் புகழ்பெற்ற கலைக்கூடங்களுக்கு இணைய விற்பனையில் துளியும் விருப்பமில்லை. கலைக்கூடங்களுக்கு வலைதளங்களை உருவாக்கும் மென்பொருளை எழுதினேன். வலைதள சர்வரை நிறுவும் வேலையை ராபர்ட் செய்தான். அதன்பின் நாங்கள் கலைக்கூடங்களை எங்கள் வலைதளத்தை உபயோகப்படுத்த அணுகினோம். அதை கடினமான விற்பனை என்று சொல்வதேகூட குறைத்துச்சொல்வதுதான். இலவசமாக உபயோகப்படுத்துவதற்கு கூட ஆள் இல்லை. மிகச்சில கலைக்கூடங்கள் உபயோகப்படுத்தின. அவையும் எங்களுக்கு பணம் தரவில்லை. 

அதன்பின் வேறு சில வணிக இணைய தளங்கள் தோன்றின. அப்பொழுது ஒன்றை கவனித்தேன். ஒரு சில பட்டன்களைத்தவிர அவை எங்கள் கலைக்கூட இணையதளம் போலவே இருந்தன. “இணைய கடைகள்” என்பதை உருவாக்கி இருக்கிறோம் என்று தோன்றியது. 

1995 கோடையில் “ANSI காமன் லிஸ்ப்” புத்தகத்தை பதிப்பகத்தாரிடம் தந்துவிட்டு, இணையத்தில் விற்பனை செய்யும் கடைகளுக்கான மென்பொருளை எழுத துவங்கினேன். ஆரம்பத்தில் இது டெஸ்க்டாப் மென்பொருளாக இருக்கவேண்டும் என நினைத்தோம். அப்படி என்றால் அது விண்டோஸ் மென்பொருள்தான். அந்த எண்ணமே திகிலாக இருந்தது. ஏனென்றால் எங்கள் இருவருக்கும் விண்டோஸில் எப்படி நிரல் எழுதுவது என்று தெரியாது. விண்டோஸை கற்று கொள்ளவும் விருப்பமில்லை. நாங்கள் யுனிக்ஸ் உலகில் வாழ்ந்தோம். (அன்றைய மென்பொருள் உலகை ஆண்ட பேரரசன் மைக்ரோஸாப்டுடைய கணினியை இயக்கும் பிரதான மென்பொருள் விண்டோஸ். யுனிக்ஸ் இலவச மென்பொருள். விண்டோஸ் யுனிக்ஸை பெருமளவில் நகலெடுத்தது. மைக்ரோஸாப்ட் Vs இலவச மென்பொருள் என்பதைப்பற்றி வேறு கட்டுரையில்.) யுனிக்ஸில் ஒரு மாதிரியையாவது (prototype) உருவாக்க வேண்டும் என்று நினைத்தோம். ராபர்ட் ஷாப்பிங் கார்ட்டை எழுதினான். நான் கடைகளுக்கான புதிய வலைதளங்கள் உருவாக்கும் நிரல்களை எழுதினேன் (லிஸ்ப் மொழியில் தான்.)   

கேம்பிரிட்ஜிலிருந்த ராபர்டின் அபார்ட்மெண்டிலிருந்து வேலை செய்தோம். அவனுடைய அறை நண்பன் நீண்ட நேரம் வெளியேதான் இருப்பான். சில நேரங்களில் தூங்கி ஓய்வெடுக்கவும் வசதியாக இருந்தது. கட்டிலோ, போர்வையோ இல்லை. வெறும் மெத்தை தரையில் விரிக்கப்பட்டிருந்தது. ஒரு காலையில், அந்த மெத்தையில் படுத்திருந்த போது, ஒரு யோசனை தோன்றியது. சட்டென்று L வடிவத்தில் எழுந்து அமர்ந்தேன். எங்கள் மென்பொருளை சர்வரிலிருந்தே ஓட்டினால் என்ன? பயனர்களின் தனிப்பட்ட கணினியில் ஓடும் எந்த மென்பொருளும் எழுதத்தேவையில்லை. பிரௌசர் மட்டுமே போதும். அவர்கள் ஒரு வலைதளத்திற்கு சென்று சில சுட்டிகளை க்ளிக் செய்து கொள்ளலாம். 

இப்படிப்பட்ட மென்பொருட்கள் – வலைதள செயலிகள்(web app) – தற்போது மிக பரவலாக உள்ளது. (உதாரணம்: கூகிள் டாக்ஸ் Vs மைக்ரோசாப்ட் வேர்ட். கூகிள் டாக்ஸிற்கு உங்கள் பிரௌசரே போதும். மைக்ரோசாப்ட் வேர்டிற்கு நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபிஸ் செயலியை உங்கள் கணினியில் பதிந்திருக்கவேண்டும்.) ஆனால் அன்று அது சாத்தியமா என்று கூட தெரியவில்லை. அதன் சாத்தியத்தை தெரிந்துகொள்ள செய்து பார்ப்பது என்று முடிவு செய்தோம். சில நாட்களில், ஆகஸ்ட் 12 இல் ஒரு மாதிரியை உருவாக்கினோம். அதை பயன்படுத்துவதற்கு கொடுமையாக இருந்தது. ஆனால் இப்போது மொத்த கடையையும் நீங்கள் வலைதளத்தின் வழியே பயன்படுத்தலாம், பயனர்களின் கணினியில் வேறெந்த மென்பொருளும் தேவையில்லை.   

நாங்கள் பெரிதாக ஏதோ ஒன்றைத் தொட்டிருக்கிறோம் என்று தோன்றியது. அடுத்த தலைமுறை மென்பொருட்கள் அனைத்தும் இந்த வடிவில் எழுதப்படக்கூடிய சாத்தியம் எனக்கு தெரிந்தது. பயனர்களின் கணினியில் பதியப்படும் பயனர்-செயலிகள், பிழைகள் களையப்பட்டு புதிய அம்சங்களுடன் வெளியிடப்படும். புதிய பயனர்-செயலிகளுக்கும் பழைய சர்வரும் ஒத்திசையுமா என எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை. ஏனென்றால் பயனர்-செயலி என்ற ஒன்றே இருக்காது. இன்டெர்லீஃபில் மென்பொருள் வெளியிடுவதற்கென்றே ஒரு பெரிய குழு இருந்தது. நிரல் எழுத்தாளர்களின் எண்ணிக்கை அளவிற்கு பெரியது. இப்பொழுது அதெல்லாம் தேவையில்லை. உங்கள் சர்வரை மட்டும் புதிப்பித்தால் போதும்.  

வியாவெப் (Viaweb – வலையின் வழியே) என பெயரிட்டு ஒரு நிறுவனத்தை துவங்கினோம். ஐடில்லின் கணவர் ஜூலியன் பத்தாயிரம் டாலரை துவக்க முதலீடாக தந்தார். எங்களுக்கான சட்ட மற்றும் வணிக ஆலோசனைகள் வழங்குவதற்காகவும், முதலீட்டிற்காகவும் நாங்கள் அவருக்கு எங்கள் நிறுவனத்தில் 10%  பங்கு தந்தோம். பத்து வருடங்கள் கழித்து நாங்கள் நடத்திய முதலீட்டு நிறுவனமான Y Combinator க்கு இது முன்மாதிரியாக இருந்தது. தொழில் துவங்குபவர்களுக்கு இதுபோன்று ஒன்று தேவைப்படும் என எங்களுக்கு தெரியும். ஏனென்றால் எங்களுக்கு அப்படி ஒன்று தேவைப்பட்டது.   

அந்த கட்டத்தில் என்னுடைய நிகர சொத்து பூஜ்யத்திற்கும் கீழே இருந்தது. என் வங்கியில் இருந்த பணத்தைவிட அரசிற்கு நான் கட்டவேண்டிய வரி அதிகமாக இருந்தது. இண்டெர்லீஃபில் ஒப்பந்த பணிக்கு கிடைத்த ஊதியத்திற்கான வரியை சேமித்து வைத்திருக்க வேண்டும். நான் செய்யவில்லை. ராபர்ட்டிற்கு முதுகலை கல்வி ஊக்கத்தொகை வந்துகொண்டிருந்தது. என்னுடைய செலவுகளுக்கு ஜூலியன் தந்த முதலீடு தேவைப்பட்டது. 

செப்டம்பரில் துவங்க வேண்டும் என திட்டமிட்டிருந்தோம். ஆனால் எங்கள் மென்பொருள் வடிமைப்பு சிக்கலானதாக இருந்தது. ஒரு வழியாக WYSIWYG தள கட்டுமானம் ஒன்றை உருவாக்கினோம். பார்ப்பதற்கு அது பயனர்-செயலி போலவே இருக்கும், ஆனால் பிரௌசரில் ஓடும். அதன் வலைதள பக்கங்கள் சர்வரில் உருவாக்கப்பட்டு பயனர்களில் பிரௌசர்களுக்கு அனுப்பப்படும். அடுத்த பக்கங்களின் சுட்டிகள் (links) சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். 

நான் படித்த கலை இங்கு பயன்பட்டது. ஏனென்றால் பார்ப்பதற்கு உங்கள் வலைதளம் சிறுபிள்ளைகள் செய்ததுபோல இருக்க முடியாது இல்லையா ? நீங்கள் சரியான நிறங்கள், எழுத்து வடிவங்கள், தளத்தின் அமைப்புகளை பயன்படுத்தினால், உங்கள் படுக்கை அறையில் இருந்து ஒரு தளத்தை ஓட்டினாலும், உங்கள் பயனர்களுக்கு அது பெரிய நிறுவனத்தின் தளம்போல தெரியும்.  

(என்னுடைய தனிப்பட்ட தளம் ஏன் மிகப்பழையது போல தோன்றுகிறது என்றால், நான் அன்று உருவாக்கிய மென்பொருளில் தான் ஓடுகிறது. இப்போது வேண்டுமானால் அது தகரடப்பா போல இருக்கலாம், ஆனால் 1996ஆல் அது தங்கம்.) 

செப்டம்பரில் ராபர்ட் பொறுமை இழந்தான். “ஒரு மாதமாக இதில் வேலை செய்கிறோம், ஆனால் இன்னும் முடியவில்லை”. இப்போது யோசித்தால் சிரிப்பாக இருக்கிறது. ஏனென்றால் அடுத்த மூன்று வருடங்களுக்கும் அவன் அதில்தான் வேலை செய்தான். எனக்கு மேலும் நிரல் எழுத்தர்களை வேலைக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அவனுக்கு கல்லூரியில் யாரையாவது தெரியுமா என்று கேட்டேன். ட்ரெவொர் பிளாக்வெல் என்று அவன் பரிந்துரைத்தபோது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது. ஏனென்றால் எனக்குத்தெரிந்த ட்ரெவொர், மொத்த வாழ்வையும் சில அட்டைகளாக மாற்றி, அடுக்கி வைத்துக்கொண்டு, தன்னோடு எங்கு சென்றாலும் கொண்டு செல்பவன். ஆனால் வழக்கம்போல ராபர்ட் சரியாக கணித்திருந்தான். ட்ரெவொர் அட்டகாசமான நிரல் எழுத்தராக இருந்தான்.

ராபர்ட்டோடும் ட்ரெவொரோடும் வேலை செய்தது மிகுந்த மகிழ்ச்சியை தந்தது. எனக்கு தெரிந்த மிகச்சுதந்திர சிந்தனை உடையவர்கள். வெவ்வேறு வகைகளில். ராபர்ட்டின் மூளைக்குள் பார்க்க முடிந்தால் அது பழைய காலனிய நியூ இங்கிலாந்து சர்ச் போல இருக்கும். ட்ரெவொரின் மூளை ஆஸ்திரிய ரோக்கோபோல இருக்கும்.

ஜனவரி 1996இல், ஆறு இணைய கடைகளுடன் நாங்கள் எங்கள் தளத்தை துவக்கினோம். நாங்கள் தாமதமாக துவங்குகிறோம் என்று நினைத்தாலும், உண்மையில் நாங்கள் மிக மிக சீக்கிரமாக துவங்கிவிட்டோம். பத்திரிக்கைகளில் இணையவழி வணிகத்தைப்பற்றிய செய்திகள் இருந்தாலும், மக்களுக்கு உண்மையில் இணையதள வணிகம் தேவைப்படவில்லை.[8]

அந்த மென்பொருளை மூன்றாக பிரிக்கலாம்: எடிட்டர் – (தளங்களை உருவாக்க) – நான் எழுதியது. விற்பனை கூடை – ராபர்ட் எழுதியது. ஆர்டர்களை நிர்வகிக்கும் பகுதி – ட்ரெவோர் எழுதியது. நான் எழுதிய எடிட்டர் – பொதுவான இணைய தளங்ளை உருவாக்கும் சிறந்த மென்பொருள். மற்ற இருவருடைய நிரல்களுடன் பொருந்தி வேலை செய்தது. இதை மட்டுமே செய்ய வேண்டும் என்றால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மகிழ்ச்சியாக செய்திருப்பேன். ஆனால் நிரல் எழுத்தை தவிர மேலும் மோசமான, மன அழுத்தங்களை உருவாக்கக்கூடிய வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் நிறைய மின் வர்த்தக மென்பொருட்கள் எழுதப் பட்டு கொண்டிருந்தன. நாங்கள் அந்த உலகின் மைக்ரோசாப்ட் வேர்ட் ஆக வேண்டும் என திட்டமிட்டு இருந்தோம். இண்டெர்லீஃப் ஆக இல்லை. பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், விலை குறைவாகவும் இருக்க வேண்டும். எங்களிடம் பணம் இல்லாதது நல்லதாக போயிற்று. நாங்கள் நினைத்தை விட வியாவெப் விலை குறைவாக இருந்தது. சிறிய கடைக்கு $100, பெரிய கடைக்கு $300 ஒரு மாத விலை வைத்திருந்தோம். எங்களின் குறைந்த விலை பெரிய விளம்பரமாகவும், போட்டியாளர்களுக்கு பிரச்சனையாகவும் இருந்தது. படு புத்திசாலித்தனமான ஆராய்ச்சி எல்லாம் செய்து விலையை முடிவு செய்ய வில்லை. $300 டாலரே எங்களுக்கு நிறைய பணம் போல தோன்றியது. 

ஏதேச்சையாக நாங்கள் நிறைய விஷயங்களை சரியாக செய்தோம். உதாரணமாக “பயனர்களை கொண்டு வருவதற்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்தோம்” என்று சொல்லலாம். பொதுவாக எங்கள் வாடிக்கையாளர் கடைகளின் இணையதளங்களை உருவாக்கினோம். அது உண்மையில் அவமானமாக இருந்தது. ஏனென்றால் எங்கள் மென்பொருளே வாடிக்கையாளர்கள் அவர்களே இணைய தளங்களை உருவாக்கி கொள்ளத்தான். ஆனால் வாடிக்கையாளர்களை கொண்டு வருதென்றால் அனைத்தையும் செய்ய வேண்டியதுதான்.

வணிகத்தை பற்றி எங்கள் தேவைக்கு அதிகமாகவே நாங்கள் தெரிந்து கொண்டோம். உதாரணமாக, ஆண்கள் சட்டையின் ஒரு சிறிய படம் மட்டுமே எடுக்க முடியுமென்றால், மொத்த சட்டையையும் எடுக்காமல் காலர் பகுதியை படம் எடுத்தக்கொள்ளலாம். எனக்கு ஏன் இது நினைவில் இருக்கிறது என்றால், நான் 30 படங்களை மீண்டும் எடுக்க வேண்டி இருந்தது. நான் முதலில் எடுத்த படங்கள் அழகாகவும் இருந்தன.

இது தவறாகத் தோன்றினாலும், இந்த வேலையை செய்ததுதான் மிக சரி. கடைகளுக்கான வலைதளங்களை உருவாக்கியது எங்களுக்கு கடைகளுக்கான வணிகத்தை மட்டும் சொல்லிக் கொடுக்கவில்லை. எங்கள் மென்பொருள் எப்படி வேலை செய்கிறது என்பதையும் தான். ஆரம்பத்தில் எனக்கு “வணிகம்” என்ற சொல் ஒருவித மர்மத்தையும், விலக்கத்தையும் உருவாக்கியது. “வணிகம் தெரிந்த ஒருவரை” வேலைக்கு எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் எங்களுக்கு பயனர்கள் வரத் துவங்கியவுடன் நானும் ஒரு வணிகனாக மாறிவிட்டேன். குழந்தைகள் பிறந்தவுடன் தந்தையாக பொறுப்புடன் நடந்து கொள்வதுபோல. பயனர்களுக்கு என்னென்ன வேண்டுமோ, அதற்கெல்லாம் நாங்கள் தயாராக இருந்தோம். என்றோ ஒரு நாள் எனக்கு மிக அதிகமாக பயனர்கள் வருவார்கள், அப்போழுது அவர்களுடைய படங்களை எல்லாவற்றையும் என்னால் ஸ்கேன் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் அதுவரை செய்வதற்கு வேறெந்த முக்கியமான வேலையும் இல்லை.  

வளர்ச்சி விகிதம் தான்ஒரு ஸ்டார்டப் நிறுவனத்தின் அதிமுக்கிய அளவுகோல் என்பது அன்று எனக்கு தெரியவில்லை. எங்களின் வளர்ச்சி நன்றாக இருந்தது. 1996ஆம் ஆண்டின் இறுதியில் 70 கடைகளும், 1997ஆம் ஆண்டின் இறுதியில் 500 கடைகளும் இருந்தன. மொத்த பயனர்களின் எண்ணிக்கை தான் முக்கியம் என்று தவறாக கணித்தேன். ஒருவகையில் எவ்வளவு வருமானம் வருகிறது என்பது முக்கியம்தான். தேவையான வருமானம் வரவில்லை என்றால், நாம் கடையை மூடவேண்டி வரும். தொலை நோக்கில், வளர்ச்சி விகிதம் எண்ணிக்கையை பார்த்துக்கொள்ளும். Y Combinator’இன் அறிவுரையை கேட்கும் ஒரு ஸ்டார்டப் ஆக இருந்தால், நான் இதை சொல்லி இருப்பேன்: ஒன்றும் வருந்த வேண்டாம். ஏனென்றால் உங்கள் நிறுவனம் நன்றாக வளர்கிறது. ஒரு வருடத்தில் ஏழு மடங்கு வளர்ந்திருக்கிறீர்கள். அதிக ஆட்களை வேலைக்கு எடுக்காமல் இருந்தாலே, விரைவிலேயே உங்கள் நிறுவனம் லாபகரமாக மாறும். அதன் பின், உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்.

ஆனால், நான் நிறைய ஆட்களை வேலைக்கு எடுத்து விட்டேன். முதலீட்டாளர்கள் ஆள் எடுக்க சொன்னார்கள், மேலும் 2001 வலைதள குமிழி காலகட்டத்தில் எல்லோரும் அதிக ஆட்களைத்தான் எடுத்தார்கள். மிக குறைந்த ஆட்கள் வேலை செய்தார்கள் என்றால் அப்போது அது கத்துக்குட்டி நிறுவனம் போல இருந்திருக்கும். யாஹூ நிறுவனம் எங்களை 1998இல் வாங்கும் போது, எங்கள் வருமானம் செலவுகளை ஈடு செய்ய துவங்கியிருந்தது. அதனால் எங்கள் நிறுவனத்தை நடத்திய காலம் முழுவதும் செலவுகளுக்கு முதலீட்டாளர்களின் கருணையை எதிர் பார்த்திருக்க வேண்டியிருந்தது. எங்கள் முதலீட்டாளர்களும் எங்களைப்போலவே ஸ்டார்டப் நிறுவனங்களில் புதியவர்கள் என்பதால் இருவருமே தடுமாறினோம். 

யாஹூ எங்களை வாங்கியது பெரிய நிம்மதியை தந்தது. வியாவெப் பங்குகளுக்கு மதிப்பிருந்தது. அதிவளர்ச்சி அடையும், லாபம் தரக்கூடிய ஒரு நிறுவனத்தின் பங்கு அது. ஆனால் எனக்கு அது மதிப்பு மிக்கதாக தோன்றவில்லை; எனக்கு ஒரு நிறுவனத்தை எப்படி மதிப்பிட வேண்டும் என்பதே தெரியவில்லை. ஆனால் சில மாதங்களுக்கு ஒருமுறை எங்கள் நிறுவனத்திற்கு வாழ்வா சாவா போராட்டம் நடந்து கொண்டே இருந்தது. மேலும் நாங்கள் நிறுவனத்தை நடத்திய காலகட்டத்திலும் என்னுடைய கல்லூரி வாழ்க்கை முறையை மாற்றி கொள்ளவில்லை. அதனால் யாஹூ வாங்கியவுடன், எனக்கு பிச்சைகாரனிலிருந்து பணக்காரன் ஆனது போல தோன்றியது. கலிஃபோர்னியாவிற்கு போக போவதால் ஒரு கார் வாங்கினேன். மஞ்சள் VW GTI. அந்த காரின் லெதர் சீட்டே அதுவரை நான் வைத்திருந்தவற்றில் மிக சொகுசான பொருளாக தோன்றியது. 

அடுத்த ஆண்டு – 1998 கோடை முதல் 1999 கோடை வரை – என் வாழ்நாளிலே வெட்டியான நாட்களாக இருந்தது. வியாவெப்பை நடத்தியது என்னை அழுத்தத்திற்கு உட்படுத்தி என் சக்தி அனைத்தையும் உறிஞ்சி விட்டது. கலிஃபோர்னியாவிற்கு சென்ற ஆரம்பத்தில், வழக்கம்போல அதிகாலை மூன்று மணி வரை நிரல்கள் எழுத முயற்சித்தேன். ஆனால் யாஹூவின் வேலை கலாச்சாரம், சாண்டா கிளாராவின் சோகமான நாற்காலி வயல்கள் என்னை உற்சாகம் இழக்க வைத்தன. சில மாதங்களிலே எனக்கு இண்டெர்லீஃபில் வேலை செய்வது போல தோன்றியது.  

யாஹூ எங்களை வாங்கியபோது நிறைய பங்கு ஆப்ஷன்களை (பங்கு ஆப்ஷன்கள் – நீங்கள் உடனடியாக அந்த பங்குகளை விற்க முடியாது. முதல் ஆண்டில் 25%, பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு என நான்கு ஆண்டுகளில் உங்களுக்கு தரப்பட்ட 100% பங்குகளை விற்றுக்கொள்ளலாம் என்பது போன்ற ஒப்பந்தம் போடப்பட்டிருக்கும்.) எங்களுக்கு தந்திருந்தது.  அப்பொழுது யாஹூவே அளவுக்கு அதிகமாக மதிப்பிடப்பட்டிருந்ததால், அந்த ஆப்ஷன்களுக்கு எந்த மதிப்பும் இருக்காது என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அந்த பங்குகள் 5X வளர்ந்தன. ஒருவருட முடிவில் என்னுடைய முதல் பங்கு ஆப்ஷன்களை விற்றுக்கொள்ளும் தேதி வரும்வரை யாஹூவில் இருந்தேன். 1999 கோடையில் பங்குகளை விற்றுவிட்டு யாஹூவில் இருந்து விலகிவிட்டேன். ஓவியம் வரைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதே மறந்துவிட்டது. நான்கு வருடங்களாக என் மூளை முழுவதும் மென்பொருளும், ஆண்களின் சட்டைகளும் மட்டுமே நிரம்பி இருந்தது. இந்த வேலைகளை செய்ததே நான் பணக்காரனாகி ஓவியம் வரைவதற்காகத்தான். இப்பொது பணக்காரனாகி விட்டதால், நான் ஓவியம் வரையலாம் என்று எனக்கு நானே நினைவூட்டிக் கொண்டேன். 

நான் கிளம்புகிறேன் என்று சொன்னபோது, யாஹூ மேலாளர் என்னுடன் நீண்ட நேரம் உரையாடினார். என் எதிர்கால திட்டங்களை பற்றி பேசினோம். என்னவெல்லாம் நான் வரையப்போகிறேன் என்று அவரிடம் சொன்னேன். அவர் அக்கறையாக கேட்டது எனக்கு உண்மையிலே மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது யோசித்து பார்த்தால், நான் பொய் சொல்கிறேன் என அவர் நினைத்திருக்கலாம். என்னுடைய பங்கு ஆப்ஷன்களின் அப்போதைய மதிப்பு – மாதம் $2 மில்லியன் டாலர்கள். நாம் அவ்வளவு பணத்தை வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால், நான் மீண்டும் ஒரு நிறுவனத்தை துவங்குவதற்காக மட்டுமே இருக்கவேண்டும், அப்படி நான் ஒரு நிறுவனம் துவங்கினால், என்னுடன் யாஹூவில் இருந்து ஆட்களை அழைத்து சென்று விடுவேன் என அவர் நினைத்திருந்தார். வலைதள குமிழி காலகட்டத்தின் உச்சம் அது. யாஹூவே அதன் மையம். என் மேலாளர் அப்போழுது பில்லியனர். யாஹூவை விட்டு விட்டு ஒரு புதிய நிறுவனத்தை துவங்க செல்வது ஒரு கிறுக்குத்தனமான, ஆனால் நிகழக்கூடிய திட்டம். 

ஆனால் நான் உண்மையிலே ஓவியம் வரைவதற்காகத்தான் வேலையை விட்டேன். உடனடியாக ஓவியம் வரையவும் துவங்கினேன். மேலும் நேரத்தை வீணடிக்க முடியாது.  பணக்காரனாவதற்கே நான்கு வருடங்கள் போய்விட்டது. தங்கள் நிறுவனங்களை விற்று விட்டு செல்லும் நிறுவனர்களுக்கு இப்பொழுதும் என் அறிவுரை இதுதான் – கொஞ்சம் ஒய்வெடுங்கள். நானும் அதைத்தான் செய்திருக்க வேண்டும். எங்கேயாவது சென்று – ஒன்றிரண்டு மாதங்களுக்கு ஒன்றும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த எண்ணம் எனக்கு தோன்றவே இல்லை.

நான் ஓவியம் வரைய முயற்சித்தேன். ஆனால் ஓவியம் வரைவதற்கான உந்துதலோ, சக்தியோ என்னிடம் இல்லை. கலிஃபோர்னியாவில் எனக்கு நண்பர்கள் பெரிய அளவில் இல்லை என்பது ஒரு சிக்கல். சாண்டா க்ரூஸ் மலையில் வீடு வாங்கியதும் அந்த சிக்கலை மேலும் அதிகப்படுத்தியது. அருமையான இடம் – ஆனால் பல மைல் தொலைவிற்கு எதுவுமே இல்லை. மேலும் சில மாதங்கள் தாக்கு பிடித்து பார்த்தேன், பின்பு விரக்தியில் நியூயார்க்கிற்கு திரும்பி விட்டேன். நியூயார்க்கிற்கு திரும்பிய உடன் – அமெரிக்க வாடகை-சட்டத்தை பற்றி தெரியவில்லை என்றால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் – என்னுடைய பழைய வீடு இன்னும் அப்படியே இருந்தது. என் பழைய வாழ்க்கையின் ஒரு சமாதிபோல. ஐடெல் இன்னும் நியூயார்க்கில் தான் இருந்தார். மேலும் சிலர் ஓவியம் வரைய முயற்சித்து கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் யாரையும் எனக்கு தெரியவில்லை.

நியூ யார்க் திரும்பிய உடன், என் பழைய வாழ்க்கையை வாழத் துவங்கினேன். ஒரே வித்யாசம் இப்போது நான் பணக்காரன். என்னுடைய பழக்க வழக்கங்களை தொடர்ந்தேன் – முன்பில்லாத சில கதவுகள் இப்போது இருந்தது. நடக்கும்போது கொஞ்சம் கால் வலித்தால், கையை உயர்த்தினால் போதும் – ஒரு டாக்ஸி நின்று ஏற்றிக்கொள்ளும். அழகிய உணவகத்தின் வழியே சென்றால் உள்ளே சென்று உணவு சாப்பிடலாம். கொஞ்ச காலத்திற்கு உற்சாகத்தை தந்தது. நன்றாக ஓவியம் வரைய முடிந்தது. ஸ்டில் லைப் ஓவியத்தில் புதிய முயற்சிகளை செய்து பார்த்தேன். ஒரு ஓவியத்தை பழைய முறையில் வரைந்து, அதை புகைப்படமெடுத்து, பெரிதாக பிரிண்ட் செய்து, ஒரு கான்வாஸில் அதை பின்புலமாக வைத்து மீண்டும் அதே பொருளை வைத்து ஒரு ஓவியம் வரைந்தேன்.  

அதே நேரம் ஒரு அடுக்குமாடி வீட்டை வாங்கும் முயற்சியில் இருந்தேன். இந்த முறை எந்த ஏரியாவில் வசிக்கவேண்டும் என்று தேர்வு செய்யும் இடத்தில் இருந்தேன். நியூ யார்க்கின் கேம்பிரிட்ஜ் எங்கே உள்ளது என நிறைய வீடு விற்பனையானர்களிடம் கேட்ட பின்பு, கொஞ்சம் பொறுமையாக தெரிந்தது – அப்படிப்பட்ட இடம் நியூயார்க்கில் இல்லை என்று. ம்ம்.

2000த்தின் இளவேனில் காலத்தில் எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வியாவெப் அனுபவத்தில் வலைதள செயலிகள்தான் எதிர்காலம் என்று தெரிந்தது. வலைதள செயலிகள் உருவாக்குவதற்கு என ஒரு செயலியை ஏன் உருவாக்கக்கூடாது ? பிரௌசரிலே தங்கள் நிரல்களை எழுதிக்கொள்ள ஏன் அனுமதிக்கக்கூடாது ? [9] ஒரு API மூலம் நிறைய சேவைகளை வழங்க முடியும்: தொலைபேசி அழைப்புகளை ஏற்கலாம், கடன் அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம்,… 

வேறெதையும் பற்றி யோசிக்கவிடாமல் இந்த ஐடியா என்னை ஆட்கொண்டது. இதுதான் எதிர்காலமாக இருக்கப்போகிறது என்பது தெளிவாகவே தெரிந்தது. எனக்கு மேலும் இன்னொரு நிறுவனத்தை துவங்க விருப்பம் இல்லை, ஆனால் இந்த யோசனையை வைத்து ஏதாவது செய்ய வேண்டும், ஆகவே கேம்பிரிட்ஜிற்கு மீண்டும் சென்றேன். ராபர்ட்டை எப்படியாவது இழுக்க முடியுமா என்று பார்த்தேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது. ராபர்ட் எம்.ஐ.டியில் ஒரு ஆராய்ச்சியாளராக இருந்தான். முன்பு என்னுடைய திட்டங்களில் வேலை செய்ததனால் அவனுக்கு நிறைய பணம் கிடைத்தது. ஆனால் அதற்காக அவன் நிறைய நேரம் செலவிட்டிருந்தான். என் ஐடியா செயல்படுத்தக்கூடியது என்று அவன் சொன்னாலும், என்னுடன் வர முடியாது என்று தெளிவாக சொல்லிவிட்டான். 

ஹ்ம்ம். சரி, அப்போது நானே செய்ய வேண்டியதுதான். நான் டான் ஜிஃபினை வேலைக்கு சேர்த்தேன். என்னுடன் அவன் வியாவெப்பில் வேலை செய்தவன். மேலும் இரண்டு மாணவர்களை பகுதிநேர ஊழியர்களாக சேர்த்துக்கொண்டோம். நாங்கள் செய்ய முயற்சித்தது – இருபது நிறுவனங்கள் செய்ய வேண்டியது மற்றும் எண்ணற்ற ஓபன் சோர்ஸ் மென்பொருள்களின் கலவையை. செயலிகளின் நிரல் மொழி – லிஸ்பின் ஒரு வடிவமாக இருக்கப்போகிறது. லிஸ்ப்பை எல்லோருக்குமான நிரல் மொழியாக மாற்றிவிட முடியும் என நான் நினைக்கவில்லை; டைலன் செய்ததை போல சில மாற்றங்களை செய்ய வேண்டியிருந்தது.   

வியாவெப் போன்ற நிறுவனத்திற்கு அப்போழுது ஒரு பெயர் உருவாகிவிட்டது – “அப்ளிகேஷன் சர்வீஸ் ப்ரொவைடர்”- (செயலிகள் சேவை வழங்குனர்) – ASP. அந்த பெயர் நீடித்து நிற்கவில்லை. “சாஃப்ட்வேர் ஆஸ் எ செர்வீஸ்” – SAAS – (மென்பொருள் ஒரு சேவையாக) என்ற பெயர் அதை எடுத்துக்கொண்டது. என்னுடைய புதிய நிறுவனத்தை நான் ஆஸ்ப்ரா என்று பெயரிட்டேன்.

நான் செயலிகள் கட்டுமானத்தை உருவாக்க முயற்சித்தேன். டான் வலை கட்டுமானத்தையும், இரண்டு மாணவர்களும் முதல் இரண்டு சேவைகளையும் (படங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள்) உருவாக்க முயற்சித்தார்கள். கோடையின் பாதியிலே நான் ஒரு நிறுவனத்தை நிர்வகிக்க விரும்பவில்லை என்று தெரிந்தது – குறிப்பாக ஒரு பெரிய நிறுவனத்தை. ஆஸ்ப்ரா பெரிதாக ஆகும்போல தெரிந்தது. நான் வியாவெப்பை துவங்கியதே எனக்கு பணம் வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இப்பொழுது என்னிடம் பணம் இருப்பதால், நான் எதற்கு இதை செய்ய வேண்டும் என்று தோன்றியது. என்னுடைய தொலை நோக்கு பார்வையை ஒரு கம்பெனியாகத்தான் செயல்படுத்த வேண்டுமென்றால், அப்படிப்பட்ட பார்வையே தேவையில்லை. அதன் ஒரு பகுதியை ஓபன் சோர்ஸ் திட்டமாகவே செயல்படுத்தி கொள்ளலாம்.

ஆனால் நான் இதை உருவாக்க செலவிட்ட நேரம் வீணாகவில்லை என்பதை கண்டு கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நாங்கள் Y Combinator துவங்கிய, இதை போன்ற மென்பொருள் உருவாக்க முயற்சிக்கும் நிறைய ஸ்டார்டப்களை எதிர்கொண்டபோது உதவியாக இருந்தது. அந்த மென்பொருளை வடிவமைக்கும் நேரம், அதை உருவாக்க எழுதிய நிரல்கள் எல்லாம் பயன்பட்டது.

நான் உருவாக்கிய அந்த ஓப்பன் சோர்ஸ் நிரல்கள் தான் லிஸ்பின் புதிய வடிவம். லிஸ்ப் கொந்தர்கள் புதிய லிஸ்பை வடிவமைக்கும் கனவுகள் கொண்டிருப்பார்கள். லிஸ்பில் மட்டுமே உள்ள மற்ற நிரல் மொழிகளில் இல்லாத ஒரு வசதி, அதில் புதிய வழக்குகளை உருவாக்க முடியும் என்பதும். மேலும் எல்லா வழக்குகளிலும் உங்களுக்கு தேவையான ஒன்று இல்லை என்ற எண்ணமும். எனக்கும் அப்படி தோன்றியது. கோடையின் முடிவில் நானும், டேனும் லிஸ்ப் மொழியும் புதிய வழக்கு ஒன்றை உருவாக்கும் பணிக்கு மாறினோம். அதற்கு ஆர்க் என பெயரிட்டேன். கேம்பிரிட்ஜில் ஒரு புதிய வீட்டை வாங்கினேன்.

அடுத்த இளவேனிலில் ஒரு மின்னல் வெட்டியது. லிஸ்ப் மாநாட்டில் பேசுவதற்கு அழைப்பு வந்தது. நாங்கள் வியாவெப்பில் எப்படி லிஸ்பை பயன்படுத்தினோம் என்று ஒரு உரை ஆற்றினேன். அந்த உரையின் எழுத்து வடிவத்தை என் தளத்தில் பகிர்ந்தேன் – paulgraham.com. அந்த தளத்தை வியாவெப்பிற்கு பல வருடங்களுக்கு முன்பே உருவாக்கியிருந்தேன். ஆனால் எதற்கும் பயன் படுத்தவில்லை. ஒரே நாளில் 30,000 பார்வையாளர்கள் பார்த்திருந்தார்கள். எப்படி இது நடந்தது ? யாரோ ஒருவர் என் தள சுட்டியை ஷ்ளாஷ்டாட் தளத்தில் பகிர்ந்திருந்தார்.[10]  

ஆகா, இதோ வாசகர்கள் உள்ளார்கள் என்று தெரிந்தது. நான் ஏதாவது எழுதி அதை இணையத்தில் வெளியிட்டால், அதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். இப்போழுது இது மிக எளிதாக தோன்றுகிறது. ஆனால் அச்சு ஊடகங்கள் காலத்தில், வாசகர்களிடம் சென்று சேர்வதற்கு, எடிட்டர்கள் என்னும் பூதங்கள் காக்கும் மிக குறுகிய வழிகளே இருந்தன. நீங்கள் எழுதிய எதுவும் வாசகர்களை சென்று சேர்வதற்கு ஒன்று நூலாகவோ, அல்லது செய்தித்தாளிளோ, பத்திரிக்கையிலோ வெளிவந்தால் தான் உண்டு. ஆனால் இப்போழுது  யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் இணையம் மூலமாக பதிப்பிக்கலாம்.

1993 இல் இருந்தே இதற்கான வாய்ப்புகள் இருவாகிவிட்டாலும், நிறைய பேர் அதை அப்போது உணரவில்லை. இணையக் கட்டுமானத்தை உருவாக்கியதில் பங்களித்திருந்தாலும், அதில் நிறைய நேரம் செலவிட்டிருந்தாலும், ஒரு எழுத்தாளராக இருந்தும், எனக்கே இதை புரிந்து கொள்ள எட்டு வருடங்கள் ஆனது. அதன் முழு தாக்கத்தையும் புரிந்துகொள்ள மேலும் பல ஆண்டுகள் பிடித்தது. கட்டுரைகளின் புதிய காலம் துவங்கியது.[11]

பதிப்பு காலத்தில், கட்டுரைகள் வெளியிடுவதற்கான வழிகள் மிக குறைவு. அதிகார பீடத்தில் வைக்கப்பட்டிருந்த சிந்தனையாளர்கள் தவிர – நியூயார்க்கில் சரியான கேளிக்கை விருந்துகளுக்கு சென்றவர்கள் – ஒரு துறையின் நிபுணர்கள் அவர்கள் துறைகள் பற்றி மட்டுமே எழுதமுடியும். பதிப்பிக்க வழியில்லாததால் நிறைய கட்டுரைகள் எழுதப்படவில்லை. இப்பொழுது அதற்கு வழியிருப்பதால், நான் அவற்றை எழுத திட்டமிட்டேன்.[12]

நான் நிறைய வெவ்வேறு வேலைகளை செய்தேன், ஒரு திருப்பம் வரும்வரை, நான் எதை செய்வது என்று முடிவு செய்யும்வரை, நான் கட்டுரைகள் எழுதி வெளியிட வேண்டும் என முடிவு செய்தேன். அப்போதே நான் என்ன செய்தாலும், கட்டுரைகளையும் தொடர்ந்து எழுத வேண்டும் என முடிவு செய்தேன்.

துவக்கத்தில் இணையதள கட்டுரைகளுக்கு மையமான இடம் இல்லை. ஏதோ சில கிராக்குகள் உளறல்களை ஜியோசிட்டீஸில் உள்ள தளங்களில் வெளியிட்டது போல இருக்கலாம். நியூயார்க்கர் பத்திரிக்கையின் அழகிய வடிவமைப்பில் வெளியிடப்படாமல் இருக்கலாம். ஆனால் என் அனுபவத்தில் அது சோர்வுறச்செய்யாமல் உற்சாகமூட்ட கூடியதாகத்தான் இருந்தது.  

என் வாழ்வில் ஒரு பேட்டர்ன் இருந்தது. பெரிய புகழை கொண்டுவராத செயல்களில் ஈடுபட்டது பின்னாளில் சரியாக அமைந்தது – குறைந்தபட்சம் எனக்கு. இருப்பினும் வாழ்வு அதிக புகழை ஈர்க்காத ஓவிய வடிவமாகத்தான் இருந்தது. என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள் என்று யாரோ ஒருவர் கேட்டால், என் இணைய தளத்தில் வெளியிடப்போகும் ஒரு கட்டுரை என்றால், ஒரு புரியாத பார்வையே பதிலாக வரும்.  

புகழைத் தராத செயல்கள் எல்லாம் நல்லவை என்று அர்த்தம் அல்ல. நீங்கள் புகழைத் தராத ஏதோ ஒரு செயலுக்கு ஈர்க்கப்பட்டீர்கள் என்றால் அந்த செயலில் உண்மையிலே கண்டு கொள்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது என்றும், உங்களுடைய நோக்கங்கள் சரியானவையே என்பதற்கான அறிகுறிகள் அவை. பெருஞ்சாதனை புரிய கூடியவர்களுடைய நோக்கங்கள் சரியில்லை என்றால் அது மிக ஆபத்தானது.  மற்றவர்களை ஈர்க்கவேண்டும் என்ற ஆசைபோல உங்களை தடம் புரள செய்யக்கூடியது ஒன்று இல்லை. அதனால் புகழை தராத செயல்களில் நீங்கள் ஈடுபடும்போது, சரியான வழியில் தான் செல்கிறீர்கள் என்ற உத்திரவாதத்தை அது தரவில்லை என்றாலும், குறைந்தபட்சம் நீங்கள் தவறான பாதையில் செல்லவில்லை என்ற உத்திரவாதத்தை தரும்.  

அடுத்த பல ஆண்டுகளுக்கு நான் நிறைய கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் எழுதினேன். கொந்தர்களும் ஓவியர்களும் (Hackers & Painters) என என் கட்டுரையின் தலைப்பிலேயே ஓ’ரெய்லி அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட்டது. ஒவ்வொரு வியாழக் கிழமையும் என் நண்பர்களின் கூடுகைக்காக இரவு உணவு சமைத்தேன். ஒரு கூட்டத்திற்கு எப்படி சமைக்க வேண்டும் என அதன் மூலம் தெரிந்து கொண்டேன். அலுவலகத்திற்காக கேம்பிரிட்ஜில் மேலும் ஒரு கட்டிடம் வாங்கினேன். முன்பு மிட்டாய் கடையாக (பலான பட ஸ்டூடியோவாகவும்) இருந்தது என்றார்கள்.  

2003 அக்டோபர் இரவில் என் வீட்டில் ஒரு பெரிய விருந்து நடந்தது. வியாழக்கிழமை விருந்திற்கு வரும் என் நண்பர் மரியா டேனியல்ஸின் புத்திசாலித்தனமான யோசனை அது. மூன்று பேர் அவர்களின் எல்லா நண்பர்களையும் ஒரே விருந்திற்கு அழைக்க வேண்டும். விருந்தினர்களுக்கு விருந்திற்கு வரும் மூன்றில் இரண்டு பங்கு மக்களை தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவர்களுக்கு புதியவர்களை பிடித்திருக்கலாம். அப்படி வந்த விருந்தினர்களில் ஒரு பெண்ணை எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆனால் எதிர்காலத்தில் மிகப்பிடிக்க போகிறது: ஜெஸிக்கா லிவிங்ஸ்டன். சில நாட்கள் கழித்து அவரை டேடிங்கிற்கு அழைத்தேன். 

ஜெஸிக்கா பாஸ்டன் இன்வெஸ்ட்மெண்ட் வங்கியின் மார்கெட்டிங் துறை தலைவர். அந்த வங்கி ஸ்டார்டப்களை பற்றி தங்களுக்கு தெரியும் என நினைத்திருந்தது. ஆனால் என்னுடைய ஸ்டார்டப் உலக நண்பர்களை சந்தித்ததன் மூலம், உண்மையான நிலவரத்தை அறிந்தபோது, ஜெஸிக்கா ஆச்சர்யமடைந்தார். அந்த கதைகளின் வண்ணங்கள் அவரை ஈர்த்தன. ஸ்டார்டப் நிறுவனர்களின் பேட்டிகளை ஒரு புத்தகமாக தொகுத்தார். 

அந்த வங்கிக்கு நிதிச்சிக்கல் வந்தபோது, தன் அணியில் இருந்த பாதிபேரை வேலையை விட்டு அனுப்பவேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். புதிய வேலையை தேடத்துவங்கினார். 2005இன் துவக்கத்தில் பாஸ்டனில் ஒரு முதலீட்டு நிறுவனத்தின் ஒரு விளம்பரத்துறை வேலைக்காக நேர்காணலுக்குச் சென்றார். அந்த நிறுவனம் தங்கள் முடிவை சொல்வதற்கு பல வாரங்கள் ஆனது. அந்த இடைப்பட்ட காலத்தில் வென்ச்சர் கேப்பிடல் எனும் முதலீட்டுத்துறையில் உள்ள தீர்க்கப்பட வேண்டிய சிக்கல்களை சொல்லி கொண்டிருந்தேன். ஒரு பெரிய முதலீடாக செய்யாமல், நிறைய சிறு முதலீடுகளை செய்யவேண்டும்; எம்பிஏ பட்டதாரி நிறுவனர்களைவிட, தொழில்நுட்பத்தில் தேர்ச்சி உடைய இளைஞர்களில் முதலீடு செய்ய வேண்டும்; நிறுவனர்களையே தலைமை செயல் அலுவலர்களாக (CEO) நீடிக்கவிட வேண்டும்,..  

தொடர்ந்து கட்டுரைகள் எழுதுவதற்கு எப்பொழுதும் உரை ஆற்றுவதற்கு தயாராக இருப்பது உதவும். ஒரு குழு முன்பு எழுந்து, அவர்களின் நேரத்தை வீணாக்காமல் பேச வேண்டிய தேவை, எப்பொழுதும் கற்பனையை பெருமளவில் தூண்டும். ஹார்வேர்ட் கம்ப்யூட்டர் சொசைட்டி, இளநிலை மாணவர்களின் கணினி கிளப், என்னை ஒரு உரை ஆற்ற சொன்ன போது, ஒரு “ஸ்டார்டப்பை துவங்குவது எப்படி” என்று உரை ஆற்றலாம் என நினைத்தேன். நான் செய்த மோசமான தவறுகளை அவர்கள் செய்யாமல் இருப்பதற்காக.

அந்த உரையை ஆற்றும் போது, உங்கள் ஸ்டார்டப்களை துவங்குவதற்கான முதலீடுகளை தேடுவதற்கான சரியான இடம், வெற்றிகரமான ஸ்டார்டப்களின் நிறுவனர்களே. அவர்கள் சிறந்த அறிவுரைகளையும் தருவார்கள். அவர்களெல்லாம் என்னையே பார்ப்பது போல இருந்தது. என்னுடைய இன்பாக்ஸ் பணம் கேட்டு வரப்போகும் தொழில் திட்ட இமெயில்களால் நிறையும் என பயந்து, “ஆனால் என்னிடம் வராதீர்கள்” என்று சொன்னபடி என் உரையை தொடர்ந்தேன். இதற்கு மேலும் துவக்க முதலீட்டில் (angel investing) ஈடுபடுவதை தள்ளிப்போட வேண்டாம் என்று பின்பு எனக்கு தோன்றியது. யாஹூ எங்களை வாங்கி ஏழு வருடங்கள் கடந்து விட்டது. அப்போதிருந்தே ஸ்டார்டப்களில் துவக்க மூதலீட்டாளராக செயல்பட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஒன்றில் கூட பணத்தை முதலீடு செய்யவில்லை.

அதே நேரத்தில் ராபர்ட்டுடனும், ட்ரெவோருடனும் ஏதாவது துவங்கலாம் என்று திட்டங்கள் தீட்டி கொண்டிருந்தேன். அவர்களோடு வேலை செய்ய முடியாததை ஒரு இழப்பாக கருதினேன். ஏதோ ஒன்றில் அவர்களோடு சேர்ந்து வேலை செய்ய முடியும் என்று தோன்றியது. 

மார்ச் 11 அன்று இரவுணவு முடித்து ஜெஸ்ஸிக்காவும் நானும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, கார்டன் மற்றும் வாக்கர் தெரு முனையில், அந்த மூன்று இழைகளும் ஒன்றாகின. நீண்ட நேரம் எடுத்துகொள்ளும் முதலீட்டாளர்களை தூக்கி தூர வீசுவோம். நாங்களே ஒரு முதலீட்டு நிறுவனத்தை துவங்கி, நாங்கள் அதுவரை பேசிக்கொண்டிருந்த யோசனைகளை செயல்படுத்துவோம். நான் அதற்குண்டான பணத்தை மூதலீடாக தருவேன். ஜெஸ்ஸிக்கா அவருடைய வேலையை துறந்து வந்து இந்த புதிய நிறுவனத்தில் வேலை செய்வார். ராபர்ட்டும், ட்ரெவோரும் பார்ட்னர்களாக சேர்ந்து கொள்வார்கள்.[13]

மீண்டும் ஒருமுறை அறியாமை எங்களுக்கு சாதகமாக வேலை செய்தது. ஏஞ்சல் இன்வெஸ்டர்களாக எப்படி ஆவது என்று எங்களுக்கு தெரியாது. 2005 இல் பாஸ்டனில் சொல்லி கொடுப்பதற்கு எந்த ரான் கான்வேக்களும் (Ron Conway) இல்லை. அதனால் எங்களுக்கு எது சரியாக தோன்றுகிறதோ அதை செய்தோம். அவற்றில் சில மிக புதுமையானவை.

Y Combinator இல் நிறைய விஷயங்கள் உண்டு. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் உருவாக்கவில்லை. நாங்கள் முதலில் “ஏஞ்சல் நிறுவனம்”. அந்த நாட்களில் இந்த இரு சொற்களும் ஒன்றாக ஒலிக்காது. வென்ச்சர் காப்பிடல் நிறுவனங்கள் இருந்தன, அவற்றில் முதலீடு செய்வதற்கென்றே ஆட்கள் வேலை செய்தார்கள், ஆனால் அவர்கள் பெரிய, மில்லியன் டாலர் முதலீடுகளை மட்டுமே செய்தார்கள். ஏஞ்சல்கள் இருந்தனர், சிறிய முதலீட்டை செய்வார்கள். ஆனால் அவர்கள் தனி நபர்கள். பெரும்பாலும் அவர்களுக்கு வேறு முழு நேர வேலைகள்  இருக்கும். முதலீடு ஒரு பகுதிநேர வேலையாகவே இருக்கும். ஆனால் அவர்கள் இருவருமே நிறுவனர்களுக்கு துவக்கத்தில் அவ்வளவு உதவிகரமாக இல்லை. ஏனென்றால் வியாவெப்பின்போது சிலவற்றில் எங்களுக்கு பெரிய உதவிகள் கிடைக்கவில்லை. உதாரணமாக, ஜூலியன் எங்களை ஒரு நிறுவனமாக பதிவு செய்தது எங்களுக்கு ஒரு மாயம் போல இருந்தது. சிக்கலான மென்பொருளை எழுதிவிடலாம், ஆனால் ஒரு நிறுவனமாக பதிவுசெய்தல், சட்டதிட்டங்கள், பங்குகள், இதையெல்லாம் எப்படி செய்வது ? எங்கள் திட்டம் வெறும் முதலீடு செய்வது மட்டுமல்ல, ஆனால் ஜூலியன் எங்களுக்கு செய்தவற்றையெல்லாம் ஸ்டார்டப்களுக்கு செய்வது.

YC ஒரு நிதி நிறுவனமாக துவங்கவில்லை. அதற்கு பெரிய நிதி தேவைப்படாததால் எங்களுடைய சொந்த பணத்தை கொண்டே துவக்கிவிட்டோம். 99% வாசகர்கள் இந்த வரியை கடந்து சென்றுவிடுவார்கள். ஆனால் தொழில்முறை முதலீட்டார்கள் “ஆகா. அப்படியென்றால் எல்லா வருமானமும் அவர்களுக்கே” என நினைக்கலாம். மீண்டும் சொல்கிறேன், அப்படி நாங்கள் முன்பே திட்டமிடவில்லை. எங்களுக்கு விசி நிறுவனங்கள் எப்படி துவங்கப்பட்டிருந்தன என்று தெரியவில்லை. ஒரு முதலை திரட்ட வேண்டும் என்று எங்களுக்கு தோன்றவில்லை. அப்படி தோன்றியிருந்தால், எங்கே துவங்க வேண்டும் என்று தெரிந்திருக்காது. [14]

YC யுடைய தனிச்சிறப்பே அதன் பேட்ச் மாடல்தான்: நிறைய ஸ்டார்ட்அப்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்வது, வருடத்தில் இருமுறை, அதன்பின் மூன்று மாதங்கள் முழூமூச்சாக அவற்றிற்கு உதவி செய்வது. அதை நாங்கள் எதேச்சையாகத்தான் கண்டுபிடித்தோம் – எங்களுக்கு முதலீட்டை பற்றி தெரியாததால். நிறைய முதலீடுகள் செய்தால்தான் கற்றுக்கொள்ளலாம். நிறைய ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒரே நேரத்தில் முதலீடு செய்து கற்றுக்கொள்வது அதற்கு ஒரு வழியில்லையா? இளங்கலை பொறியியல் மாணவர்கள் நிறைய தொழில்நுட்ப நிறுவனங்களில் கோடைகாலத்தில் பகுதிநேர வேலை (internship) செய்தார்கள் என்பது தெரியும். ஏன் கோடைகாலத்தில் ஒரு திட்டத்தை துவக்கி, மாணவர்களையே அவர்களுடைய ஸ்டார்டப் நிறுவனங்களை துவங்க செய்யக்கூடாது? கத்துக்குட்டி முதலீட்டாளர்கள் என்ற குற்ற உணர்ச்சி இருக்காது, ஏனென்றால் அவர்களும் ஒருவகையில் கத்துக்குட்டி நிறுவனர்கள். இதில் நாங்கள் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க முடியவில்லை என்றாலும், எங்களுக்கு முதலீட்டில் அனுபவம் வளரும். மாணவர்களுக்கும் மைக்ரோசாஃபிட்டில் பகுதிநேர வேலையைவிட சுவாரஸ்யமாக கோடையை செலவிடலாம்.

கேம்பிரிட்ஜில் நான் வாங்கிய கட்டிடத்தை எங்கள் தலைமை அலுவலகமாக பயன்படுத்தினோம். நாங்கள் எல்லோரும் சேர்ந்து வாரத்தில் ஒருநாள் இரவு உணவு உண்போம் – செவ்வாய்கிழமைகளில். ஏற்கனவே நான் எல்லோருக்கும் வியாழனில் உணவு சமைக்கிறேன். இரவு உணவிற்குபின், ஸ்டார்ட் அப்களில் அனுபவம் உள்ளவர்களை அழைத்து வந்து உரையாற்ற வைப்போம்.

இளங்கலை மாணவர்கள் கோடைக்கால வேலைகளைப்பற்றி அப்போது முடிவெடுத்து கொண்டிருப்பார்கள் என்று தெரியும். அதனால், சில நாட்களிலேயே “கோடைகால நிறுவனர்கள் திட்டம்” SFP என்று ஒன்றை சும்மா உருவாக்கினோம். இளங்கலை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என என்னுடைய தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டேன். கட்டுரைகள் எழுதுவது “டீல் ஃப்ளோ”விற்கு உதவும் (முதலீட்டாளார்களின் சொற்களின்படி) என்று நான் கற்பனை செய்துபார்க்கவில்லை. ஆனால் அது மிக சிறந்த வழியாக இருந்தது.[15] கோடைகால நிறுவனர்கள் திட்டத்திற்கு 225 விண்ணப்பங்கள் வந்திருந்தன. எங்களுக்கு இன்னுமொரு ஆச்சரியம் – அதில் நிறைய விண்ணப்பங்கள் ஏற்கனவே பட்டம்பெற்ற அல்லது வரும் ஆண்டில் பட்டம்பெறப்போகும் மாணவர்களிடம் இருந்து வந்தது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட இந்த SFP தீவிரமான ஒன்றாக மாறிக்கொண்டிருந்தது. 

அந்த 225ந்தில் இருந்து 20 குழுக்களை நேர்முகத்திற்கு அழைத்திருந்தோம். 8 குழுக்களை தேர்ந்தெடுத்தோம். அவர்கள் ஒரு திறமையான குழு. அந்த முதல் குழுவில் ரெட்டிட், ட்விட்ச் துவங்கிய ஜஸ்டின் கான் மற்றும் எம்மட் ஷியர், RSS Feedஐ எழுதிய ஆரோன் ஸ்வாட்ஸ் – (பின்னாளில் ஓப்பன் ஆக்ஸஸ்க்கான உயிர்தியாகம் செய்தவர்), சாம் ஆல்ட்மேன் (பின்னாளில் YCயின் இரண்டாவது தலைவராக பொறுப்பேற்று கொண்டவர்). முதல் குழு திறமையானவர்களாக அமைந்தது அதிர்ஷ்டத்தால் என நான் நினைக்கவில்லை. மைக்ரோசாப்ட், கோல்ட்மேன் சாக்ஸ் போன்ற மதிப்புமிக்க நிறுவனங்களில் கிடைக்கூடிய கோடைகால பகுதிநேர வேலையை வேண்டாம் என்று சொல்லி, ‘கோடைகால நிறுவனர்கள் திட்டம்’ போன்ற என்னவென்றே தெரியாத ஒன்றிற்கு வருவதென்றால் அவர்கள் தைரியமிக்கவர்களாக இருக்கவேண்டும். 

ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதலீடு என்பது இரண்டு விஷயங்களின் கலவை – ஜூலியன் எங்களுக்கு தந்தது (பத்தாயிரம் அமெரிக்க டாலருக்கு 10% பங்கு) மற்றும் எம்.ஐ.டி மாணவர்களுக்கு கிடைக்கும் கோடைகால பகுதிநேர வேலையின் சம்பளம். (ஆறாயிரம் டாலர்கள்). நாங்கள் ஒவ்வொரு நிறுவனருக்கும் ஆறாயிரம் டாலர்கள் தந்தோம் – ஒரு நிறுவனத்தில் இரு நிறுவனர்கள் இருந்தார்கள். ஆகவே ஒவ்வொரு நிறுவனத்திலும் 6% பங்குகளை வாங்கிக்கொண்டு பணிரெண்டாயிரம் டாலர்கள் முதலீடு செய்தோம். அது நியாயமாக இருக்கவேண்டும். ஏனென்றால், எங்களுக்கு கிடைத்த டீலை விட அது இரண்டு மடங்கு சிறந்தது. மேலும், அந்த அதி வெப்பமாக இருந்த அந்த முதல் கோடையில், ஜெஸ்ஸிக்கா நிறுவனர்களுக்கு இலவசமாக ஏசி வாங்கித்தந்தார்.[16]

அதிக எண்ணிக்கையிலான ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் வழியை மிக விரைவிலேயே கண்டுகொண்டோம் என்று  தோன்றியது. நிறைய ஸ்டார்டப் நிறுவனங்களில் ஒரே சமயத்தில் முதலீடு செய்வது எங்களுக்கு வசதியாக இருந்தது. ஏனென்றால் நிறைய ஸ்டார்டப்களுக்கு தேவையானவற்றை ஒரே நேரத்தில் செய்யமுடியும். ஒரே குழுவாக இருப்பது ஸ்டார்டப்களுக்கும் பயன் தந்தது. நிறுவனர்களுக்கு இருந்த பெரிய சிக்கல் தனிமை. குழுவாக இருப்பதால் அது தீர்ந்தது. நிறுவனர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை அதே குழுவில் உள்ள மற்ற நிறுவனர்களால் புரிந்துகொள்ளவும் முடிந்தது, தீர்வையும் தந்தார்கள்.

YC வளர்ந்தபோது, மேலும் நிறைய பலன்களை கண்டுகொண்டோம். YC வழியாக ஸ்டார்டப் துவங்கிய நிறுவனர்கள் ஒரு நெருங்கிய குழுவாக ஆனார்கள், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதார்கள், குறிப்பாக புதிய நிறுவனர்களுக்கும் உதவிகள் செய்தார்கள் (சில வருடங்கள் முன்பு அதே நிலையில் இருந்ததால்.) இன்னொன்றையும் கவனித்தோம்: ஒரு ஸ்டார்டப் இன்னொரு ஸ்டார்டபின் நுகர்வோர் ஆனது. “YC GDP” என்று இதை நாங்கள் கிண்டலாக சொன்னோம். YC வளர வளர அந்த கிண்டல் குறைந்து, இப்போது நிறைய ஸ்டார்டப்கள் தங்களின் குழுவில் உள்ள மற்ற ஸ்டார்டப்களில் தான் தங்களுடைய முதல் நுகர்வோர்களை கண்டு கொள்கிறார்கள்.   

ஆரம்பத்தில், நான் YCயை முழுநேரத் தொழிலாக நினைக்கவில்லை. மூன்று செயல்களைச் செய்யத் திட்டமிட்டிருந்தேன்: கொந்துவது (hack), கட்டுரைகள் எழுதுவது, YC வேலை. YC வளர்ச்சியின் உற்சாகத்தால் YC வேலை என் கவனத்தை எடுத்துக்கொண்டது. முதல் சில வருடங்களுக்கு மற்றவற்றிலும் என்னால் கவனம் செலுத்த முடிந்தது.

2006 கோடையில், ராபர்ட்டும் நானும் ஆர்க்கின் புதிய வடிவத்தில் வேலை செய்ய ஆரம்பித்தோம். புதிய ஆர்க் ஓரளவு வேகமாக இருந்தது. இந்த புதிய ஆர்க்கை சரிபார்ப்பதற்காக, அதில் நான் “ஹேக்கர் நீயுஸை” (https://news.ycombinator.com/) எழுதினேன். முதலில் அதை ஸ்டார்டப் நிறுவனர்களுக்காக, எல்லா ஸ்டார்டப் செய்திகளையும் தொகுக்கும் தளமாக “ஸ்டார்டப் நியூஸ்”  என திட்டமிட்டேன். ஆனால், சில மாதங்களில் ஸ்டார்டப்களை பற்றி மட்டுமே படித்ததால் சலிப்படைந்தேன். மேலும் இந்த தளத்தின் வாசகர்கள் ஸ்டார்டப் நிறுவனர்கள் இல்லை. எதிர்காலத்தில் ஸ்டார்டப் துவங்குபவர்கள்தான். அதனால், தளத்தின் பெயரை “ஹேக்கர் நியூஸ்” என்று மாற்றி, ஒருவரின் அறிவார்வத்தை தூண்டும் அனைத்தையும் தொகுக்க ஆரம்பித்தோம். 

 “ஹேக்கர் நியூஸ்” கண்டிப்பாக YCக்கு நன்மையை தந்தது. ஆனால் என் அழுத்தத்திற்கு பெரிய காரணமாகியது. நிறுவனர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உதவுவது மட்டுமே வேலை என்றால், என் வாழ்க்கை எளிதாக இருந்திருக்கும். “ஹேக்கர் நியூஸ்” ஆரம்பித்தது ஒரு தவறு என்றாகியிருக்கும். கண்டிப்பாக ஒருவருக்கு வரும் பெரிய அழுத்தம், குறைந்தபட்சம் அவர் செய்யும் செயலின் மையத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னுடைய வலி, நீண்ட மராத்தான் ஓட்டத்தில் தொலைதூரம் ஓடியதால் ஏற்படும் வலிபோல இல்லாமல் சரியான ஷு அணியாததால் வந்த கால் கொப்பளத்தால் ஏற்பட்ட வலியைப்போல இருந்தது. YCயில் ஏதாவது அவசர பிரச்சனை என்றால், 60% அது  “ஹேக்கர் நியூஸ்”ஸினால் வந்ததாக இருக்கும் [17].

“ஹேக்கர் நியூஸ்” போலவே YCயின் அனைத்து மென்பொருளையும் நான் ஆர்க்கில் தான் எழுதினேன். ஒரளவு ஆர்க்கில் நான் நேரம் செலவிட்டாலும், சீராக நான் ஆர்க்கை மாற்றுவதை நிறுத்தினேன். நேரமில்லை என்பது ஒரு காரணம். மேலும் எங்கள் கட்டுமானங்கள் அனைத்தும், ஆர்க்கில் இருப்பதால், தேவையில்லாமல் அதை நோண்ட வேண்டாம் என்பதும் மற்றொரு காரணம். என்னுடைய மூன்று பிராஜக்ட்டுகள் இரண்டாக குறைந்தது: கட்டுரை எழுதுவது, YC வேலை.

YC வேலை, என்னுடைய மற்ற வேலைகளை விட வேறுபட்டது. எதில் வேலை செய்யலாம் என்று நான் முடிவெடுப்பதற்கு பதில், சிக்கல்கள் தேடி வந்தன. ஒவ்வொரு ஆறு மாதங்களும், புதிய ஸ்டார்டப் குழுக்கள் வந்தன. அவர்களுடைய சிக்கல்கள் அனைத்தும் எங்கள் சிக்கல்களாயின. சிக்கல்கள் வெவ்வேறாக இருந்தன. மற்றும் நிறுவனர்கள் மிகவும் திறமையானவர்களாக இருந்தனர். அதனால் அந்த வேலை என்னை முழுவதும் ஈடுபடுத்தியிருந்தது. மிகக்குறைந்த நேரத்தில் ஸ்டார்டப்களை பற்றி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால், இந்த வழியைவிட நீங்கள் சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்திருக்க முடியாது. 

இந்த வேலையின் சில பகுதிகள் எனக்கு பிடிக்கவில்லை. நிறுவனர்களிடையே வரும் சண்டைகள், மக்கள் எப்போது பொய் சொல்கிறார்கள் என்று கண்டுபிடிப்பது, ஸ்டார்டப்களுடன் பிரச்சனை செய்தவர்களுடன் சண்டை, இன்னும் பல. ஆனால் எனக்கு பிடிக்காதவற்றிலும் கடுமையாக உழைத்தேன். கெவின் ஹேலின் சொல் என்னை பயம்கொள்ளச்செய்தது: “தலைவனைவிட வேறுயாரும் கடுமையாக உழைப்பதில்லை”. அவர் ஒரு விளக்கமாகவும், ஒரு அறிவுரையாகவும் சொன்னது அது. அந்த அறிவுரையே என்னுடைய பயத்திற்கு காரணம். YC நன்றாக வரவேண்டும் என்று விரும்பினேன். என்னுடைய கடுமையான உழைப்பு என்பது மற்றவர்களின் உழைப்பிற்கு ஒரு உச்ச வரம்பாக இருக்குமென்றால், நான் கடுமையான உழைக்கத்தான் வேண்டும்.  

2010இல் ஒரு நாள், கலிஃபோர்னியாவிற்கு நேர்காணல்கள் நடத்துவதற்கு வந்தபோது, ராபர்ட் மோரிஸ், நான் வியந்துபோகும் ஒன்றை செய்தான்: நான் கேட்காமலேயே எனக்கு அறிவுரை வழங்கினான். முன்பு ஒருமுறை மட்டுமே அவன் அப்படி செய்திருக்கிறான். வியாவெப்பில் ஒரு நாள், நான் சிறுநீரக கற்கள் ஏற்படுத்திய வலியில் குனிந்து நின்றபோது, என்னை அவன் மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறேன் என்றான். ஆர்டிஎம் சதாரணமாகவெல்லாம் அறிவுரை சொல்லக்கூடியவன் அல்ல. அவனுடைய சொற்கள் எனக்கு தெளிவாக நினைவில் இருந்தது. “நீ செய்யக்கூடிய கடைசி சிறந்த செயல் YCயாக இல்லாமல் நீ பார்த்துக் கொள்ள வேண்டும்.” 

அவன் சொன்னது அப்போழுது எனக்கு புரியவில்லை. மெல்ல புரிந்தது. நான் விலகிக்கொள்ள வேண்டும் என சொல்கிறான். அது ஒரு வித்தியாசமான அறிவுரையாக தோன்றியது. ஏனென்றால் YC சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. ஆர்டிஎம்மின் யோசனையைவிட அபூர்வமானது ஒன்று இருந்தால், அது அவனுடைய யோசனை தவறென்றாவது. ஆம், YC என்னுடைய எல்லா நேரத்தையும் எடுத்துக்கொண்டதால், நான் செய்யக்கூடிய கடைசி செயலாக YC தான் இருக்கும். YC ஏற்கனவே ஆர்க்கை விழுங்கிவிட்டது. கட்டுரைகளையும் விழுங்க ஆரம்பித்தது. ஒன்று YC என் வாழ்நாளின் வேலையாக இருக்க வேண்டும், அல்லது அதில் இருந்து நான் விலக வேண்டும். YC என் வாழ்நாள் வேலையில்லை, ஆகவே விலக முடிவு செய்தேன்.

2012இன் கோடையில் என் அம்மாவிற்கு பக்கவாதம் வந்தது. புற்றுநோயினால் ஒரு இரத்தக்கட்டி ஏற்பட்டிருந்தது. வாதம் அவளுடயை சமநிலையை குலைத்து, மருத்துவமனையிலே இருக்க வைத்திருந்தது. ஆனால் அம்மா அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு போகவேண்டும் என்றாள். நானும் என் சகோதரியும் அவளுடைய விருப்பத்தை நிறைவேற்ற விரும்பினோம். ஆரிகானிற்கு அடிக்கடி விமானத்தில் சென்று அம்மாவை பார்த்துக்கொண்டேன். விமான பயணங்களில் நிறைய யோசித்தேன். அப்படி ஒரு பயணத்தில், YCயை வேறு யாரிடமாவது ஒப்படைக்க வேண்டும் என்று தெளிவாகியது.

ஜெஸ்ஸிக்காவிடம் அவள் தலைமை பொறுப்பை ஏற்கிறாளா என்று கேட்டேன். அவள் மறுத்துவிட்டாள். சாம் ஆல்ட்மேனிடம் கேட்டுப்பார்ப்போம் என்று தோன்றியது. ராபர்ட் மற்றும் ட்ரெவோரிடம் ஆலோசித்து, எங்கள் அனைவருக்கும் பதிலாக ஒரு புதிய அணியை கொண்டு வர விரும்பினோம். அதுவரை YCயின் நிறுவனர்களாக நாங்கள் நால்வருமே அதை நடத்தினோம். YC நீண்ட நாள் நிலைக்க வேண்டும் என விரும்பினோம். அப்படியென்றால் நிறுவனர்களே நடத்தமுடியாது. சாம் ஏற்றுக்கொண்டால், சாம் YCயை மறுகட்டமைத்து கொள்ளலாம். நானும் ராபர்ட்டும் ஓய்வு பெற்றுக்கொள்வோம். ஜெஸ்ஸிக்காவும், ட்ரெவோரும் சாதாரண பங்குதாரராக மாறிக்கொள்வார்கள்.

YC யின் தலைமையை ஏற்றுக்கொள்ள விருப்பமா என்று சாமிடம் கேட்ட போது, முதலில் மறுத்தார். அணு உலைகளை உருவாக்கும் ஸ்டார்டப்பை தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நான் விடவில்லை. அக்டோபர் 2013இல் ஏற்றுக்கொண்டார். 2014 குளிர்கால குழுவில் இருந்து சாம் YCயை நடத்துவது என்று முடிவு செய்தோம். 2013இன் மீதி நாட்களில், YCயை நடத்தும் பொறுப்பை சிறிது சிறிதாக சாம் ஏற்றுக்கொண்டார். வேலையை கற்றுக்கொள்வதற்காக ஒரு புறம், என் அம்மாவை நான் கவனித்துக்கொள்ள வேண்டிய தேவை மறுபுறம். அவளுக்கு கேன்சர் திரும்பிவிட்டது.    

ஜனவரி 15, 2014இல் அம்மா இறந்துவிட்டாள். எதிர்பார்த்த மரணம் என்றாலும், அது நிகழ்ந்தபோது ஏற்கக் கடினமாக இருந்தது. 

மார்ச் மாதம் வரை YCயில் வேலை செய்தேன். டெமோ நாளுக்கு ஸ்டார்டப்கள் தயாராவதற்கு உதவினேன். அதன்பின் முற்றிலும் விலகிவிட்டேன். (இப்பொழுதும் முன்னாள் YC குழுக்கள் மற்றும் எனக்கு பிடித்தவற்றில் புதிய ஸ்டார்ட்அப் துவங்குபவர்களிடம் பேசுகிறேன். அது வாரத்தில் சில மணிநேரங்கள் மட்டுமே எடுக்கிறது.) 

அடுத்து என்ன செய்யவேண்டும்? ஆர்டிஎம்மின் அறிவுரையில் அந்த கேள்விக்கு பதில் சொல்லவில்லை. முற்றிலும் வேறேதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதனால் ஓவியம் வரைய முடிவு செய்தேன். என் முழு கவனத்தையும் செலுத்தினால், எந்தளவு என்னால் சிறப்பாக வரைய முடியும்? வரைவதற்கு தடுமாறினேன். மீண்டும் பிடிகிடைப்பதற்கு கொஞ்ச காலம் ஆகியது. ஆனால் அது என்னை முற்றிலும் ஆக்ரமித்திருந்தது [18].

2014 மீதி காலத்தை நான் ஓவியம் வரைவதிலே செலவிட்டேன். நீண்ட நாள் கழித்து, எந்த இடைஞ்சலும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. நான் முன்பிருந்ததை விட மேலும் சிறந்த ஓவியனாக வேண்டும். சுமாரான ஓவியன் என்றல்ல மேலும் சிறந்த ஓவியன். ஆனால் நவம்பர் மாதத்தில், ஓவியம் வரைந்து கொண்டிருந்தபோதே, என் ஆர்வமெல்லாம் வற்றிவிட்டது. அதுவரை, நான் வரையும் ஓவியம் எப்படி வருகிறது என்று பார்ப்பதில் பெரிய ஆர்வம் இருந்தது. ஆனால் திடீரென்று இதுவும் ஒரு வேலையை போல தோன்ற ஆரம்பித்தது. ஓவியம் வரைவதை நிறுத்தினேன். தூரிகைகளை சுத்தம் செய்து வைத்தபின், இதுவரை இன்னும் வரையவில்லை.  

சொல்வதற்கு கோழைத்தனமாக இருக்கிறது. ஆனால் கவனம் என்பது ஒரு ஜீரோ சம் (zero sum) விளையாட்டு. நீங்கள் செய்யும் செயலை தேர்ந்தெடுக்க முடிந்தால், அது உங்களின் மிகச்சிறந்த (அல்லது ஒரு நல்ல) செயலாக இல்லாமல் இருந்தால், அது மற்ற செயல்களில் இடையூறு விளைவிக்கும். ஐம்பது வயதில் செய்யும் காரியங்களை சொதப்பினால் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். 

மீண்டும் கட்டுரைகள் எழுதத்துவங்கினேன். அடுத்த சில மாதங்களில் மேலும் சில கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் சில ஸ்டார்டப்களை பற்றி இல்லை. மார்ச் 2015இல் மீண்டும் லிஸ்ப் நிரல் மொழியில் வேலை செய்யத்துவங்கினேன். ஆர்க்கில் நான் எழுதிய புதிய லிஸ்ப் மொழியை பெல் (Bel) என்று அழைத்தேன். நான்கு வருடங்கள் ஆனது – மார்ச் 26, 2015இல் துவங்கி அக்டோபர் 12, 2019 இல் முடிந்தது. ஒரு தெளிவான இலக்கு இருந்தது நல்லதாக போயிற்று, இல்லையென்றால் இத்தனை நாட்கள் அதில் வேலை செய்திருக்க முடியாது.

இந்த காலகட்டத்தில் நான் கட்டுரைகள் எழுதக்கூடாது என்று எனக்கு நானே தடை விதித்துக்கொண்டேன். இல்லையென்றால் என்னால் முடித்திருக்க முடியாது. 2015யின் பிற்பகுதியில், நான் மூன்று மாதங்கள் கட்டுரைகள் எழுதிவிட்டு, பெல்லில் வேலை செய்ய முயன்றபோது, எனக்கு அந்த நிரல் சுத்தமாக புரியவில்லை. மோசமாக எழுதப்பட்ட நிரல் என்பதால் இல்லை. கடினமான சிக்கல் என்பதான். 

பெல்லை முடிக்கும் வரை கட்டுரைகள் எதுவும் எழுத வேண்டாம் என்று முடிவு செய்தேன். சிலருக்கு நான் பெல்லில் வேலை செய்கிறேன் என்று சொல்லியிருந்தேன். பல வருடங்களுக்கு நான் ஒன்றுமே செய்யாதது போல மற்றவர்களுக்கு தோன்றினாலும், அதுவரை நான் செய்தவற்றிலே மிகக்கடுமையாக வேலை செய்தேன். சில நிரல் பழுதுகளில் பல மணிநேரம் போராடியபின் 

டிவிட்டரையோ, ஹேக்கர் நியூஸையோ பார்த்தால் “பால் கிரஹாம் இன்னும் நிரல் எழுதுகிறாரா?” என்று யாராவது கேட்டிருப்பார்கள்.

பெல்லில் வேலை செய்தது கடினமாக இருந்தாலும் திருப்தியாக இருந்தது. அதில் தீவிரமாக வேலை செய்ததால், எப்பொழுதும் என் தலையில் நிறைய நிரல் பகுதிகளை எழுதிக்கொண்டிருந்தேன். 2015இல் நல்ல வெயிலான ஒரு நாளில், என் மகன்களை கடற்கரைக்கு அழைத்து சென்றேன். அவர்கள் அலையில் ஆடியதை பார்த்தபடியே என் மனதில் லிஸ்ப் நிரலில் ஒரு சிக்கலை தீர்ப்பதை பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். வாழ்க்கையை சரியாக வாழ்வதாக தோன்றியது. எனக்கு அது ஏன் நினைவில் நிற்கிறது என்றால், எனக்கு அது புதுமையான உணர்வு. அதை நினைத்து சிறிது கடுப்படைந்தேன். நல்ல செய்தி என்னவென்றால், அதைபோன்ற அடுத்த சில வருடங்களுக்கு அதைபோன்ற நிறைய தருணங்கள் வாய்த்தது.

2016இன் கோடையில் நாங்கள் இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்தோம். எங்கள் குழந்தைகள் வேறு ஒரு நாட்டில் வாழும் அனுபவத்தை பெற விரும்பினோம். நான் பிறப்பால் பிரிட்டீஷ் குடிமகன். அதனால் இங்கிலாந்து முதல் தேர்வாக இருந்தது. ஒரு வருடம் வாழலாம் என்றுதான் முதலில் திட்டமிட்டோம். அந்த ஒரு வருடம் மிக பிடித்திருந்ததால், அங்கேயே தங்கிவிட்டோம். இங்கிலாந்தில்தான் நான் பெல்லை முழுவதும் எழுதினேன். 

2019 பிற்பகுதியில் பெல்லை ஒருவழியாக முடித்துவிட்டேன். 

இப்பொழுது மீண்டும் கட்டுரைகள் எழுதமுடியுமென்பதால், கட்டுரைகளின் தலைப்பை தேர்ந்தெடுத்து சேர்த்துவைத்துள்ளேன். 2020 இல் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்த்போதே, அடுத்து செய்யும் செயல்கள் என்ன என்று யோசிக்க துவங்கினேன். என்ன செய்யவேண்டும் என்று எப்படி தேர்ந்தெடுப்பது? சரி, என்ன செய்யவேண்டும் என்று முன்பு எப்படி தேர்ந்தெடுத்தேன்? அந்தக் கேள்விக்கு விடையாக ஒரு கட்டுரை எழுதினேன். அந்த பதில் எவ்வளவு நீளமாகவும், குழப்பமாகவும் இருந்தது என்பதை கண்டுகொண்டது எனக்கு ஆச்சரியத்தை தந்தது. இந்த வாழ்க்கை வாழ்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தால், மற்றவர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம், இதே போன்ற ஒரு குழப்ப வாழ்க்கையை வாழ்பவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கலாம். அதனால், மற்றவர்கள் படிப்பதற்காக அதன் நீளமான வடிவத்தை எழுதினேன். அந்த கட்டுரையின் கடைசி வரி இது.  

குறிப்புகள்:

[1] கணினிகளில் பரிணாமத்தில் ஒரு படியை மிதிக்கமாலே தாண்டிவிட்டேன்: நேரப்பகிர் கணினிகள். பேட்ச் பிராசசிங் கணினிகளில் இருந்து நான் நேரடியாகவே குறுங்கணினிகளுக்கு சென்றது,  எனக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.

[2] இத்தாலிய மொழி சொற்களில் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள்தான் ஆங்கிலத்தில் இருந்து மாறும். அருவமான கோட்பாடுகளுக்கு உரிய சொற்களை ஆங்கிலத்தில் அதற்கிணையான சொற்களில் இருந்தே ஊகிக்கமுடியும். (polluzione போன்ற சொற்களை தவிர்த்து). நிறைய அருவமான கோட்பாட்டுச் சொற்களை சில வினைச்சொற்களை பயன்படுத்தி ஒரு சங்கிலி போல எழுதினால், சுமாரான இத்தாலிய மொழியை வைத்து நீங்கள் கட்டுரை எழுதிவிடலாம்.  

[3] நான் பியாசா சான் பெலிஸ் 4இல் தங்கியிருந்தேன். அகெடமியாவிற்கு செல்லும் வழி, பழைய பிளாரென்ஸ் நகரின் மையத்தின் வழியாக செல்லும்: பிட்டியை கடந்து, பாலத்தின் எதிர்புறம், ஒர்சான்மிச்சேலை கடந்து, டுமோவிற்கும் பேப்டிஸ்டெரிக்கும் இடையில். வியா ரிகொசொலி வழியாக பியாசா சான் மார்க்கொவின் முடிவில். பிளாரென்ஸை எல்லா தெருவிலிருந்தும் பார்த்திருக்கிறேன். ஆளே இல்லாத குளிருந்த இருள் மாலைகளில். தெருவெல்லாம் சுற்றுலா கூட்டம் நிறைந்து வழியும் வெக்கையான கோடைகளில். 

[4] நீங்கள் விரும்பினால், அவர்கள் ஒத்துழைத்தால் கண்டிப்பாக மனிதர்களை ஸ்டில் லைஃப்பாக வரைய முடியும். ஸ்டில் லைஃப் வரைதலின் உச்சமாக அது இருக்கும். ஆனால் நீண்ட நேரம் உட்கார்ந்ததே இருப்பதால் வலியின்  உணர்ச்சிகள் உட்கார்ந்திருப்பவர்களில் தெரியும்.

[5] புத்திசாலியான ஆட்களால், அட்டகாசமான தொழில்நுட்பத்தால் உருவாகிய எண்ணற்ற நிறுவனங்களில் ஒன்று இண்டெர்லீஃப். ஆனாலும் அந்த நிறுவனம் “மூர் விதி”யால் அழிக்கப்பட்டது.  1990களில் விலை குறைவான, திறன் மிகுந்த, பொது பயன்பாட்டிற்கு வந்த பிராசசர்கள் (இண்டெல்) பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஹார்ட்வேர், மென்பொருள் நிறுவனங்களை ஒரு புல்டோசரைப்போல  இடித்து தள்ளிவிட்டது.

[6] RISDயில் தனித்த அடையாளத்தை தேடுபவர்கள் பணத்தாசை பிடித்தவர்கள் என்று அர்த்தம் இல்லை. கலை உலகில் பணமும் தனித்த அடையாளமும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைந்தது. பணம் அதிகமான கலைப்பொருள் கெத்தானதாக பார்க்கப்படும். தனித்த அடையாளம் உடையது என்று அறியப்பட்டால் அதன் விலை உயர்ந்துவிடும். 

[7] அந்த அடுக்குமாடி வீட்டின் வாடகை கட்டுப்படுத்தப்பட்டதல்ல ஒருவகையில் நிர்ணயம் செய்யப்பட்டது. நியூயார்க்கில் இருப்பவர்களுக்கு தெரியும். என்ன சொல்கிறேன் என்றால், வாடகை சட்டத்தின் கீழ் வராத வீடுகளின் வாடகையைவிட பாதி தான் வாடகை.

[8] பெரும்பாலான மென்பொருட்களை அதை உருவாக்கியவுடன் நீங்கள் உலகிற்கு அறிவிக்கலாம். ஆனால் அந்த மென்பொருள் இணையத்தில் கடைகளை உருவாக்கும் மென்பொருளாக இருந்தால், அது இன்னும் அப்பட்டமாக தெரியும். ஆரம்பகாலப் பயனர்களை தேர்வு செய்து, ஓரளவு நன்றாக இருக்கும் சில இணைய கடைகளை உருவாக்கிய பின்பே பொதுவெளியில் அறிவித்தோம்.

[9] பயனர்கள் தங்களின் பக்கங்களை வடிவமைத்துக்கொள்ளும் எடிட்டர்கள் வியாவெப்பில்  இருந்தது. பயனர்கள் அவர்களை அறியாமலே லிஸ்ப் மொழியில் எழுதிக்கொண்டிருந்தார்கள்.  

[10] பின்பு பலமுறை பழகிவிட்ட ஒரு அனுபவத்தின் முதல்முறை இது. ஆத்திரமான பல பின்னூட்டங்கள் – லிஸ்ப் நிரல் மொழி எப்படி மற்ற மொழிகளைவிட சிறந்தது என்று சொல்லலாம்? அவை எல்லாமே டியூரிங் கம்ப்ளீட் தானே? என்னுடைய கட்டுரைகளின் எதிர்வினைகளைப் படிப்பவர்கள் எனக்காக வருந்துவதாக சொல்லுவார்கள். என்னுடைய கட்டுரைகளுக்கு தொடக்கம் முதலே இப்படியான ஆத்திரமான எதிர்வினைகள்தான் வரும் என்று நான் சொல்வேன். வாசகர்களுக்கு அவர்களுக்கு ஏற்கனவே தெரியாததைப்பற்றி சொல்லவேண்டும். சிலருக்கு அப்படிச் சொல்வது பிடிப்பதில்லை.  

[11] 1990களில் மக்கள் நிறைய விஷயங்களை இணையத்தில் பதிப்பித்தார்கள். ஆனால் இணையத்தில் எதையாவது எழுதுவதும் இணையத்தில் பதிப்பிப்பதும் ஒன்றல்ல. இணையத்தில் பதிப்பிப்பது என்றால் குறைந்தபட்சம் இணையத்தில் இருப்பதை மூல வடிவமாக கருதவேண்டும்.

[12] எங்கள் Y Combinator அனுபவம் பொதுவான ஒன்றை சொல்லித்தருகிறது: முறைமைகள் நீண்ட நாட்கள் உங்களை கட்டுப்படுத்தும். அந்த முறைமைகளை உருவாக்கிய அடைப்படை காரணிகள் மாறிய பின்பும். பத்திரிக்கைகளில் கட்டுரைகளை பதிப்பித்தலுக்கு இருந்த தடைகள்  போலவே முதலீட்டு நிறுவனங்களுக்கும் உண்மையான சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரு காலத்தில் ஸ்டார்டப்களை துவங்குவது செல்வேறியதாகவும், அரிதாகவும் இருந்தது. பின்பு எளிதாகவும், செலவு குறைந்ததாகவும் மாறியபின்பும் முதலீட்டு நிறுவனங்களின் முறைமைகள் பழைய உலகையே பிரதிபலித்தன.

அதிவேகமாக மாற்றம் அடையும் துறைகளில் (அவற்றில் முறைமைகளும் விரைவிலே காலாவதியாகும்) சுதந்திர சிந்தனை உடையவர்களுக்கு (முறைமைகளை அதிகம் பேணாதவர்கள்) ஒரு அட்வாண்டேஜ் உண்டு. 

ஒரு சுவாரஸ்யமான விஷயம்: எந்த துறைகள் அதிவேகமாக மாற்றம் அடையும் என்று கணிக்க முடியாது. மென்பொருளும், முதலீட்டு துறைகளும் வேகமாக மாறும் என்பதை கணிக்க முடிந்தாலும், கட்டுரை பதிப்பித்தல் மொத்தமாக மாறிவிடும் என்று யார் எதிர்பார்த்தார்கள்?  

[13] Y Combinator நாங்கள் முதலில் வைத்த நினைத்த பெயர் இல்லை. கேம்பிரிட்ஜ் சீட் என்றே பெயரிட நினைத்தோம். ஆனால் ஒரு வட்டாரத்தை குறிக்கும் பெயரை வைக்க விரும்பவில்லை. சிலிக்கான் வேலியில் எங்களை யாராவது காப்பியடித்துவிடலாம் என்பதால், லாம்டா கால்குலஸில் இருந்து Y Combinator என பெயரிட்டுக்கொண்டோம். 

ஆரஞ்சு நிறத்தை நான் தேர்வு செய்தேன். அது வெப்பமான நிறம். மற்ற முதலீட்டு நிறுவனங்கள் எதுவும் பயன்படுத்தாத நிறம். 2005இல் முதலீட்டு நிறுவனங்கள் மெரூன், அடர் நீலம், அடர் பச்சை நிறங்களை தேர்வு செய்தார்கள். அவர்கள் நிறுவனர்களை விட முதலீட்டாளர்களை ஈர்க்க அந்த நிறங்களை தேர்வு செய்திருந்தார்கள்.  YCயின் லோகோ எங்கள் உள்வட்ட ஜோக்: வியாவெப் லோகோ ஒரு சிவப்பு வட்டத்தில் ஒரு வெள்ளை V. அது போலவே, YCயின் லோகோவை ஒரு ஆரஞ்சசு கட்டத்தில் வெள்ளை Y என தேர்ந்தெடுத்தேன்.

[14] 2009இல் துவங்கி சில வருடங்களுக்கு YC மற்ற முதலீட்டாளர்களிடம் இருந்து முதல் திரட்டியது. YC மிகப்பெரிதாக ஆன போது எங்கள் சொந்த பணத்தை வைத்தே நடத்த முடியவில்லை. ஆனால் YC இல் ஒரு ஸ்டார்டப்பாக இருந்த ஹிரோகூ நிறுவனத்தை சேல்ஸ்ஃபோர்ஸ் வாங்கிய போது எங்களுக்கு நிறைய பணம் வந்தது. மீண்டும் எங்கள் பணத்தை வைத்தே YCயை நடத்தத்துவங்கினோம். 

[15] “டீல் ஃப்ளோ” என்ற பதத்தை நான் என்றுமே விரும்பியதில்லை. ஏனென்றால் புதிய ஸ்டார்டப்களின் எண்ணிக்கை எந்த ஒரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட அளவே இருக்கும் என்பதை குறிக்கிறது. அந்த கருத்து தவறானது. YCயை உருவாக்கிய காரணமே அதை தவறாக்க வேண்டும் என்பதுதான். தொடங்கியிருக்க வாய்ப்பில்லாத ஸ்டார்டப்களை துவங்க உதவ வேண்டும் என்பதே அது. 

[16] ஏசி மெஷின்கள் அனைத்தும் வெவ்வேறு வடிவங்களிலும் அளவிலும் இருந்ததாக ஜெஸிக்கா சொல்கிறார். வாங்க முடிந்ததை எல்லாம் வாங்கினேன், என்னால் தூக்க முடியாத அளவிற்கு கனமாக இருந்தன என்கிறார். 

[17] இணையத்தில் ஃபோரம் (ஹேக்கர் நியூஸ்) நடத்தியபடியே கட்டுரைகள் எழுதினால் ஏற்படும் சிக்கலை நான் எதிர்கொண்டேன். நீங்கள் ஒரு ஃபோரத்தை நடத்தினால், எல்லா உரையாடல்களையும் கவனிக்காவிட்டால் கூட, உங்களை குறிப்பிடும் உரையாடல்களையாவது கவனிக்க வேண்டும். நீங்கள் கட்டுரை எழுதினால், அதை கண்டபடி புரிந்துகொண்டு உங்கள் ஃபோரத்தில் மக்கள் பதிவிடுவார்கள். தனித்தனியாக இந்த சிக்கல்களை சமாளித்தாலும், அவை இரண்டும் ஒன்றாக சேரும்போது மிக கொடுமையாக இருக்கும். ‘கண்டபடி’ புரிந்துகொண்டு எழுதப்படும் எதிர்வினைகளுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டும். இல்லையென்றால் உங்கள் ஃபோரத்திலே அதிக வாக்குகள் பெற்று அவை முதல் பதிவாக வரும்போது, நீங்கள் சும்மா இருந்தால், அதை ஏற்கிறீர்கள் என்றே பொருள். ஆனால் பதில் சொன்னீர்களென்றால், அது கண்டபடி புரிந்துகொள்ளும் கூட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தி, உங்களோடு கணக்கு தீர்க்க நினைக்கும் கூட்டமெல்லாம் “இதுதாண்டா சான்ஸ்” என்று புகுந்து வெளுக்கும்.  

[18] YCயை விட்டு விலகியதில் நான் இழந்தது ஜெஸிக்காவுடன் வேலை செய்ய முடியாமல் போனதைத்தான். நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்தது முதல் நாங்கள் ஒன்றாக YCயில் வேலை செய்திருக்கிறோம். எங்கள் தனிப்பட்ட வாழ்வில் இருந்து YCயை பிரிக்க விரும்பவும் இல்லை, முயன்றதும் இல்லை. அதனால் YCஇல் இருந்து விலகியது, ஆழமாக வேரூன்றிய ஒரு மரத்தை பிடுங்கியது போல இருந்தது. 

ட்ரெவோர் பிளாக்வெல், ஜான் காலிஸன், பேட்ரிக் காலிஸன், டானியல் காகில், ரால்ஃப் ஹாசெல், ஜெஸிக்கா லிவிங்ஸ்டன், ராபர்ட் மோரிஸ், ஹர்ஜ் டகருக்கு கட்டுரையின் பிரதியை படித்ததற்கு நன்றி. 

Translator’s Note: I summarized few paragraphs in the original article, which talks about “Bel” the version of Lisp written by PG.

Essays

ஸ்டார்டப் துவங்குவது எப்படி

Tamil translation of Paul Graham’s essay “How to Start a Startup“.

Paul Graham is the founder of Y Combinator (YC). YC is an American technology startup accelerator launched in March 2005.[1] It has been used to launch more than 3,000 companies, including  StripeAirbnbCruisePagerDutyDoorDash, CoinbaseInstacart,  DropboxTwitchFlightfox, and Reddit.[3] The combined valuation of the top YC companies was more than $300 billion by January 2021. [From Wikipedia.]

Paulgraham 240x320.jpg

ஆசிரியர்: பால் கிரஹாம்.

மொழியாக்கம்: விஸ்வநாதன் மகாலிங்கம்

மொழியாக்கத்தை படித்து பிழைகளை திருத்தியதற்கு நன்றி: மகேந்திரராஜன் சந்திரசேகரன், வேணு தயாநிதி.

மார்ச் 2005

(ஹார்வெர்ட் கம்ப்யூட்டர் சொசைட்டியில் ஆற்றிய உரையிலிருந்து)

வெற்றிகரமான ஸ்டார்டப் துவங்குவதற்கு மூன்று விஷயங்கள் தேவை: நல்ல ஆட்களுடன் துவங்குதல், வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே தேவையான ஏதோ ஒன்றை உருவாக்குதல், சிக்கனமாக இருத்தல். பெரும்பாலான ஸ்டார்டப்கள் இந்த மூன்றில் ஏதோ ஒன்று குறைவதனால் தோல்வி அடைகின்றன. இந்த மூன்றும் இருந்தால் ஸ்டார்டப் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

நினைத்துப்பார்த்தால் இது உண்மையிலேயே உற்சாகத்தை தரக்கூடியது. ஏனென்றால் இந்த முன்றும் சாத்தியம்தான். கடினம். ஆனால் சாத்தியம். வெற்றி அடைந்த ஸ்டார்டப்களின் நிறுவனர்கள் பெரும்பாலும் செல்வந்தர்களாக ஆவதனால், செல்வம் சேர்க்க கூடியதும் சாத்தியம்தான். கடினம். ஆனால் சாத்தியம்.

ஸ்டார்டப்களை பற்றி நான் ஓரே ஓரு செய்தியை உங்களுக்கு சொல்லிவிட முடியுமென்றால், அது இதுதான் – அதிபுத்திசாலித்தனம் கோரும் எந்த கடுமையான எட்டும் தேவை இல்லை என்பதுதான். 

யோசனை(Idea):

நீங்கள் ஸ்டார்டப் துவங்குவதற்கு மிகச்சிறந்த யோசனைகள் ஏதும் தேவையில்லை. ஒரு ஸ்டார்டப் எப்படி  பொருளீட்டுகிறது ? நுகர்வோர் பயன்படுத்தும் தற்போதைய தொழில்நுட்பத்தைவிட   மேம்பட்ட ஒன்றை தருவதன் மூலம். பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தும் தொழில்நுட்பம் மிகமோசமானதாக இருக்கும். அதனால் அதைவிட சிறப்பானதை தருவதற்கு அதிபுத்திசாலித்தனம் தேவையில்லை. 

உதாரணமாக கூகிளின் திட்டம் மிக எளிமையானது – சொதப்பல் இல்லாத ஒரு தேடுதளத்தை உருவாக்குதல். அவர்களுடையது மூன்று புதிய யோசனைகள்: இணையத்தை மேலும் அட்டவணைப்படுத்துதல் , இணையதளங்களுக்கிடையேயான சுட்டிகளைக் கொண்டு தேடல் முடிவுகளை தரவரிசைப்படுத்தல், தேடு சொற்களைப் பயன்படுத்தி உறுத்தாத விளம்பரங்களைக் கொண்ட எளிய இணையதளத்தை உருவாக்குதல். அனைத்திற்கும் மேலாக, பயன்படுத்த எளிமையான ஒரு தளத்தை உருவாக்கவேண்டும் என்று உறுதியோடு இருந்தார்கள். கண்டிப்பாக அவர்களிடம் சிறந்த தொழில்நுட்பம் இருந்தது. ஆனால் அவர்களின் திட்டம் மிக எளிமையானது. இப்போது அவர்கள் மேலும் விரிந்து பரவியிருந்தாலும், தேடுதளம் மட்டுமே அவர்களுக்கு ஒரு வருடத்திற்கு பல பில்லியன் டாலர்களை கொண்டுவருகிறது.[1]

கூகிளிற்கு முன்பிருந்த தேடுதளங்கள் போலவே, பல துறைகளும் பின் தங்கியிருந்தன. என் அனுபவத்தில் ஸ்டார்டப் துவங்குவதற்கு நிறைய வழிகள் தோன்றினாலும், அவற்றை இப்படி சொல்லலாம்: எல்லோரும் என்ன செய்ய முயல்கிறார்கள் என்று பாருங்கள், அதை சொதப்பலின்றி எளிதாக்க முடியுமா என்று பாருங்கள்.

உதாரணமாக, இணைதேடும்(டேட்டிங்) தளங்கள் கூகிளிற்கு முன்பிருந்த தேடுதளங்களைப்போன்று மோசமாகமாக உள்ளன. அவை எல்லாம் ஒரே மாதிரியை பயன்படுத்துகின்றன. அவை எல்லாமே இணை தேடுவதை (டேட்டிங்கை) பற்பல தரவுகளின் கணக்கு வழக்காக பார்க்கின்றனவே ஒழிய  நிஜ உலகில்  எப்படி டேட் செய்கிறார்கள் என்பதை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஒரு கல்லூரிமாணவன் இதை ஒரு யோசனையாக எடுத்து செய்யலாம். இதில் நிறைய பணம்பன்னும் வழி இருக்கிறது. இப்போழுதே இணையவழி இணைதேடுதல்(ஆன்லைன் டேட்டிங்) நிறைய பணம் புழங்கும் துறை. அது ஒழுங்காக வேலை செய்தால் மேலும் நூறுமடங்கு மதிப்புள்ளதாக ஆகும்.  

ஸ்டார்டப்களை பொருத்தவரை ஒரு யோசனை அல்லது ஐடியா என்பது வெறும் துவக்கம் மட்டுமே. ஸ்டார்டப் நிறுவனர்கள் பலர் யோசனைதான்அனைத்துமே என்று நினைக்கிறார்கள். அதன்பின்னர் அந்த திட்டத்தைசெயல் வடிவத்திற்கு கொண்டு வருவது மட்டுமே மிச்சம் என்று நினைக்கிறார்கள். அந்த நிறுவனர்களைவிட பணம் முதலீடு செய்யும் வென்சர் கேப்பிடலிஸ்ட் (விசி) தங்கள் அனுபவத்தால் மேலும் அறிந்தவர்கள். நீங்கள் ஒரு விசி நிறுவனத்தை ஒரு சிறந்த யோசனையுடன்  அணுகி, அவர்கள் ஒரு ரகசியக்காப்பு ஒப்பந்தத்தை (non-disclosure agreement) கையெழுத்திட வேண்டும் என்று கேட்டால், அவர்கள் உங்களை வெளியே துரத்துவிடுவார்கள். ஒரு யோசனையின் மதிப்பு அவ்வளவே. ஒரு என்.டி.ஏ வை கையெழுத்திடுவதில் இருக்கும் நேர விரையத்தைவிட குறைவான சந்தை மதிப்பே ஒரு யோசனைக்கு இருக்கிறது.

எத்தனை ஸ்டார்டப் நிறுவனங்கள் தங்களின் ஆரம்ப யோசனைகளை மாற்றின என கணக்கிட்டு பார்த்தீர்களென்றால், ஆரம்ப யோசனைகளின் மதிப்பு தெரியும். மைக்ரோசாஃப்டின் ஆரம்பகால திட்டம் நிரல் மொழிகளை விற்று பணம் சம்பாதிப்பதாக மட்டுமே இருந்தது. மேலும் ஐந்து வருடங்கள் கழித்து ஐபிஎம் நிறுவனம் அவர்களின் மடியிலே பணத்தை கொண்டுவந்து கொட்டும் வரை.

ஸ்டார்டப்களின் யோசனைகளுக்கு ஓரளவு மதிப்பு இருக்கிறது. ஆனால் என்ன பிரச்சனை என்றால், யோசனைகளை இன்னொருவரிடம் கைமாற்ற முடியாது. ஒரு துவக்கத்தை தரும் என்ற அளவில் யோசனைகளுக்கு மதிப்பிருக்கிறது. அந்த யோசனை யாருக்கு தோன்றியதோ, அவர்களுக்கு மேலும் சிந்தனைகள் எழுவதற்கான காரணம் என்ற வகையில்.

யோசனைகள் முக்கியம் அல்ல. அந்த யோசனை தோன்றிய ஆட்கள்தான் முக்கியம். நல்ல ஆட்களால் மோசமான திட்டத்தை சரிசெய்ய முடியும், ஆனால், நல்ல திட்டங்கள் மட்டுமே மோசமானவர்களை  காப்பாற்ற முடியாது.

மக்கள்:

நல்ல ஆட்கள் என்று யாரை நான் குறிப்பிடுகிறேன்? நான் கற்றுக்கொண்ட ஒரு சிறந்த வழி, எங்கள் ஸ்டார்டப்பில் யாரை வேலைக்கு எடுக்கவேண்டும் என்று நாங்கள் வகுத்துக்கொண்ட ஒரு முறை. நீங்கள் வேலைக்கு எடுப்பவரை ஒரு விலங்கு என்று சொல்லமுடியுமா ? இதை வேறொரு மொழியில் சரியாக சொல்ல முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் அமெரிக்காவில் இதன் அர்த்தம் எல்லோருக்கும் புரியும். தன்னுடைய வேலையை கொஞ்சம் அதி தீவிரமாக எடுத்துக்கொள்பவரை குறிக்கிறது; ஒருவர் தன்னுடைய வேலையை மிகச்சிறப்பாக செய்து, தொழில்முறை என்ற எல்லையை கடந்து தீவிரம் என்ற எல்லைக்கு செல்பவர். 

இதன் அர்த்தம் ஒவ்வொரு வேலையை பொறுத்தது: ‘வேண்டாம்’ என்பதை பதிலாக ஏற்காத விற்பனையாளர்; தன் நிரலில் உள்ள பழுதை சரிசெய்யாமல் தூங்குவதற்கு பதிலாக அதிகாலை 4:00 மணிவரை விழித்திருக்கும் கொந்தர்; நியூயார்க் டைம்ஸ் ரிப்போர்ட்டர்களுக்கு அவர்களின் செல்போனில் முன்பின் அறிமுகம் இல்லாமல் அழைக்கும் மக்கள் தொடர்பாளர்; தேவையில்லாத இரண்டு மில்லிமீட்டர் வித்தியாசம் இருந்தாலே துடித்துபோகும் வரைகலை நிபுணர்.  

எங்களுக்கு வேலை செய்த அனைவரும், அவர்களின் வேலையில் ஒரு விலங்கு. விற்பனைத்துறையில் வேலை செய்த பெண் விடாப்பிடியானவர். அவருடன் போனில் பேசும் எங்கள் வாடிக்கையாளர்களை நினைத்து நான் வருந்துவது உண்டு. போனிலேயே அவர்கள் துடிப்பது தெரியும். ஆனால் வாங்க ஒப்புக்கொள்ளும் வரை அவர்களுக்கு மீட்பு இல்லை.  

உங்களுக்கு தெரிந்தவர்களை பற்றி யோசித்தால், இந்த விலங்கு தேர்வை எளிதாக போட்டுப்பார்க்கலாம். அவர்களின் முகத்தை நினைவிற்கு கொண்டுவந்து ‘இவர் ஒரு விலங்கு’ என்ற வரியை சேர்த்துச்சொல்லிப்பாருங்கள். உங்களுக்கு சிரிப்பு வந்துவிட்டால், அவர் விலங்கு இல்லை. ஒரு பெரிய நிறுவனத்திற்கு இப்படிப்பட்டவர்கள் தேவையில்லை (ஒருவேளை சேர்க்கவும் கூடாது), ஆனால் ஒரு ஸ்டார்டப்பிற்கு தேவை. 

நிரலாளர்களுக்கு மேலும் மூன்று தேர்வுகள் உண்டு. உண்மையிலேயே புத்திசாலியானவரா? அப்படியென்றால், அவர்களால் ஒரு வேலையை செய்து முடிக்கமுடியுமா? கடைசியாக சில கொந்தர்கள் சகிக்க முடியாத குணமுடையவர்களாக இருப்பதால், இவர்களை நாம் சகித்துக்கொள்ள முடியுமா ?

ஆச்சர்யம் என்னவென்றால், அந்த கடைசி கேள்வி மிக குறைவானவர்களையே வடிகட்டும். ஏனென்றால் ஒருவர் உண்மையிலே திறமையானவர் என்றால், அவர்களுடைய எல்லா கிறுக்குத்தனங்களையும் எங்களால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் பயங்கர திமிர் பிடித்தவர்களை தாங்கிக்கொள்ள முடியாது. அப்படிப்பட்டவர்கள் உண்மையிலே திறமை குறைந்தவர்களாக இருப்பார்கள். அதனால் ஒருவகையில் மூன்றாவது கேள்வி முதல் கேள்வியை வேறு வகையில் கேட்டுக்கொள்வதுதான். 

சில கிறுக்கர்களை எப்போது தாங்கமுடியாது என்றால், அவர்கள் தங்களை அதிபுத்திசாலியாக காட்டிக்கொள்ள முயலும்போது. ஒருவர் புத்தி கூர்மையானவராக இருக்கும் தோறும், அவர்கள் புத்திசாலியாக காட்டி கொள்ளும் தேவை குறையும். உண்மையிலே திறமையானவர்களை எப்படி கண்டு கொள்ளலாம் என்றால் அவர்கள் இந்த சொற்களை சொல்வார்கள் – “எனக்கு தெரியாது”, “நீங்கள் சொல்வது ஒருவேளை சரியாக இருக்கலாம்”, “எனக்கு x சரியாக புரியவில்லை”, …

இந்த யுக்தி எல்லா நேரங்களிலும் வேலை செய்யாது, ஏனென்றால் ஒருவருடைய சூழல் ஒருவரை பாதிக்கும். எம்.ஐ.டி கணிப்பொறி துறையில் எல்லாம்-தெரிந்த-ஏகாம்பரங்களாக வலம் வருவது ஒரு மரபு. அது மார்வின் மின்ஸ்கியிடம் இருந்து வந்தது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு விமான பைலட்டின் பாவனைகள் சக் யீகரிடம் இருந்து வந்ததைப்போல. உண்மையிலே திறமையானவர்களும் அங்கே அப்படி நடந்து கொள்வார்கள். ஆகவே நீங்கள் சில சலுகைகள் தர வேண்டியிருக்கும். 

ராபர்ட் மோரிஸ் எங்களுடன் இருந்தது உதவியாக இருந்தது. நான் சந்தித்தவர்களிலேயே உடனடியாக “எனக்கு தெரியாது” என்று சொல்லக்கூடியவன். (எம்.ஐ.டியில் பேராசிரியர் ஆவது வரை). ராபர்டிற்கு அருகில் இருக்கும்போது, யாரும் படம் காட்ட மாட்டார்கள். ஏனென்றால் ராபர்ட் அவர்களை எல்லாம் விட புத்திசாலி. ஆனால் மிக அடக்கமானவன். 

முக்கால்வாசி ஸ்டார்டப்களை போல, எங்கள் நிறுவனம் நண்பர்கள் குழுவால் துவங்கப்பட்டது. நாங்கள் வேலைக்கு எடுத்தவர்களில் பெரும்பாலானவர்கள் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்கள். பெரிய நிறுவனத்திற்கும் ஸ்டார்டப்களுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் இது. ஒருவருடன் சில நாட்கள் நட்பில் இருந்தாலே, அவர்களைப் பற்றி நீங்கள் நிறைய தெரிந்து கொள்ளலாம். (நேர்முக தேர்வுகளில் நிறுவனங்கள் தெரிந்துகொள்வதை விட பலமடங்கு.)[2]

ஸ்டார்டப்கள் கல்லூரிகளை சுற்றி துவங்கப்படுவது ஏதேச்சையானது இல்லை, ஏனென்றால் அங்குதான் அறிவாளிகள் சந்தித்துக்கொள்கிறார்கள். எம்.ஐ.டி மற்றும் ஸ்டாண்போர்டின் மாணவர்கள் தங்கள் வகுப்புகளில் கற்றுக்கொள்வதால் நிறைய தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாவதில்லை. வகுப்பில் சும்மா பாட்டுப்பாடிக்கொண்டு கூட இருக்கலாம். (கல்லூரிகளின் புதிய மாணவர் சேர்க்கை இப்பொழுதுள்ளதைப்போல தொடரும் வரை.)

நீங்கள் ஒரு ஸ்டார்டப்பை துவங்கினால், பெரும்பாலும், அது உங்களுக்கு கல்லூரியில் தெரிந்தவர்களுடன் இருக்கும். அப்படியென்றால் நீங்கள் நிறைய நண்பர்களை கல்லூரியில் உருவாக்கிக்கொள்ள வேண்டுமா ? இல்லை. வேண்டுமென்றே போய் ஒட்டிக்கொள்ள வேண்டாம்; கொந்தர்களிடம் அது வேலைக்கு ஆகாது. 

நீங்கள் கல்லூரியில் என்ன செய்ய வேண்டும் என்றால் உங்களின் சொந்தமான திட்டங்களில் (project) வேலை செய்ய வேண்டும். கொந்தர்கள் கண்டிப்பாக இதை செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் ஸ்டார்டப்களை துவங்கவில்லையென்றாலும். ஏனென்றால் நிரல் எழுதுவதை கற்க அது ஒன்றே வழி. மற்ற மாணவர்களுடன் சேர்ந்து சில திட்டங்களில் வேலை செய்ய வேண்டும். மற்ற சிறந்த கொந்தர்களை கண்டு கொள்ள இதுவே சிறந்த வழி. அந்த திட்டம் ஒரு ஸ்டார்டப்பாக வளரலாம். மீண்டும் சொல்கிறேன், நான் ஸ்டார்டப் துவங்குவதை குறிக்கோளாக வைத்துக்கொள்ள மாட்டேன். வலிந்து செய்ய வேண்டாம்; உங்களுக்கு பிடித்த விஷயங்களை, பிடித்தவர்களுடன் சேர்ந்து செய்யுங்கள். 

இரண்டு அல்லது நான்கு நிறுவனர்கள் இருப்பது சரியாக இருக்கும். ஒருவராக துவங்குவது கடினம். ஒரு நிறுவனம் நடத்துவதற்கான தார்மீக பொறுப்பை ஒருவராக தாங்குவது கடினம். எதையும் தாங்கும் இதயம் கொண்ட பில் கேட்ஸிற்கே ஒரு இணை-நிறுவனர் (பால் ஆலன்) தேவைப்பட்டார். அதேசமயம் குரூப் போஃட்டோவை போல தோன்றுமளவிற்கு நிறைய நிறுவனர்களும் தேவையில்லை. ஆரம்பத்தில் நிறைய நிறுவனர்கள் இருந்தால், நிறைய சச்சரவுகள் வரும். இரண்டு அல்லது மூன்று நிறுவனர்கள் இருந்தால், நீங்கள் சண்டைகளை உடனே தீர்க்க வேண்டும் அல்லது நீங்கள் மறைந்து விடுவீர்கள். ஏழு அல்லது எட்டு நிறுவனர்கள் இருந்தால், சச்சரவுகள் நீடித்து, குழு மனப்பாண்மை உருவாகும். உங்களுக்கு வோட்டெடுப்பில் பெரும்பாண்மை தேவை இல்லை; ஒருமித்த ஆதரவே தேவை.  

ஒரு தொழில்நுட்ப ஸ்டார்டப்பில்  (முக்கால்வாசி ஸ்டார்டப் தொழில்நுட்பம் சார்ந்ததுதான்), நிறுவனர்கள் தொழில்நுட்பம் தெரிந்தவராக இருப்பது அவசியம். இணைய குமிழி (Internet Bubble- 1995-2000) காலகட்டத்தில், வணிகர்கள் நிறுவனங்களை துவங்கிவிட்டு, பின்பு மென்பொருட்களை உருவாக்குவதற்கு கொந்தர்களை தேடினார்கள். அது சரியாக வராது. வணிக ஆட்களுக்கு தொழில்நுட்பத்தை வைத்து என்ன செய்வது என்று சரியாக முடிவெடுக்க தெரியாது. ஏனென்றால் அவர்களுக்கு என்ன பிரச்சனைகள் உள்ளன, எது தொழில்நுட்பத்தால் எளிதாக சரி செய்ய முடியும், எது கடினம் என்பது தெரியாது. வணிக ஆட்களால் எந்த கொந்தர் திறமையானவர் என்றும் அடையாளம் காண முடியாது. மற்ற கொந்தர்களாலேயே எளிதில் அடையாளம் காண முடியாத போது, வணிகர்களுக்கெல்லாம் மிகக்கடினம்.

ஸ்டார்டப் நிறுவனர்களில் (தொழில்முறையாளர்கள்) வணிகர்கள் இருக்க வேண்டுமா? அது சூழலை பொறுத்தது. எங்கள் நிறுவனத்தை துவங்கியபோது, “வணிகம்” என்ற மர்மத்தை தெரிந்த நிறைய பேரை தொடர்பு கொண்டு, அவர்கள் எங்கள் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்பார்களா என்று கேட்டோம். அவர்கள் அனைவரும் மறுக்கவே, நானே அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். வணிகம் என்பது ஒன்றும் பெரிய மர்மம் இல்லை என்று கண்டுகொண்டேன். இயற்பியல் அல்லது மருத்துவம் போல அதற்கு ஒன்றும் நீண்ட ஆராய்ச்சி தேவையில்லை. உங்களுடைய பொருளுக்காக மக்களை பணம் தரவைக்க முயல வேண்டும். அவ்வளவுதான்.

எனக்கு ஏன் வணிகம் என்பது ஒரு மர்மமாக இருந்தது என்றால், வணிகத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அருவருப்பாக இருந்தது. தூய்மையான மென்பொருள் அறிவுலகம்தான் என் துறை. வாடிக்கையாளர்களின் சில்லறை பிரச்சனைகளை தீர்ப்பதல்ல. ஏதோ ஒன்றில் ஈடுபட விருப்பம் இல்லாதவர்கள், அதில் பாதுகாப்பான திறமையின்மையை வளர்த்துக்கொள்கிறார்கள். பால் எர்டோஸ் ஒரு சிறந்த உதாரணம். ஒரு பழத்தை பாதியாக வெட்டக்கூட தெரியாததால் (கடைக்கு போய் வாங்கி வருவதையெல்லாம் யோசித்துக்கூட பார்க்கமுடியாது), மற்றவர்களை அந்த வேலைகளை செய்ய வைப்பார். அதன்மூலம் மிச்சமாகும் அத்தனை நேரத்தையும் கணிதத்தில் செலவிடுவார். எர்டோஸ் ஒரு எல்லை என்றாலும், பெரும்பாலான கணவர்களுக்கு இந்த வித்தை தெரியும்.  

என்னுடைய கவனமான திறமையின்மையை நான் வலுக்கட்டாயமாக துறந்தவுடன், நான் பயந்த அளவிற்கு வணிகம் கடினமாகவோ அல்லது மொக்கையாகவோ இல்லை என்று தெரிந்தது. வணிகத்தில் சில பகுதிகள் — வரிச்சட்டங்கள், பங்குகளின் மதிப்பை கணக்கிடுதல் — கடினம்தான். ஆனால் ஸ்டார்டப்களில் அவை தேவையில்லை. வணிக கல்லூரிகளோ, பல்கலைகழங்களோ உருவாவதற்கு முன்பே, வணிகத்தை பற்றி எல்லோருக்கும் தெரிந்த பொதுவான விஷயங்கள் தெரிந்தாலே போதும், ஸ்டார்ட்அப்களை துவங்கலாம். 

அமெரிக்க பணக்காரர்களின் பட்டியலான போர்ப்ஸ் 400ஐ நீங்கள் வரிசையாக பார்த்து, அதில் எம்.பி.ஏ படித்தவர்களை சுற்றி ஒரு வட்டம் போட்டீர்களென்றால், நீங்கள் வணிக கல்லூரிகளை பற்றி தெரிந்து கொள்ள முடியும். வாரன் பஃபே விற்கு அடுத்து 22ஆவது இடத்தில் உள்ள ஃபில் நைட்தான் (நைக்கி ஷூ நிறுவனத்தின் சீ.யீ.ஓ) எம்பிஏ படித்தவர். முதல் ஐம்பது இடங்களில் ஐந்து பேர் மட்டுமே எம்பிஏ படித்தவர்கள். மேலும் போர்ப்ஸ் 400 பட்டியலில் உள்ளவர்களில் நிறையபேருக்கு தொழில்நுட்ப பின்புலம் உண்டு. பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், லாரி எலிசன், மைக்கல் டெல், ஜெஃப் பிஸோஸ், கார்டன் மூர் என. தொழில்நுட்ப துறையின் மன்னர்கள் அனைவரும் தொழில்நுட்ப பின்புலம் கொண்டவர்கள். அனைவரும் தொழில்நுட்பத்தில் இருந்தான் வந்தவர்கள். வணிக பின்புலத்தில் இருந்து இல்லை. அதனால் வணிகத்தில் வெற்றி பெறுவதற்காக நீங்கள் இரண்டு வருடங்களை செலவிட தயாராக இருந்தீர்களென்றால், எம்பிஏ பட்டங்களை விட எப்படி கொந்துவது (hack) என்று கற்றுக்கொள்ளுங்கள்.[3]

ஒரு ஸ்டார்டப்பில் நீங்கள் வணிக பின்புலத்தில் இருந்து வந்தவர்களை சேர்த்துக்கொள்ள ஒரு காரணம் இருக்கிறது: ஒருவராவது வாடிக்கையாளர்களுக்கு என்ன வேண்டும் என்பதை பற்றி யோசிக்க வேண்டும். சிலர் வணிகர்களால் மட்டுமே வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்து கொள்ள முடியும் என்று நம்புகிறார்கள். (கொந்தர்கள் மென்பொருளை எழுத மட்டும்தான் முடியும், மக்களுக்கு தேவையானவற்றை வடிவமைக்க முடியாது.) அது முட்டாள்தனம். மென்பொருளை எழுதுவதால், வாடிக்கையாளர்களின் தேவையை புரிந்துகொள்ள முடியாது என்றெல்லாம் இல்லை. அல்லது மென்பொருள் எழுதத்தெரியாததாலே வணிகர்களால் வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ள முடியும் என்பதும் இல்லை.

ஆனால் உங்களால் வாடிக்கையாளர்ளை புரிந்துகொள்ள முடியவில்லை என்றால், ஒன்று நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது புரிந்துகொள்ளக்கூடிய ஒரு இணை-நிறுவனரை கண்டு கொள்ளவேண்டும். தொழில்நுட்ப ஸ்டார்டப்களில் உள்ள பெரிய சிக்கல் இதுதான். நிறைய கப்பல்களை கவிழ்க்கும் பெரும் பாறையும் இதுவே.

வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை

இது ஸ்டார்டப்களுக்கு மட்டுமே உரிய சிக்கல் இல்லை. நிறைய நிறுவனங்கள் ஏன் தோற்கின்றன என்றால், அவை வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவையோ அதை தருவதில்லை. உணவகங்களை பாருங்கள். பெரும் எண்ணிக்கையில் அவை தோற்கின்றன. முதல் வருடத்திலே கால் பங்கு கடைகள் மூடப்படுகின்றன. ஆனால் உண்மையிலே சுவையான உணவு தந்த எந்த உணவகமாவது மூடப்பட்டதா ? 

எத்தனை சிக்கல்கள் இருந்தாலும், சுவையான உணவு தரும் உணவகங்கள் எப்படியோ சிறப்பாக விளங்குகின்றன. சுவையான உணவு தரும் உணவகங்கள் விலை அதிகமாக, கூட்டமாக, சந்து பொந்துகளில், தொலைவாக, மோசமான சேவை என எப்படி இருந்தாலும் மக்கள் தேடி வருவார்கள். சுமாரான உணவைத்தரும் உணவகங்கள் சில தந்திரங்களை பயன்படுத்தி வாடிக்கையாளார்களை வரவழைக்கலாம். ஆனால் அதில் இடையூறு அதிகம். நல்ல உணவை தருவதே எளிதான வழி.

தொழில்நுட்பமும் அதைப்போல தான். ஸ்டார்டப்கள் தோற்பதற்கு நீங்கள் நிறைய காரணங்களை கேள்விப்படலாம். ஆனால் மிகவும் புகழ் பெற்ற ஒரு பொருளை தந்தும் தோற்ற நிறுவனம் ஏதாவது உண்டா?  

கிட்டத்தட்ட எல்லா தோல்வியடைந்த ஸ்டார்டப்களின் உண்மையான பிரச்சனை, வாடிக்கையாளர்களுக்கு தேவையில்லாத பொருளை விற்கிறார்கள் என்பது. “பணம் இல்லை” என்பதே நிறுவனம் மூடப்பட்டதற்கான காரணமாக சொல்லப்பட்டிருக்கும். அது உடனடி காரணம்தான்.  அவர்களால் ஏன் முதலீட்டாளர்களிடமிருந்து பணத்தை திரட்ட முடியவில்லை ? அவர்கள் உருவாக்கும் பொருள் தேவையற்றதாக இருக்கலாம், அல்லது உருவாக்கவே முடியாமல் போகலாம், இரண்டுமாகவும் இருக்கலாம்.

எல்லா ஸ்டார்டப்களும் செய்ய வேண்டிய பட்டியலில், கிட்டத்தட்ட நான்காவதாக ஒன்றையும் சேர்த்திருந்தேன்: முதல் வடிவத்தை எவ்வளவு விரைவாக கொண்டு வரமுடியுமோ அவ்வளவு விரைவாக கொண்டுவாருங்கள் என்று. “வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை உருவாங்குங்கள்” என்பதிலே அதுவும் அடங்கி விடுகிறது என்பதால் அதை சேர்க்கவில்லை. வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை உருவாக்குவதற்கு ஒரே வழி, முதலில் ஒரு முன்வடிவத்தை (prototype) செய்து, வாடிக்கையாளர்களிடம் தந்து, அவர்களின் எதிர்வினைகளுக்கு ஏற்ப பொருளை திருத்தி அமைப்பது. 

இன்னொரு வழியை நான் “கடவுள்தான் காப்பாத்தனும்”(“Hail Mary”) வழி என்பேன். நீங்கள் உருவாக்கும் பொருளுக்கு நீண்ட திட்டங்கள் வகுத்து, பொறியாளர்களை வேலைக்கு அமர்த்தி (இப்படி செய்பவர்கள் கொந்தர்களுக்கு ‘பொறியாளர்’ என்ற பதத்தை பயன்படுத்துவார்கள்), ஒரு வருடம் கழித்து இரண்டு மில்லியன் டாலர்களை செலவிட்டபின் அவர்கள் உருவாக்கியதை யாருமே விரும்பவில்லை என்று கண்டு கொள்வார்கள். இணைய குமிழி கால கட்டத்தில், வணிகம் மட்டுமே தெரிந்தவர்களால் நடத்தப்பட்ட நிறுவனங்கள் இந்த முறையை பின்பற்றின. அவர்களுக்கு மென்பொருள்-உருவாக்கம் என்பதே புதிராக இருந்ததால், அதை கவனமாக திட்டமிட வேண்டும் என்று நினைத்தார்கள்.  

நாங்கள் இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும் என நினைக்ககூட இல்லை. லிஸ்ப் நிரல்மொழி கொந்தரான நான் அதிவேக மாதிரிகளை உருவாக்கும் மரபில் இருந்து வந்தவன். எல்லா நிரல்களையும் உருவாக்கும் சரியான வழி இதுதான் என சொல்ல மாட்டேன், ஆனால் கண்டிப்பாக ஒரு ஸ்டார்டப்பிற்கான மென்பொருளை உருவாக்குவதற்கு அதுதான் சரியான வழி. ஸ்டார்டப்பில் உங்கள் ஆரம்பகால திட்டங்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் தவறாக இருக்கும். நீங்கள் முதன்மையாக கண்டுபிடிக்க வேண்டியது, அந்த தவறு எங்கே இருக்கிறது என்பது. அதற்கு ஒரே வழி, அதை செய்து பார்ப்பதே.   

நிறைய ஸ்டார்டப்களை போல, நாங்களும் எங்கள் துவக்ககால திட்டங்களை மாற்றிக்கொண்டோம். முதலில் இணைய நிரல் ஆலோசகர்களைத்தான் எங்கள் வாடிக்கையாளார்கள் என நினைத்தோம். ஆனால் அவர்களுக்கு எங்களை பிடிக்கவில்லை. ஏனென்றால் எங்கள் மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருந்தது. மேலும் தளங்களை நாங்களே வலையேற்றினோம். எங்கள் மென்பொருளை பயன்படுத்தும் நிறுவனங்களால் இந்த ஆலோசகர்களை எளிதாக நீக்கிவிடமுடியும். பொருட்களை விற்பனைக்காக பட்டியலிடும் (catalog) நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற முடியும் என நினைத்தோம். இணைய விற்பனை அவர்களின் இயல்பான அடுத்த கட்டம் என நினைத்தோம். ஆனால் 1996இல் அது எளிதாக இருக்கவில்லை. அந்த நிறுவனங்களில் நாங்கள் தொடர்பு கொண்ட இடைநிலை மேலாளர்கள் இணையத்தை ஒரு வாய்ப்பாக பார்க்கவில்லை. இணைய-விற்பனையை அவர்களின் வேலையை அதிகரிக்கும் தேவையற்ற ஒன்றாகவே பார்த்தார்கள். 

ஒரு சில துணிச்சல் மிக்க விற்பனை பட்டியல் நிறுவனங்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக ஆனார்கள். ஹாலிவுட்டை சேர்ந்த ஃபிரெட்ரிக்ஸ் அதில் ஒன்று. எங்கள் இணைய சர்வர்களால் எவ்வளவு பாரத்தை தாங்கமுடியும் என்ற அனுபவத்தை அதன்மூலம் பெற்றோம். ஆனால் எங்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சிறிய வணிகர்கள். அவர்கள்தான் இணையத்தை தங்கள் வணிகத்தை பெருக்கும் ஒரு வாய்ப்பாக பார்த்தார்கள். சிலருக்கு கடைகள் இருந்தன. ஆனால் பெரும்பாலானவர்கள் இணையத்தில் மட்டுமே விற்றார்கள். அதனால் எங்களின் இலக்கை இவர்களை நோக்கி திருப்பிக்கொண்டோம். இணைய ஆலோசகர்களும், விற்பனை பட்டியல் நிறுவனங்களுக்கும் தேவையான அம்சங்களில் கவனம் குவிப்பதற்கு பதில், எங்கள் மென்பொருளை பயன்படுத்துவதற்கு எளிதாக மாற்ற துவங்கினோம்.

இதன்மூலம் சில மதிப்புமிக்க பாடங்களை கற்றுக்கொண்டேன். எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயன்று தொழில்நுட்பத்தை எளிய வகையில்  பயன்படுத்தும்படி மாற்றுவது பயன் தரும். கொந்தர்கள் கணினியை அதிகமாக பயன்படுத்துவதால், பொது மக்களுக்கு மென்பொருள் எப்படி ஒரு பயத்தை உருவாக்குகிறது என்பதே தெரியவில்லை. ஸ்டீபன் ஹாக்கிங்கின் எடிட்டர், அவருடைய நூலில் சேர்க்கும் ஒவ்வொரு கணித சமன்பாடும் விற்பனையை பாதியாக குறைக்கும் என்பார். நீங்கள் தொழில்நுட்பத்தை எளிதாக பயன்படுத்தும்படி மாற்றினீர்கள் என்றால், நீங்கள் அந்த விற்பனை வளைவில் மேலே செல்வீர்கள் (கீழ் இறங்குவதற்கு பதில்). பயன்படுத்துவதற்கு 10% எளிதாக மாற்றினர்கள் என்றால், உங்கள் விற்பனை 10% மட்டும் அதிகரிக்காது. இரட்டிப்பாகும் வாய்ப்பும் உள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்று எப்படி கண்டு கொள்வது? அவர்களை கவனியுங்கள். வர்த்தக கண்காட்சிகள் (trade shows) அதற்கு சிறந்த இடம். வர்த்தக மாநாடுகளில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பதை விட, சந்தை ஆராய்ச்சி செய்ய சிறந்த இடம். வர்த்தக கண்காட்சிகளில் நாங்கள் வெறும் விளக்ககுறிப்புகளை தரவில்லை. இணையதளத்தில் கடைகளை எப்படி உருவாக்குவது என்று மக்களுக்கு செய்து காண்பித்தோம். எங்கள் மென்பொருளை அவர்கள் பயன்படுத்துவதை பார்த்தோம், அவர்களுடன் பேசி என்ன தேவை என்று கண்டு கொண்டோம்.  

நீங்கள் எந்த ஸ்டார்டப்பை துவங்கினாலும், ஸ்டார்டப் நிறுவனர்களான உங்களுக்கு, வாடிக்கையாளர்களின் தேவை என்ன என்பதை கண்டு கொள்வது கடினமாகத்தான் இருக்கும். நீங்களே வாடிக்கையாளர்களாக இருக்கும் மென்பொருளை உருவாக்கும்போது உங்களுக்கே என்ன தேவை என்று தெரிந்திருக்கும். ஆனால் அந்த வகை மென்பொருள் பெரும்பாலும் இலவச மென்பொருளாக (open source) இருக்கும்: நிரல் மொழிகள், எடிட்டர்கள், ஆபரேட்டிங் சிஸ்டம், என. அதனால், நீங்கள் விலைக்கு விற்கக்கூடிய மென்பொருளை உருவாக்கினால், அது உங்களைப்போன்ற ஒருவருக்காக இருக்காது. இதை நீங்கள் ஸ்டார்டப் ஐடியாக்கள் உருவாக்குவதற்காகவும் பயன்படுத்தலாம். உங்களை போல இல்லாதவர்களுக்கு தொழில்நுட்பத்தில் இருந்து என்ன தேவை?  

ஸ்டார்டப்கள் என்று நினைத்தாலே, பெரும்பாலானவர்கள் ஆப்பிள் அல்லது கூகிள் என்று நினைப்பார்கள். எல்லோருக்கும் இந்த நிறுவனங்களை தெரியும். அவை பெரிய பிராண்ட்கள். ஆனால் அதைபோன்ற பெரிய புகழ்பெற்ற ஸ்டார்டப்பின் பின்பும், குறைந்தது இருபது நிறுவனங்களாவது வெளியே தெரியாமல் அடிப்படை கட்டுமானத்திலோ, சில பிரத்தியேகமான சந்தைகளிலோ செயல்பட்டுக்கொண்டிருக்கும். அதனால் நீங்கள் ஒரு வெற்றிகரமான ஸ்டார்டப் துவங்கினீர்களென்றால், அவற்றில் ஒன்றாக இருப்பதற்கான சாத்தியமே அதிகம். 

வேறு ஒரு வகையில் சொல்வதென்றால், நீங்கள் ஒரு ஸ்டார்டப் துவங்கி அது ஒரு பெரிய கன்ஸ்யூமர் பிராண்டாக மாற வேண்டுமென்றால், அதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவு. சில பிரத்யேக சந்தைகளிலே சாத்தியங்கள் அதிகம். ஸ்டார்டப்கள் எப்படி பணம் பண்ணுகின்றன என்றால், மக்களுக்கு அவர்கள் பயன்படுத்துவதை விட சிறந்ததை தருவதால். அதனால், அவர்கள் பயன்படுத்துவதிலே எது மிக மோசமாக உள்ளதோ, அதை தேர்ந்தெடுத்தல் வெல்வதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். பெரிய நிறுவனங்களின் ஐடி துறைகளைவிட அதற்கு சிறந்த இடங்கள் கிடையாது. மென்பொருளுக்காக நிறுவனங்கள் எவ்வளவு செலவிடுகிறார்கள் என்று பாருங்கள். அந்த பணத்திற்கு அவர்களுக்கு கிடைக்கும் மென்பொருளை பாருங்கள். இரண்டிற்கும் இடையே இருக்கும் இடைவெளி ஒரு பெரிய வாய்ப்பு.  

உங்களுக்கு ஸ்டார்டப்கள் துவங்குவதற்கு யோசனைகள் வேண்டும் என்றால், ஒரு நடுத்தர, தொழில்நுட்பம் சாராத நிறுவனத்தில் சில வாரங்கள் செலவிடுங்கள். அவர்கள் கணினியை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள். பெரும்பாலான நல்ல கொந்தர்களுக்கு இந்த இடங்களிலெல்லாம் என்ன கொடுமை நடக்கிறது என்பதே தெரியாது. 

சிறிய நிறுவனங்களுக்கு தேவைப்படும் மென்பொருளை எழுதுங்கள், ஏனென்றால் அவர்களுக்கு விற்பது எளிது. பெரிய நிறுவனங்களுக்கு விற்பதில் லாபம் மிக அதிகமென்பதால், அவற்றிற்கு விற்பவர்கள் நிறைய நேரத்தையும், பணத்தையும் செலவிடுவார்கள். நீங்கள் உங்கள் மூளையை கசக்கி ஆரக்கிள் நிறுவனத்தைவிட சிறந்த மென்பொருளை உருவாக்கினாலும், உங்களால் ஆரக்கிளின் விற்பனை பிரதிநிதியை வென்றுவிட முடியாது. அதனால் சிறந்த தொழில்நுட்பத்தின் மூலம் வெல்ல வேண்டுமென்றால், நீங்கள் சிறிய நிறுவனங்களை இலக்காக்குங்கள். [4]

தொலை நோக்கில் எப்படியுமே அவர்களே சந்தையின் மதிப்புமிக்கவர்கள். தொழில்நுட்பத்தை பொறுத்தவரை விலை குறைந்த மென்பொருள் விலை அதிகமான மென்பொருளை விழுங்கிவிடும்.  திறன் நிறைந்த மென்பொருளின் விலையை குறைப்பதைவிட, விலைகுறைந்த மென்பொருளை திறன்மிகுந்ததாக மாற்றுவது எளிது. அதனால் விலை குறைந்த மென்பொருட்கள் எளிய அம்சங்களோடு துவங்கி, வளர்ந்து வளர்ந்து, “திறன்மிகுந்த” மென்பொருட்களை, ஒரு மூடிய அறையில் அதிகரிக்கும் நீர் மேலே உள்ள கூரையில் ஒட்டிக்கொண்டிருப்பவற்றை மூழ்கடித்து கொல்வது போல கொன்றுவிடும். மெயின்ஃபிரேம்களை சன் மைக்ரோசிஸ்டம் அப்படி வென்றது. இண்டெல் சன்னை இப்பொது வெல்கிறது. இண்டர்லீஃப், பிரேம்மேக்கர் போன்ற கணினிகளுக்கான மென்பொருள் வடிவமைப்பாளர்களை மைக்ரோசாஃப்டின் வேர்ட் வென்றது. விலைகுறைந்த கேமராக்கள் தொழில்முறை புகைப்பட கலைஞர்களுக்கான கேமராக்களை வென்றதுபோல.(ஸ்மார்ட்போன்கள் இப்போது கேமராக்களை வெல்வது போல. விலைகுறைந்த ஸ்மார்ட்போன்கள் விலைஅதிகமான ஸ்மார்ட்போன்களை வெல்வது போல). வீடியோக்களை தொகுக்கும் நிறுவனங்களை ஏவிட் வென்றது. ஏவிட்டை ஆப்பிள் வெல்கிறது. ஹென்றி ஃபோர்ட் தனக்கு முந்தைய கார் தயாரிப்பாளர்களை அப்படி வென்றார். எளிய, விலைகுறைந்த மென்பொருளை உருவாக்கினீர்கள் என்றால், அதை எளிதாக விற்கமுடியும் என்பது மட்டுமல்ல, மொத்த சந்தையையும் வென்றுவிடக்கூடிய சிறந்த இடத்திலும் இருப்பீர்கள். 

உங்களுக்கு கீழே வேறொருவரை பறக்க அனுமதிப்பது அபாயமானது. விலைகுறைந்த, எளிய பொருளை விற்றீர்களென்றால்,  சந்தையின் “லோ எண்ட்” உங்களுடையது. அது உங்களுடையதாக இல்லையென்றால், அதை யார் செய்கிறார்களோ, அவர்களின் பார்வை உங்கள்மீது இருக்கும்.

முதலீட்டை திரட்டுதல் 

இவற்றை எல்லாம் செய்வதற்கு உங்களுக்கு பணம் வேண்டும். சில ஸ்டார்டப்கள் அவர்களே அந்த முதலீட்டை திரட்டிக்கொள்கிறார்கள் – மைக்ரோஸாப்ட் — ஒரு உதாரணம். முதலீட்டாளர்களிடம் இருந்து பணம் திரட்டுவது புத்திசாலித்தனம் என்று நினைக்கிறேன். நீங்களே அந்த பணத்தை திரட்ட வேண்டும் என்றால், முதலில் மென்பொருள் சேவைகள்  (consulting) வழங்கும் நிறுவனமாக துவங்க வேண்டும். பின்பு மென்பொருளை உருவாக்கும் நிறுவனமாக (product) மாற்றுவது கடினம்.

பொருளியல் ரீதியில் ஸ்டார்டப் என்பது ஒரு பாஸ்/ஃபெயில் தேர்வுள்ள பாடத்தை போன்றது. ஒரு ஸ்டார்டப்பிலிருந்து செல்வந்தராக வேண்டுமென்றால், அந்த நிறுவனம் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டுமே தவிர, நிறுவனத்தில் நீங்கள் வைத்திருக்கும் பங்கை அதிகரிக்க முயலக்கூடாது. அதனால், உங்களின் பங்கை நீங்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் வேறொன்றோடு மாற்றிக்கொள்ளது புத்திசாலித்தனமானது.

நிறைய கொந்தர்களுக்கு, முதலீட்டாளர்களை ஈர்ப்பது என்பது பயங்கரமான, மர்மமான செயல்முறை. உண்மையில் அது நிறைய நேரத்தை எடுக்கும் வேலை மட்டுமே. “மூதலீட்டை திரட்டுவது” பற்றி ஒரு பொது வரையறையை சொல்கிறேன்.

உங்களுடைய முதல் தேவை, ஒரு முன்மாதிரியை (prototype) உருவாக்குவதற்கு நீங்கள் உழைக்கும்போது உங்கள் செலவுகளை எதிர்கொள்ள தேவைப்படும் பணம் (சில பத்தாயிரம் டாலர்கள்). இதை விதைமுதல் (seed capital) என்கிறார்கள். இது மிகக்குறைவான பணம் என்பதால், விதைமுதலை திரட்டுவது ஓரளவு எளிது. பணம் கிடைக்குமா / இல்லையா என்றும் விரைவாகவே தெரிந்துவிடும்.

வழக்கமாக, இந்த விதைமுதலை நீங்கள் ஒரு சில பணக்காரர்களிடமிருந்து திரட்டுவீர்கள். அவர்களை ஏஞ்சல்கள் என்பார்கள். பெரும்பாலும் இந்த ஏஞ்சல்கள் தொழில்நுட்பத்தின் மூலம் பணக்காரர்களாக ஆனவர்கள். இந்த கட்டத்தில், முதலீட்டாளார்கள் உங்களிடமிருந்து விரிவான திட்டங்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். விரைவாக முடிவெடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். ஒரு அரைபக்க ஒப்பந்தம் போட்டு, ஒரு வாரத்தில் பணத்திற்கான காசோலைகள் கிடைப்பது வழக்கமானது. 

நாங்கள் வியாவெப்பை (viaweb)  துவங்கும்போது, எங்கள் நண்பர் ஜூலியனிடமிருந்து $10,000 டாலர்கள் விதைமுதலாக பெற்றோம். அவர் பணத்தைவிட எங்களுக்கு அதிகமாக தந்தார். அவர் ஒரு நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் தலைவர் (Ex CEO) மற்றும் பெருநிறுவனங்களுக்கான வழக்கறிஞர். அதனால் அவர் எங்களுக்கு தேவையான நிறைய அறிவுரைகளை வழங்கினார். எங்கள் நிறுவனத்தை பதிவு செய்ய தேவையான அனைத்து சட்டரீதியான வேலைகளையும் செய்தார். மேலும் இரண்டு ஏஞ்சல் மூதலீட்டாளார்களை அறிமுகப்படுத்தினார். அந்த இருவர் எங்களின் அடுத்தகட்ட முதலீட்டிற்கு பணம் தந்தார்கள். 

சில ஏஞ்சல்களுக்கு, குறிப்பாக தொழில்நுட்பத்துறையை பின்புலமாக கொண்டவர்களுக்கு, நீங்கள் ஒரு செயல்முறை விளக்கம் (demo) அளித்தால் போதுமானது. ஆனால், நிறைய பேர் உங்களின் வியாபார திட்டத்தை (Business plan) எழுத்து வடிவில் கேட்பார்கள். (குறைந்தபட்சம் எதில் முதலீடு செய்கிறோம் என்று பின்பு நினைவு படுத்தி கொள்வதற்கு.)

எங்கள் ஏஞ்சல்கள் பிசினஸ் பிளானை கேட்டபோது நான் கவலைப்பட்டேன். இப்போது நினைத்துப்பார்த்தால் ஆச்சிர்யமாக இருக்கிறது. “பிசினஸ் பிளான்” என்பதில் “பிசினஸ்” இருக்கிறது. அதனால் பிசினஸ் பிளான் எழுதுவது எப்படி என்று ஏதாவது புத்தகத்தை படிக்க வேண்டுமோ என்று நினைத்தேன். அப்படியில்லை. இந்த நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் உங்கள் திட்டத்தின் ஒரு சிறிய குறிப்பு, நீங்கள் எப்படி பணம் பண்னப்போகிறீர்கள், நிறுவனர்களைப்பற்றிய வினைவரலாறை (resume) கேட்பார்கள். நீங்கள் உங்களுக்குள் என்ன சொல்லிக்கொள்வீர்களோ, அதை எழுதினீர்களென்றால் போதும். சில மணி நேரங்கள் போதும். நீங்கள் எல்லாவற்றையும் எழுதுவது, நீங்கள் என்ன செய்யவேண்டும் என்ற மேலும் ஐடியாக்களை தரும்.

ஏஞ்சல்கள் உங்களுக்கு காசோலைகள் தரவேண்டும் என்றால், உங்களிடம் நிறுவனம் என்ற ஒன்று இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தை நீங்களே பதிவு செய்தல் கடினமானது இல்லை. பிரச்சனை என்னவென்றால், ஒரு நிறுவனம் என்றால், அதன் நிறுவனர்கள் யார், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்கு என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒரே மாதிரியான தகுதிகள் கொண்ட இரண்டு நிறுவனர்கள், அந்த நிறுவனத்தின் வெற்றியில் சம அளவு ஈடுபாட்டோடு இருக்கிறார்கள் என்றால் முடிவெடுப்பது எளிதானது. ஆனால் வெவ்வேறு அளவில் உங்கள் நிறுவனத்தில் பங்குகொள்ளும் நிறைய பேர் இருந்தார்கள் என்றார்கள், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு பங்குகளை வழங்குவது என்பது சிக்கலானது. நிறுவனத்தின் பங்குகளை முடிவு செய்துவிட்டு ஒப்பந்தம் போட்டுவிட்டால், பின்பு அதை எளிதில் மாற்றமுடியாது. 

இந்த சிக்கலை தீர்ப்பதற்கு என்னிடம் எந்த தீர்வும் இல்லை. என்ன சொல்ல முடியுமென்றால், அதை சரியாக செய்ய கடினமாக முயலுங்கள். சரியான முடிவு என்பதை கணிக்க ஒருவழிமுறை இருக்கிறது. எல்லா நிறுவனர்களுமே, தாங்கள் செய்யும் வேலை அதிகம், ஆனால் கிடைக்கும் பங்கு குறைவு என்று எண்ணினால், ஓரளவு சரியாகவே பங்கு பிரித்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். 

ஒரு நிறுவனத்தை பதிவு செய்தால் மட்டும் போதாது: காப்பீடு, வணிக உரிமை, வேலையின்மைக்கான ஈடுபணம், வருமான வரித்துறைக்கு தேவையானவை, .. எனக்கு இதில் எதெல்லாம் விடுபட்டது என்று தெரியவில்லை, ஏனென்றால் இதில் எதையும் நாங்கள் செய்யவில்லை. 1996 ஆம் ஆண்டின் முடிவில் எங்களுக்கு பெரிய முதலீடுகள் கிடைத்தபோது, ஒரு திறமையான சி.எஃப்.ஓவை நியமித்தோம். அவர் எல்லாவற்றையும் பின்தேதியிட்டு சரிசெய்தார். நீங்கள் ஒரு நிறுவனம் துவங்கும்போது, எல்லாவற்றையும் சரியாக செய்யவில்லையென்றால் உங்களை யாரும் வந்து கைது செய்யப்போவதில்லை. அது நல்லதுதான். இல்லையென்றால், நிறைய ஸ்டார்டப்கள் துவங்கியிருக்கவே முடியாது.[5]

உங்களை நீங்கள் ஒரு நிறுவனமாக விரைவாக பதிவு செய்துகொள்வது நல்லது. ஏனென்றால் உங்கள் இணை-நிறுவனர்களில் ஒருவரோ, சிலரோ பிரிந்து சென்று நீங்கள் செய்ய நினைத்தையே செய்துவிடலாம். இதுவும் நடக்கிறது. அதனால் நீங்கள் உங்கள் நிறுவனத்தை பதிவு செய்யும் போதும், எல்லோருக்கும் அவர்களுடைய பங்குகளை தரும்போதும், நீங்கள் எல்லா நிறுவனர்களையும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்க வேண்டும்: எல்லோருடைய ஐடியாக்களும் நிறுவனத்திற்கு சொந்தமானது, எல்லோருக்கும் இது ஒன்றே முழுநேர வேலை.

[இது ஒரு திரைப்படமென்றால், இங்குதான் திகிலூட்டக்கூடிய இசை துவங்கும்.]

உங்கள் இணை-நிறுவனர்கள் வேறு எந்த ஒப்பந்தத்திலாவது கையெழுத்திட்டிருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். ஒரு ஸ்டார்டப்பிற்கு நிகழக்கூடிய மோசமான விஷயம் காப்புரிமை பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வது. நாங்கள் அப்படி ஒரு பிரச்சனையை எதிர்கொண்டோம். அது எந்த போட்டி நிறுவனத்தையும் விட, எங்களை கிட்டத்தட்ட கொன்றுவிட்டது.

எங்களை ஒரு நிறுவனத்திற்கு விற்கும்போது, எங்கள் இணை-நிறுவனர்களில் ஒருவர் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அவருடைய மேற்படிப்பின் செலவை ஏற்றுக்கொண்ட  ஒரு பெரிய நிறுவனம், அவருடைய எல்லா ஐடியாக்களும் அந்த நிறுவனத்திற்கே சொந்தம் என்று ஒப்பந்தம் போட்டிருந்தது. அப்படியென்றால் எங்கள் மென்பொருளின் ஒரு பெரும்பகுதி யாரோ ஒருவருக்கு சொந்தம் என்று அர்த்தம். இந்த சிக்கலை தீர்க்கும் வரை, விற்பனையை நிறுத்தினார்கள். எங்களை வாங்கப்போகிறார்களே என்ற எண்ணத்தில், குறைவான பணத்தையே கையிருப்பாக வைத்திருந்தோம். முதலீட்டை திரட்ட வேண்டிய அவசர தேவை ஏற்பட்டது. காப்புரிமை சிக்கல்கள் தீரும்வரை முதலீட்டை திரட்டுவதும் எளிதல்ல. இந்த சிக்கல்கள் எவ்வளவு தீவிரமானவை என்று புதிய முதலீட்டாளர்களால் முடிவெடுக்க முடியவில்லை.

எங்களில் அதுவரை பணம் முதலீடு செய்தவர்களுக்கு எங்கள் சிக்கல்கள் தெரிந்தது. வேறு எங்கும் போய் பணத்தை திரட்ட முடியாது என்பதால் சில சித்து வேலைகளில் இறங்கினார்கள். அவற்றை நான் விரிவாக விளக்க விரும்பவில்லை. வாசகர்களுக்கு சொல்ல விரும்புவது “ஏஞ்சல்கள்” என்றெல்லாம் ஒரு பெயருக்குத்தான் சொல்கிறோம். உண்மையில் இல்லை. எல்லா நிறுவனர்களும் நாங்கள் விலகிக்கொள்கிறோம், நீங்களே சர்வர்களை ஓட்டிக்கொள்ளுங்கள் என முதலீட்டாளர்களிடம் சொல்லிவிட்டோம். இந்த தாமதத்தை காரணம் காட்டி, எங்களை வாங்க ஒப்புக்கொண்டவர்கள் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டார்கள்.

ஒரு அதிசயம் போல எல்லாம் நல்ல வகையில் முடிந்தது. முதலீட்டாளர்கள் பின்வாங்கினார்கள்; அடுத்த சுற்று முதலீட்டை ஒரு நல்ல மதிப்பீட்டில் திரட்டினோம்; அந்த பெரிய நிறுவனம் எங்கள் மென்பொருளில் தங்களுக்கு எதுவும் பங்கில்லை என்று ஒரு பேப்பரை தந்தது; ஆறு மாதங்கள் கழித்து யாஹூ நிறுவனம் முதலில் வந்த நிறுவனத்தைவிட அதிக பணத்திற்கு எங்களை வாங்க ஒப்புக்கொண்டார்கள். முடிவில் எல்லாம் இன்பமயம். ஆனால் இந்த அழுத்தம் என் வாழ்நாளின் சில வருடங்களை எடுத்துக்கொண்டது. 

நாங்கள் செய்ததை செய்யாதீர்கள். ஒரு ஸ்டார்டப் துவங்குவதற்குமுன், எல்லா நிறுவனர்களின் காப்புரிமை மற்றும் அறிவுசொத்து வரலாறையும் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் ஒரு நிறுவனத்தை துவங்கியபின், சும்மா ஒரு ஐடியாவை மட்டும் வைத்துக்கொண்டிருக்கும் சில இளைஞர்கள், ஆயிரக்கனக்கான டாலர்கள் முதலீட்டை திரட்டுவதற்கு பணக்காரர்களின் கதவை தட்டுவது சரியான செயல் இல்லை என்று தோன்றலாம். ஆனால் நீங்கள் அந்த பணக்காரர்களில் பார்வையில் சிந்தியுங்கள். உங்களுக்கு கொஞ்சம் உற்சாகம் வரலாம். பெரும்பாலான பணக்காரர்கள் நல்ல முதலீட்டை தேடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் உண்மையிலே வெற்றி அடையமுடியும் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் அவர்களுக்குதான் முதலீடு செய்வதற்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறீர்கள். நீங்கள் தரும் எல்லா தொந்தரவுகளுக்கும் பின்னால், அவர்கள் ஒருவேளை இந்த பசங்கள் அடுத்த கூகிளோ என்றுதான் நினைப்பார்கள்.  

பொதுவாக ஏஞ்சல்கள் பொருளியல் ரீதியில் நிறுவனர்களுக்கு சமமானவர்கள். ஏஞ்சல்களின் பங்குகளின் சதவீதமும் நிறுவனர்களுடையதை போலவே அடுத்தடுத்த சுற்றுகளில் குறையும். ஏஞ்சல்களுக்கு எவ்வளவு பங்கு தருவது? அது உங்கள் எதிர்கால திட்டத்தை பொறுத்தது. உங்கள் நிறுவனத்தின் X சதவீதத்தை Y டாலர்களுக்கு தருகிறீர்களென்றால், உங்கள் நிறுவனத்தின் மொத்த மதிப்பையும் நிறுவுகிறீர்கள் என்று அர்த்தம். அந்த மதிப்பில்தான் வழக்கமாக முதலீட்டை திரட்டுவார்கள். உதாரணம்: ஒரு முதலீட்டாளருக்கு மொத்த பங்குகளிலும் (outstanding shares) 5% புதிய பங்குகளை $100,000 டாலர்களுக்கு தருகிறீர்கள் என்றால் நீங்கள் $2 மில்லியன் டாலர்களுக்கு  முதல் திரட்டுவதற்கு முந்தைய மதிப்பீட்டில் (pre-money valuation) ஒப்பந்தம் போட்டு கொண்டீர்கள் என்று அர்த்தம்.

நிறுவனத்தின் மதிப்பை எப்படி முடிவெடுப்பது ? எந்த அறிவார்ந்த வழியும் இல்லை. ஆரம்ப நிலையில் அது ஒரு தோராயமான எண் தான். நான் முதல் திரட்டும்போது இதை யோசிக்கவில்லை. ஜூலியன் எங்கள் நிறுவனத்தின் மதிப்பை பல மில்லியன் டாலர்களாக வைக்க வேண்டும் என்றார். சில ஆயிரம் வரிகள் கொண்ட மென்பொருள் நிரல்களை வைத்துக்கொண்டு பல மில்லியன் டாலர்கள் என்று சொல்வது எனக்கு சரியென்று தோன்றவில்லை. கடைசியில் ஒரு மில்லியன் என்று ஒரு சமரசத்திற்கு வந்தோம். ஜூலியன் அதைவிட குறைவான மதிப்பிற்கு யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள் என்றார்.[6]

அப்பொழுது நான் என்ன புரிந்து கொள்ளவில்லை என்றால், அந்த மதிப்பு நாங்கள் அதுவரை எழுதிய நிரல்களுக்கானது இல்லை. அது எங்களுக்கு இருக்கும் ஐடியாக்களுக்காக (அது சரியான மதிப்பு), மற்றும் எதிர்காலத்தில் நாங்கள் செய்யப்போகும் எல்லா வேலைகளுக்காகவும் (அது மிக அதிகம்). 

அடுத்த சுற்று முதலீட்டை திரட்டுவதற்கு நீங்கள் வென்சர் கேப்பிடல் நிறுவனங்களுடன் (விசி) ஒப்பந்தம் போடுவீர்கள். நீங்கள் எல்லா பணத்தையும் செலவு செய்யும் வரை காத்திருக்கவேண்டாம். விசிக்கள் பொறுமையாகத்தான் முடிவெடுப்பார்கள். மாதங்கள் ஆகலாம். நீங்கள் அவர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போதே பணம் தீர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

ஏஞ்சல்களிடம் இருந்து முதல் திரட்டுவதை விட விசிக்களிடமிருந்து முதல் திரட்டுவது கடினம். அவர்கள் முதலீடு செய்யும் பணம் அதிகம் – மில்லியன் கணக்கில் – என்பதால், அந்த ஒப்பந்தங்கள் அதிக காலம் எடுக்கும், உங்கள் பங்குகளின் சதவீதத்தை குறைக்கும், நிறைய கடுமையான விதிமுறைகளும் இருக்கும்.

சில நேரங்களில் விசிக்கள் புதிய தலைமை செயல் அலுவலரை (சீ.யீ.ஓ) வை நியமிக்க விரும்புவார்கள். உங்களுக்கு ஒரு நிறுவனத்தை நடத்தும் அனுபவமோ, வணிக பின்புலமோ இல்லை என்று காரணம் சொல்லுவார்கள். சில இடங்களில் இது பொருந்தலாம். இருப்பினும் பில் கேட்ஸ் இளைஞர், பிஸினஸ் அனுபவம் எல்லாம் எதுவும் இல்லை. அவர் நன்றாகவே நிர்வகித்தார். ஸ்டீவ் ஜாப்ஸை அவருடைய நிறுவனத்தில் இருந்து பிஸினஸ் தெரிந்த அனுபவசாலிகள் விரட்டினார்கள். பின்பு அந்த அனுபவசாலிகள் ஆப்பிளை அழிவிற்கு கொண்டு சென்றார்கள். அதனால் நான் அனுபவம் நிறைந்த, வணிக பின்புலம் உள்ளவர்களை “செய்திவாசிப்பாளர்கள்” என்று அழைப்பேன். நல்ல ஹேர்ஸ்டைல், ஆழமான, தன்னம்பிக்கையுடைய குரலில் பேசுபவர்கள். ஆனால் டெலிபிராம்ப்டரை பார்த்து படிப்பதைவிட மேலதிகமாக ஒன்றும் தெரியாது.

நாங்கள் நிறைய விசிக்களிடம் பேசினோம். ஆனால் நாங்கள் எங்கள் ஸ்டார்டப்பை ஏஞ்சல் பணத்திலிருந்தே முழுவதும் நடத்திக்கொண்டோம். ஏதாவது புகழ் பெற்ற விசியிடம் சென்றால், பணத்தோடு “செய்திவாசிப்பாளார்” யாரையாவது சேர்த்து தந்துவிடுவார்கள் என்று பயந்தோம். செய்தியாளர்களிடம் பேசுவதோடு நிறுத்திக்கொண்டால் பரவாயில்லை, ஆனால் நிறுவனத்தையும் நடத்தவேண்டும் என்று சொன்னால்? அது அழிவிற்குதான் கொண்டு செல்லும். எங்கள் மென்பொருள் சிக்கலானது. எங்கள் நிறுவனத்தின் குறிக்கோளே சிறப்பான தொழில்நுட்பத்தின் மூலம் வெல்வதுதான். எல்லா “ஸ்டிராடர்ஜி” முடிவுகளும் தொழில்நுட்பம் சார்ந்த முடிவுகள்தான், அதற்கு எங்களுக்கு எந்த உதவியும் தேவையில்லை. 

நாங்கள் பங்கு சந்தைக்கு போகாதற்கும் இது ஒரு காரணம். 1998 எங்கள் நிறுவன தலைமை நிதி தலைவர் பொதுசந்தையில் பட்டியலிடும் ஐ.பி.ஓ யோசனையை சொன்னார். அன்று இருந்த சூழலில் நீங்கள் நாய் உணவு விற்கும் வலைதளமாக இருந்தாலும் ஐ.பி.ஓ போகலாம். மதிப்புமிக்க மென்பொருளையும், நல்ல வருமானத்தையும் வைத்திருந்த எங்கள் நிறுவனத்திற்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. என்னுடைய பயமெல்லாம், ஐ.பி.ஓ போனால், ஒரு செய்திவாசிப்பாளரை — “வால் ஸ்டீரிட்டின் மொழியில் பேசக்கூடிய” ஒருவரை — சீ.யீ.ஓவாக சேர்க்க வேண்டியிருக்குமே.

கூகிள் வழக்கமான வழியை பின்பற்றாதது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவர்கள் ஐ.பி.ஓ சென்ற போது, வால் ஸ்டிரீட்டின் மொழியில் பேசவில்லை. அதனால் வால் ஸ்டிரீட் அவர்களின் பங்குகளை வாங்கவில்லை. அதனால் மொத்தமாக வால்ஸ்டிரீட் இப்போது வருந்துகிறார்கள். அடுத்த முறை கற்றுக்கொள்வார்கள். பணம் என்று வந்துவிட்டால் வால் ஸ்டீரீட் புதிய மொழிகளை வேகமாக கற்றுக்கொள்ளும்.

விசிக்களுடன் பேசும்போது நீங்கள் நினைப்பதைவிட உங்களுக்கு அதிக வலிமை (லிவிரேஜ்) உள்ளது. என்ன காரணம் என்றால் நிறைய விசிக்கள் இருக்கிறார்கள். நான் அவர்களுடன் பேசும்போது ஒன்றை தெரிந்து கொள்கிறேன். இது “விற்பவரின் சந்தை” (வாங்குபவரின்  சந்தை அல்ல). நல்ல டீல்கள் குறைவாகவே உள்ளன. இப்போது கூட மிக அதிகமான பணம் மிகக்குறைவான பேரங்களுக்கு பின்னேதான் அலைகின்றது.

விசிக்களில் ஒரு பிரமிட் உள்ளது. அதன் உச்சியில் செகோய்யா (Sequoia), க்ளைனெர் பெர்கின்ஸ் (Kleiner Perkins) போன்ற புகழ்பெற்ற விசிக்கள் உள்ளனர். அவர்களுக்கு கீழே நீங்கள் கேள்வியே படாத எண்ணற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு உள்ள பொதுமை – அவர்கள் அனைவரும் வைத்திருக்கும் ஒரு டாலருடைய மதிப்பு சமமே. நிறைய விசிக்கள் நாங்கள் வெறும் பணம் மட்டும் தருவதில்லை – அறிவுரை மற்றும் எங்களின் தொடர்புகளையும் தருகிறோம் என்பார்கள். நீங்கள் வினோத் கோஸ்லா, ஜான் டூயர், மைக் மோரிட்ஸிடம் பேசினால் அவர்கள் சொல்வது உண்மை. ஆனால் உணவு சங்கிலியில் கீழே சென்றால், மிகவேகமாகவே முட்டாள் விசிக்களை சந்திப்பீர்கள். மேலிருந்து சில படிகள் இறங்கினீர்கள் என்றாலே, வயர்ட் போன்ற பத்திரிக்கைகளில் சில வார்த்தைகளை கற்றுக்கொண்ட வங்கி ஆட்களிடம் தான் நீங்கள் பேசுவீர்கள். (உங்கள் பிராடக்ட் XML உபயோகப்படுத்துகிறதா?). அதனால் தொடர்புகளையும், அறிவுரைகளையும் சிறிது சந்தேகத்தோடு பாருங்கள். அடிப்படையில் விசிக்கள் பணம் கிடைக்ககூடிய ஒரு இடம். யார் விரைவாக, குறைந்த நிபந்தனைகளோடு பணம் தருகிறார்களோ அவர்களிடம் இருந்து பணம் வாங்கிக்கொள்ளுங்கள்.  

நீங்கள் விசிக்களிடம் எந்தளவிற்கு உங்கள் நிறுவனத்தை பற்றி சொல்லலாம்? நாளை உங்கள் போட்டி நிறுவனங்களிலும் அவர்கள் முதலீடு செய்யலாம். சிறந்த திட்டமாக எனக்கு தோன்றுவது, எதையும் அதி பயங்கர ரகசியமாகவும் வைக்கவேண்டாம், எல்லாவற்றையும் சொல்லவும் வேண்டாம். எல்லா விசிக்களும் சொல்வதைபோல, அவர்களுக்கு ஐடியாக்கள் அல்ல, அந்த ஐடியா தோன்றிய மனிதர்களைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். உங்களிடம் அவர்கள் பேச வருவதே, உங்களை எடைபோடுவதற்குத்தான். உங்கள் ஐடியாவை அல்ல. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்கு ஓரளவு தெரியுமென்றால், நீங்கள் விசிக்களிடம் சிலவற்றை சொல்லாமல் விட்டுவிடலாம்.[7]

விசிக்களின் பணம் உங்களுக்கு தேவையில்லையென்றாலும் எவ்வளவு விசிக்களுடம் பேசமுடியுமோ, அவ்வளவு விசிக்களிடம் பேசுங்கள். ஏனென்றால் அ) உங்களை எதிர்காலத்தில் வாங்கக்கூடிய பெரிய நிறுவனத்தின் நிர்வாகக்குழுவில் (board) அவர்கள் இருக்கலாம் ஆ) நீங்கள் சிறந்தவராக இருந்தால், அவர்கள் உங்கள் போட்டியாளர்களின் நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் இருப்பார்கள். விசிக்களை தொடர்பு கொள்ள சிறந்த வழி, (குறிப்பாக அவர்களின் பணம் உங்களுக்கு தேவையில்லை, ஆனால் அவர்களின் அறிமுகம் தேவையென்றால்), விசிக்கள் அவ்வப்போது ஒருங்கிணைக்கும் ஸ்டார்டப் நிகழ்வுகளில் பங்கெடுக்கலாம். 

சிக்கனமாக இருத்தல்

விசிக்களிடம் இருந்து முதலீடுகள் கிடைத்தபிறகு, பணத்தை என்ன செய்வது ? செலவு செய்யாமல் இருக்க வேண்டும். கிட்டத்தட்ட தோற்ற எல்லா ஸ்டார்டப்களிலும் இருக்கும் உடனடி காரணம் பணம் தீர்ந்துவிடுதல். வழக்கமாக தீவிரமான காரணம் ஒன்றும் இருக்கும். இருப்பினும் உடனடி காரணத்தை தவிர்க்க கடுமையாக முயல வேண்டும்.

இணைய குமிழி காலகட்டத்தில் நிறைய ஸ்டார்டப்கள் “விரைவாக வளருங்கள்” என்ற கொள்கையை பின்பற்ற முயற்சித்தன. அதன் அர்த்தம் நிறைய  நுகர்வோர்களை விரைவாக சேர்க்க வேண்டும் என்பது. ஆனால் அதன் அர்த்தத்தை விரைவாக வேலைக்கு ஆட்களை எடுக்கவேண்டும் என்று மாற்றிக்கொண்டார்கள்.

இந்த இரண்டு வடிவங்களில், நிறைய நுகர்வோரை சேர்க்க வேண்டும் என்பது விரும்பத்தக்கதே. அதுகூட மிகைப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன். அதன் அர்த்தம் முதலில் சந்தைக்கு வந்து எல்லா நுகர்வோர்களையும் அள்ளிக்கொண்டு, போட்டியாளர்களுக்கு யாரையும் விட்டுவைக்கக்கூடாது என்பது. நிறைய தொழில்களில் முதலில் துவங்குவதன் அனுகூலம் மிக அதிகமெல்லாம் இல்லை. கூகிள் அதற்கு உதாரணம். தேடுதளங்களுக்கான சந்தை ஏற்கனவே பெரிய நிறுவனங்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்தது. யாஹூ, லைகோஸ், எக்ஸைட், இன்ஃபோசீக், ஆல்டாவிஸ்டா, இன்க்டோமி என தேடுதள நிறுவனங்கள் பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து தங்களின் அடையாளத்தை (brand) நிறுவியிருந்தன. 1998 ஆம் ஆண்டு தேடுதளங்கள் விருந்திற்கு வருவது மிக தாமதமான காலகட்டம்தான்.

ஆனால் கூகிளின் நிறுவனர்கள் அறிந்தது போல, தேடுதளங்களை பொறுத்தவரை அடையாளத்தின்  மதிப்பு பூஜியம்தான். நீங்கள் எப்போது வேண்டுமாலும் வந்து, இருப்பதை விட சிறந்தை தந்தீர்கள்  என்றால், நுகர்வோர் கொஞ்சம் கொஞ்சமாக உங்களிடம் வருவார்கள். இந்த கருத்தை வலியுறுத்துவதை போல, கூகிள் எந்த விளம்பரமும் செய்யவில்லை. 

கூகிளால் புதைக்கப்பட்ட போட்டியாளர்கள் எல்லாம் தாங்கள் செலவு செய்த பல மில்லியன் டாலர்களை, தங்கள் மென்பொருளை மேம்படுத்துவதற்கு செலவிட்டு இருக்கலாம். எதிர்கால ஸ்டார்டப்கள் அந்த தவறில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். சிகரெட், வோட்கா, துணிசோப்பு போல நீங்கள் விற்கும் பொருள் (அந்த மொத்த சந்தையும்) எல்லாம் ஒன்றே போல இருந்தால் தவிர, பிராண்டிற்காகவும், விளம்பரத்திற்காகவும் நிறைய செலவு செய்தால் ஏதோ பிரச்சனை என்று அர்த்தம். மிகச்சில வலைதள நிறுவனங்களே ஒன்றே போல இருக்கின்றன. இப்போது டேட்டிங் தளங்கள் பெரிய விளம்பரங்களை செய்கின்றன. (இந்த நிறுவனங்களெல்லாம் அதன் விளம்பரத்துறை ஆட்களால் நடத்தப்படுகின்றன என நினைக்கிறேன்) அப்படியென்றால் அங்கு ஒரு சிறந்த நிறுவனத்திற்கான தேவை இருக்கிறது. 

எங்கள் சூழலால் எங்கள் நிறுவனம் பொறுமையாகவே வளர்ந்தது. பின்னால் யோசிக்கும்போது, அது நல்லதே என்று தோன்றுகிறது. எங்கள் நிறுவனத்தின் அனைத்து வேலைகளையும் எங்கள் நிறுவனர்களே செய்து பழகினார்கள். நிரல் எழுதும்போதே, நான் விற்பனையையும், நுகர்வோர் சேவையையும் பார்த்துக்கொண்டேன். விற்பனையில் நான் சிறப்பாக செயலாற்றவில்லை. நான் விடாமுயற்சியுடன் இருந்தேன். ஆனால் ஒரு நல்ல விற்பனை பிரதிநிதியின் நாசூக்கான பேச்சு என்னிடம் இல்லை. எங்களுக்கு வாடிக்கையாளராக வரக்கூடியவர்களுக்கு என் செய்தி: இணையத்தில் விற்கவில்லையென்றால் நீ ஒரு முட்டாள், அப்படி நீ இணையத்தில் வேறொரு மென்பொருளை பயன்படுத்தி விற்றால் நீ ஒரு முட்டாள். இது இரண்டுமே உண்மை. ஆனால் இப்படி சொன்னீர்களென்றால் உங்கள் பொருளை வாங்க யாரும் வரமாட்டார்கள்.

நுகர்வோருக்கான சேவை வழங்குவதில் நான் சிறப்பாகவே செயல்பட்டேன். நீங்கள் வாங்கிய ஒரு பொருளை பற்றி எல்லாமே தெரிந்த ஒரு சேவையாளரை நினைத்துப்பாருங்கள். போனிலேயே நீங்கள் சொன்ன குறைகளை கேட்டு, சரிபார்த்து, மென்பொருளில் பழுதிருந்தால் மன்னிப்பு கேட்டு, உடனே பழுதை நீக்கும் ஒரு சேவையாளர். வாடிக்கையாளர்கள் எங்களை மிகவும் விரும்பினார்கள். நாங்களும் அவர்களை விரும்பினோம். பெரிய விளம்பரமில்லாமல், வாடிக்கையாளர்களின் வாய் வார்த்தையால் நீங்கள் மிக நிதானமாக வளரும்போது, உங்களை முதலில் கண்டுகொண்ட வாடிக்கையாளர்கள் மிக புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்களாகவேதான் உங்களை கண்டுபிடித்திருப்பார்கள். ஒரு ஸ்டார்டப்பின் துவக்கத்தில், புத்திசாலியான வாடிக்கையாளரைப்போல உபயோகமான ஒரு விஷயம் கிடையாது. நீங்கள் அவர்கள் சொல்வதை கவனித்தால், எப்படி ஒரு வெல்லும் பொருளை செய்வது என்று சொல்லித்தருவார்கள். இலவசமாக அறிவுரை சொல்வது மட்டுமல்ல, அதற்கு அவர்கள் உங்களுக்கு பணமும் தருவார்கள்.   

1996 ஆம் ஆண்டின் துவக்கித்தில் நாங்கள் அதிகாரபூர்மாக எங்கள் நிறுவனத்தை துவங்கினோம். அந்த வருடத்தின் முடிவில் 70 வாடிக்கையாளர்கள் கிடைத்தார்கள். “வேகமாக வளருங்கள்” காலகட்டம் அது. மிக சிறிதாகவும், வெளியே யாருக்கும் தெரியாமல் இருக்கிறோமே என்றும் எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் நாங்கள் சரியானவற்றை செய்து கொண்டிருந்தோம். நீங்கள் பெரிதாக வளர்ந்து விட்டால் (வாடிக்கையாளர் அல்லது ஊழியர்கள் எண்ணிக்கையிலோ), உங்கள் பிராடக்டை மாற்றுவது கடினம். அந்த வருடம் எங்கள் மென்பொருளை மேம்படுத்தும் ஆய்வுக்கூட வருடம். அந்த வருட முடிவில், எங்கள் போட்டியாளர்களைவிட மிக அதிக தூரம் சென்றுவிட்டோம். அவர்கள் எங்களை தொடுவதற்கு  வாய்ப்பே இல்லை. எங்கள் நிறுவனத்தின் எல்லா கொந்தர்களும் வாடிக்கையாளர்களிடம் நிறைய நேரம் உரையாடியதால், இணைய வணிகத்தை பற்றி வேறு யாரையும் விட எங்களுக்கு நன்றாக தெரிந்தது.

ஸ்டார்டப்பின் வெற்றிக்கு இதுதான் முக்கியம். உங்கள் வணிகத்தை புரிந்து கொள்வதைவிட வேறு எதுவும் முக்கியம் இல்லை. வணிகத்தில் இருக்கும் எல்லாருக்கும் அது புரியும் இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இல்லை. கூகிளின் ரகசிய ஆயுதம், அவர்கள் தேடுபொறியை சரியாக புரிந்து கொண்டார்கள் என்பதுதான். கூகிள் வந்தபோது நான் யாஹூவில் வேலை செய்தேன். யாஹூவிற்கு தேடுபொறிகள் புரியவில்லை. எனக்கு எப்படி தெரியுமென்றால், அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு நாம் தேடுபொறியை மேம்படுத்த வேண்டும் என்று சொன்னேன். எனக்கு ஒரு பதில் வந்தது: யாஹூ வெறும் ஒரு தேடுதளம் இல்லை. நம் தளங்களுக்கு வருபவர்களில் மிகக்குறைந்த அளவே தேடுதளத்திற்காக வருகிறார்கள். ஒரு மாதத்தின் வளர்ச்சிக்கும் குறைவான ஆட்களே வருகிறார்கள். இப்பொழுது நாம் “ஒரு மீடியா நிறுவனம்”, “போர்ட்டல்” அல்லது என்னெனவோ, நாம் இப்பொழுது தேடுபொறியை பத்திரமாக உதிர்த்துவிடலாம், தொப்புள் கொடியை போல என்றார்கள்.

தேடுதளம் மிக குறைந்த பார்வையாளர்களை கொண்டுவந்தாலும், வரும் பெரும்பாலானவர்கள் அங்கே தான் துவங்குகிறார்கள். (யாஹூவின் மற்ற பக்கங்களுக்கு பின்பு உலாவுகிறார்கள்). யாஹூவிற்கு இப்போது புரிகிறது என்று நினைக்கிறேன். 

நிறைய வளைதளங்களுக்கு இன்னுமே புரியாத சிலவற்றை கூகிள் சரியாக புரிந்து வைத்திருக்கிறது. அதில் முக்கியமானது உங்கள் பயனர்கள் விளம்பரதாரர்களை விட முக்கியமானவர்கள். விளம்பரதாரர்கள் பணம் தருகிறவர்கள், பயனர்கள் இலவசமாக பயன்படுத்துபவர்களாக இருந்தாலும்.  எனக்கு பிடித்த ஒரு வாசகம் “மக்கள் வழிநடத்தினால், தலைவர்கள் பின் தொடர்வார்கள்.” அதை இணையத்திற்காக இப்படி மாற்றிச்சொல்லலாம். “எல்லா பயனர்களும் வந்தார்களென்றால், விளம்பரதாரர் பின்தொடர்வார்கள்.” பொதுவாக சொல்ல வேண்டுமென்றால், உங்கள் பயனர்களை திருப்திபடுத்தும் விதத்தில் பொருளை வடிவமைப்பு செய்யுங்கள். பின்பு எப்படி பணம் பன்னுவது என்று யோசித்துக்கொள்ளலாம். பயனர்களை முதன்மை படுத்தவில்லையென்றால், உங்கள் போட்டியாளர்கள் நுழையும் இடைவெளியை உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

பயனர்கள் விரும்பும் ஒன்றை உருவாக்குவதற்கு, அவர்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பெரிய நிறுவனமாக இருந்தால், இது மேலும் கடினம். அதனால் நான் சொல்வது, “பொறுமையாக வளருங்கள்”. உங்கள் முதலீட்டை பொறுமையாக செலவு செய்தீர்களென்றால், நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய நேரம் கிடைக்கும்.

பணத்தை பொறுமையாக செலவு செய்வதற்கு மற்றுமொரு காரணம்: சிக்கனமான பண்பாட்டை ஊக்குவித்தல். யாஹூவிற்கு அது புரிந்தது. டேவிட் ஃபிலோவின் பதவி “சீஃப் யாஹூ” (யாஹூவின் தலைவர்), ஆனால் அவர் தன்னை பெருமையாக “சீப் யாஹூ” (யாஹூவின் கஞ்சர்) என்று சொல்லிக்கொள்வார். நாங்கள் யாஹூவில் சேர்ந்தவுடன், ஃபிலோவிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது — விலை அதிகமான ரெயிட்(RAID) டிரைவ்களில் இவ்வளவு தகவல்களை சேமிக்க வேண்டுமா என்று ? நான் அந்த கேள்வியால் ஈர்க்கப்பட்டேன். யாஹுவின் சந்தை மதிப்பு அப்போது பல பில்லியன் டாலர்கள். இருந்தாலும், சில கிகாபைட்டுகளை வீண் செய்வதைப்பற்றி கவலைப்படுகிறார்கள்.

நீங்கள் விசிக்களிடமிருந்து சில மில்லியன் டாலர்கள் முதலீட்டை திரட்டியவுடன், பணக்காரர் ஆகிவிட்டதை போல தோன்றும். நீங்கள் பணக்காரர் இல்லை என்று உணரவேண்டியது மிக முக்கியம். அதிக வருமானம் உள்ள நிறுவனமே பணக்கார நிறுவனம். நீங்கள் திரட்டிய முதலீடு வருமானம் அல்ல. இந்த செல்வத்தை முதலீட்டாளர்கள் உங்களுக்கு தந்திருப்பது, நீங்கள் வருமானத்தை பெருக்குவதற்காக. அதனால், உங்கள் வங்கியில் பல மில்லியன் டாலர்கள் இருந்தாலும், நீங்கள் இன்னும் ஏழைதான்.   

ஸ்டார்டப்கள் தங்களை ஒரு முதுகலை மாணவனாக உணரவேண்டும், ஒரு சட்ட நிறுவனத்தைபோல அல்ல. சிக்கனமாக இருக்க பழக வேண்டுமே தவிர, செலவை அதிகரிக்க கூடாது. நாங்கள் இதற்கு வைக்ககூடிய தேர்வு, அந்த ஸ்டார்டப் ஏரோன் நாற்காலிகள் வைத்திருக்கிறார்களா என்பது. ஏரோன் நாற்காலிகள் குமிழி காலகட்டதில் வந்து, நிறைய ஸ்டார்டப்கள் அதை வாங்கினார்கள். குறிப்பாக விசிக்களின் பணத்தில் பெரியவர்களைப்போல நடிக்கும் சிறுவர்களால் நடத்தப்பட்ட ஸ்டார்டப்கள். நாங்கள் நடத்திய ஸ்டார்டப் மிக சிக்கனமானது. எங்கள் நாற்காலிகளில் கைகள் அவ்வப்போது உடைந்து விழும். சிறிது கூச்சமாக இருந்தாலும், பின்பு யோசித்துப்பார்த்தால் அந்த கல்லூரியை போன்ற சூழலில் வேலை செய்தது, எங்களுக்கு தெரியாமலே நாங்கள் சரியாக செய்த ஒன்று.

எங்கள் அலுவலகங்கள் ஹார்வேர்ட் ஸ்கொயரில் ஒரு மூன்றடுக்கு மர கட்டிடத்தில் இருந்தது. 1970கள் வரை அது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. பாத்ரூமில் பாத்டப் எல்லாம் இருந்தது. யாரோ ஒரு வித்யாசமான ஆள் அந்த இடங்களில் வாழ்ந்திருக்க வேண்டும். சுவற்றில் இருந்த பல உடைசல்களை எல்லாம் அலுமினிய படலத்தை வைத்து மறைத்திருந்தார்கள். ஏதோ காஸ்மிக் கதிர்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில். பெரிய ஆட்கள் யாராவது வந்து எங்களை பார்க்கும்போது, எங்களுக்கு கொஞ்சம் வெட்கமாக இருக்கும். உண்மையில், ஸ்டார்டப்பிற்கான சரியான இடம் அதுதான். கோட், சூட்களை மதிக்காக குட்டி நிறுவனமாக எங்களை நினைத்துக் கொண்டோம். அந்த எண்ணம் தான் வேண்டும். 

மென்பொருள் உருவாக்குவதற்கு அடுக்குமாடி குடியிருப்புகள்தான் சரியான இடம். பெருநிறுவனங்களின் நாற்காலி வயல்களில் முயன்றிருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெரிந்திருக்கும். வீட்டில் நிரல் எழுதுவது, அலுவலகங்களைவிட எளிதாக இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா ? அப்பொழுது ஏன் வேலை செய்யும் இடத்தை வீட்டைபோல மாற்றி கொள்ள கூடாது?

நீங்கள் ஸ்டார்டபிற்கான இடத்தை தேடும்போது, அது புரெஃபெஷனலாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம். புரெஃபெஷனல் என்றால் அது நாம் செய்யும் வேலையில் இருக்கிறதே தவிர, பளபள கண்ணாடிகளிலும், கட்டிடங்களிலும் இல்லை. அதனால் நான் எல்லா ஸ்டார்டப்களுக்கும் சொல்வது முதலில் ஒரு அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளுங்கள். கார்பரேட் இடங்களையெல்லாம் தவிர்த்துவிடுங்கள். ஸ்டார்டப்பின்போது நீங்கள் உங்கள் அலுவலகத்தில் தான் வாழப்போகிறீர்கள் என்றால், ஏன் ஒரு வாழுமிடத்தையே அலுவலகத்திற்கு தேர்ந்தெடுக்கக்கூடாது?

சிக்கனமாகவும், வேலைக்கு ஏற்றதாகவும் இருப்பதை தாண்டி அடுக்குமாடி குடியிருப்புகள் அலுவலகங்களைவிட நகரின் நல்ல இடங்களில் இருக்கும்.  இரவுணவிற்குபின் மக்கள் வேலை செய்ய திரும்பி வருவது (மென்பொருள் உலகில்) உற்பத்தி திறனை அதிகரிக்கும். போன் அழைப்புகள் எல்லாம் ஓயும் அந்த நேரங்கள்தான் சிறப்பாக வேலையை முடிக்கக்கூடிய நேரம். ஊழியர்கள் ஒன்றாக இரவுணவிற்கு சென்றால் சிறந்த விஷயங்கள் நடக்கும் – அவர்கள் ஐடியாக்களை கலந்து ஆலோசித்து, மீண்டும் அலுவலகத்திற்கு வந்து செயல்படுத்தலாம். அதனால் உணவங்கள் நிறைந்த இடங்களுக்கிடையே உங்கள் ஸ்டார்டப் இருபது அவசியம். ஆறு மணிக்கு மேல் யாருமே இல்லாத அலுவலக இடங்கள் தேவையில்லை. எல்லோரும் இரவுணவிற்கு அவரவர் வீட்டிற்கு செல்வார்கள் என்றால் (எவ்வளவு தாமதமாக என்றாலும்), நீங்கள் மிகமுக்கியமான ஒன்றை இழக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்கள் நிறுவனத்தை துவக்கும்போதே இப்படி இருந்தால் கடவுள் உங்களை காப்பாற்றுவாராக.   

நான் இப்போது (அமெரிக்காவில்) ஒரு ஸ்டார்டப்பை துவங்கினால், மூன்று இடங்களை மட்டுமே தேர்வு செய்வேன்: சென்ட்ரல் ஹார்வேர்டில் உள்ள ரெட் லைன் அல்லது டேவிஸ் ஸ்கொயர்; பாலோ ஆல்டோவில் உள்ள யுனிவெர்ஸிடி அல்லது கலிஃபோர்னியா அவென்யூ; பெர்க்லியில் கேம்பஸ்ஸை ஒட்டி வட அல்லது தென் பகுதியில். இந்த இடங்களில் மட்டுமே சரியான சூழல் உள்ளது. 

பணத்தை மிச்சப்படுத்த சிறந்த வழி, ஆட்களை வேலைக்கு எடுக்காமல் இருப்பது. நான் இதில் ஒரு அதி தீவிர நிலைப்பாட்டை எடுக்கிறேன். ஆனால் ஒரு கம்பெனி செய்யும் மோசமான தவறு ஆட்களை வேலைக்கு எடுப்பது. ஆட்களின் சம்பளம் மோசமான ஒரு தொடர் செலவு. இடப்பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும் இடத்தைவிட்டு பெருநிறுவனங்கள் இருக்கும் இடத்திற்கு மாற வேண்டி இருக்கும். உங்கள் மென்பொருளையும் மோசமாக்கும். எல்லாவற்றையும் விட மோசமானது நிறைய ஆட்களை எடுத்தால் உங்கள் வேகம் தடைபடும். எட்டு பேர் சேர்ந்து மீட்டிங் போட்டு முடிவெடுக்க வேண்டியிருக்கும். அதனால் எவ்வளவு குறைந்த ஆட்களை வேலைக்கு எடுக்கிறீர்களோ அவ்வளவு நல்லது.  

குமிழி காலத்தில் நிறைய ஸ்டார்டப்கள் இதற்கு நேரெதிர் கொள்கையை பின்பற்றின. எவ்வளவு விரைவாக வேலைக்கு ஆள் எடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக ஊழியர்களின் எண்ணிக்கையை பெருக்கின. உரிய பதவியோடு ஆள் இல்லையென்றால் எதையுமே செய்யமுடியாது என்பதைப்போல. அது பெரிய நிறுவனத்தின் வழி. நீங்கள் ஒரு வேலையை செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள், ஆனால் உங்களால் முடியவில்லை என்றால் மட்டுமே ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும்.  

தேவையில்லாமல் ஊழியர்களை சேர்த்துக்கொள்வதால் செலவும் அதிகமாகிறது, வேகமும் குறைகிறது என்றால் ஏன் எல்லா நிறுவனங்களும் அதை செய்கின்றன ? எல்லோருக்கும் தங்களுக்கு கீழே நிறைய ஆட்கள் வேலை செய்வதை விரும்புகிறார்கள் என நினைக்கிறேன். சி.யீ.ஓ வரை இந்த பலவீனம் நீள்கிறது என நினைக்கிறேன். நீங்கள் ஒரு நிறுவனத்தை நடத்தினால், நீங்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான கேள்வி, எவ்வளவு பேர் உங்கள் நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள் என்பது. அந்த பதிலால் உங்களை எடை போடுவார்கள். சம்பந்தமே இல்லாத ஆட்கள் கூட கேட்பார்கள். பத்திரிக்கை நிருபர்கள்கூட இந்த கேள்வியை கேட்பார்கள். பத்து பேர் என்ற பதிலைவிட ஆயிரம் பேர் என்ற பதில் அவர்களை ஈர்க்கும்.

உண்மையிலே இது அபத்தமானது. ஒரே அளவு வருமானம் ஈட்டக்கூடிய இரண்டு நிறுவனங்கள் இருந்தால், எதில் ஊழியர்கள் குறைவாக இருக்கிறார்களோ அதுவே சிறந்த நிறுவனம். எவ்வளவு பேர் ஊழியர்களாக இருக்கிறார்கள் என்று என்னிடம் கேட்பார்கள். “இருபது” என்று சொல்வேன். ஒன்றும் பெரிதாக இல்லை போல் இருக்கிறது என்று அவர்கள் நினைப்பது எனக்கு தெரியும். கூடவே சேர்த்து இதையும் சொல்வேன், “ஆனால், எங்கள் போட்டி நிறுவனத்தால் எங்களோடு போட்டி போட முடியவில்லை. அவர்களிடம் நூற்று நாற்பது பேர் வேலை செய்கிறார்கள். இப்பொழுது இந்த இரண்டில் எது பெரிய எண்ணிக்கை?”

அலுவலகத்தை போலவே ஊழியர்களின் எண்ணிக்கையும் ஒரு பார்வைக்கு அட்டகாசமாக இருப்பதற்கும் உண்மையிலே அட்டகாசமாக இருப்பதற்கும் இடையே உள்ள தேர்வுதான். பள்ளிகளில் அதிபுத்திசாலியாக இருந்தவர்களுக்கு இந்த இரண்டிற்குமான வித்யாசம் தெரியும். நீங்கள் ஒரு நிறுவனம் துவங்கினாலும் அதை தொடருங்கள்.

நீங்கள் துவங்க வேண்டுமா ?

ஆனால் நீங்கள் ஒரு நிறுவனம் துவங்க வேண்டுமா? நீங்கள் சரியான ஆளா? நீங்கள் சரியான ஆளென்றால், இது உண்மையிலே செய்யத்தக்கதா?

நிறைய பேர் அவர்களுக்கே தோன்றுவதைவிட அவர்கள் ஒரு ஸ்டார்டப் துவங்குவதற்கு சரியான ஆட்கள்தான். இப்போழுது இருப்பதைவிட பத்து மடங்கு அதிக ஸ்டார்டப் இருந்திருக்கும், அது நல்லதும் கூட. 

ஸ்டார்டப் துவங்குதற்கு நான் சரியான ஆள் என இப்போது உணர்கிறேன். ஆனால் ஒரு நிறுவனம் துவங்க வேண்டும் என்ற எண்ணம் என்னை மிரளச்செய்தது. நான் ஒரு லிஸ்ப் கொந்தராக இருந்ததால், வலுக்கட்டாயமாக நிறுவனம் துவங்க வேண்டியதாயிற்று. நான் ஆலோசனை வழங்கிய நிறுவனம் சிக்கல்களில் மாட்டியது. மற்ற நிறுவனங்கள் லிஸ்ப்பை பெரிதாக பயன்படுத்தவில்லை. எனக்கு வேறு நிரல் மொழியில் எழுத பிடிக்காததால் (1995இல் அந்த இன்னொரு மொழி C++), எனக்கு இருந்த ஒரே வழி லிஸ்பை வைத்து ஒரு நிறுவனத்தை துவங்குவது. 

ரொம்ப மிகையானகதை போல இருக்கும், ஆனால் நீங்கள் ஒரு லிஸ்ப் கொந்தராக இருந்தால், நான் சொல்வது புரியும். ஸ்டார்டப் துவங்குவது எந்த அளவிற்கு என்னை மிரளவைத்தது என்றால், வேறுவழியே இல்லை என்னும்போது தான் நான் துவங்கினேன். நிறைய பேரால் துவங்க முடியும். ஆனால் முயல்வதற்கே மிகவும் பயப்படுகிறார்கள்.

யார் ஸ்டார்டப் துவங்க வேண்டும்? 23 வயது முதல் 38 வயது வரை இருக்கக்கூடிய நல்ல கொந்தர்கள், பணப்பிரச்சனையை ஒரேடியாக தீர்க்க வேண்டும் (வாழ்நாளெல்லாம் வேலை செய்வதைவிட) என நினைப்பவர்கள் துவங்கலாம்.

என்னால் நல்ல கொந்தர் யார் என்று சரியாக சொல்லிவிட முடியாது. ஒரு முதல்தர பல்கலை கழகத்தில், கணிப்பொறி அறிவியல் படிக்கும் சராசரிக்கும் மேலான ஐம்பது சத மாணவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒரு கொந்தராக இருப்பதற்கு கணிப்பொறியியல் படித்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை; நான் கல்லூரியில் தத்துவம் பயின்றேன். 

உங்கள் இளம் வயதில், நீங்கள் ஒரு நல்ல கொந்தரா என்று சொல்வது கடினம். நல்லவேளையாக ஒரு நிறுவனம் துவங்குவது என்பது நல்ல கொந்தர்களை தானாகவே தேர்வு செய்யும் முறை. மக்களுக்கு ஸ்டார்டப் துவங்குவதற்கு எது உந்துதல் என்றால் பயன்பாட்டில் இருக்கும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தை பார்த்து யோசித்தபின், இவர்கள் x, y, z அல்லவா செய்யவேண்டும்? என்று தோன்றுவது. அது ஒரு நல்ல கொந்தருக்கான அடையாளம்.

நான் குறைந்தபட்ச வயதை 23 என்று ஏன் சொல்கிறேன் என்றால், அதுவரை உங்கள் மூளைக்கு தெரியாதது ஒன்று உள்ளது. உங்களுடைய நிறுவனத்தை துவங்கும்முன் ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களில் என்ன இருக்கிறது என்று தெரியவேண்டும். அந்த நிறுவனம் ஒரு ஸ்டார்டப்பாக இருக்கு வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய கல்வி கடன்களை அடைப்பதற்காக நான் ஒரு வருடம் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்தேன். என்னுடைய வாழ்விலே அது மிக கொடுமையான ஒரு வருடம், ஆனால் நான் அறியாமலே மென்பொருள் வணிகத்தை பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். நிறைய “கூடாது”கள்: அதிக மீட்டிங்குகளை வைக்க கூடாது; ஒரே நிரலில் நிறைய பேர் கைவைக்க கூடாது; விற்பனை ஆள் நிறுவனத்தை நடத்த கூடாது; விலை அதிகமான மென்பொருளை உருவாக்க கூடாது; நிரல் ரொம்ப பெரிதாகக்கூடாது; பிழைகளை டெஸ்டர்கள் மட்டுமே கண்டுபிடிக்கவேண்டும் என்று இருக்ககூடாது; மென்பொருள் பதிப்புகளுக்கிடையே இடைவெளி அதிகமாக இருக்க கூடாது; நிரலாளர்களுக்கும் பயனர்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருக்க கூடாது; கேம்பிரிட்ஜிலிருந்து ரூட் 128க்கு மாறக்கூடாது, ..[8]. நேர்மறையான பாடத்தைவிட எதிர்மறையான பாடங்கள்தான் அதிகம். எதிர்மறையான பாடங்கள்தான் இன்னும் பயனுள்ளது: ஒரு சிறந்த பெர்ஃபார்மன்ஸை மீண்டும் செய்வது கடினம், ஆனால் தவறுகளை தவிர்ப்பது எளிது.[9]

23 வயதிற்குமுன் துவங்க வேண்டாம் என்பதற்கு இன்னொரு காரணம், மக்கள் உங்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். விசிக்கள் உங்களை நம்ப மாட்டார்கள், முதலீடு தரும்போது உங்களை வெறும் அடையாளமாக சுருக்கிவிடுவார்கள். வாடிக்கையாளர்கள் நீங்கள் அவர்களை பாதியிலே விட்டுவிட்டு போய்விடுவீர்கள் என திகிலடைவார்கள். சிலவற்றில் உங்களுக்கே உங்கள் வயது தெரியும்; உங்களைவிட ரொம்ப வயதானவர்களை வேலை வாங்குவது சிக்கலாக இருக்கும்; நீங்களே 21 வயதென்றால் உங்களைவிட இளையவர்களை மட்டுமே வேலைக்கு எடுத்தால் உங்கள் வாய்ப்புகள் மிக குறுகிவிடும். 

யாரவது சிலர் அவர்கள் விரும்பினால் 18 வயதிலே நிறுவனத்தை துவங்கலாம். 19 வயதில் பில் கேட்ஸ் பால் ஆலனோடு (22 வயது) மைக்ரோஸாஃப்டை துவங்கினார். (பாலின் 22 வயது உதவியாக இருந்திருக்கும்.) நீ சொல்வதை சொல், நான் இப்பொதே ஒரு நிறுவனத்தை துவங்குவேன் என்று நினைத்தால், நீங்கள் இந்த தடைகளெல்லாம் கடக்க கூடியவராக இருக்கலாம். 

ஸ்டார்டப் துவங்குவதற்கான வயதின் இன்னொரு எல்லை (38 வயது) கவனத்தில் கொள்ள வேண்டும். நான் அதை சொல்வதற்கான காரணத்தில் ஒன்று – நிறைய பேருக்கு அந்த வயதிற்குபின் உடலில் உறுதி குறையும். வாரத்தின் ஏழு நாளும் நள்ளிரவு 2:00 அல்லது 3:00 வரை நான் முன்பு வேலை செய்வேன். இப்பொழுது அதை செய்ய முடியுமா என்று தெரியவில்லை.

மேலும், பொருளியல் ரீதியாக ஸ்டார்டப் அதிக ரிஸ்க் உடையது. நீங்கள் எதையாவது செய்து, சொதப்பி, திருவோடு மட்டுமே மிஞ்சியது என்றால், 26 வயதில் அது பெரிய பிரச்சனை அல்ல; பொதுவாகவே 26 வயதில் நிறைய பேருக்கு கையில் காசிருக்காது. ஆனால் 38 வயதில் நீங்கள் நிறைய ரிஸ்க் எடுக்க முடியாது — குறிப்பாக உங்களுக்கு குழந்தைகள் இருந்தால். 

என்னுடைய கடைசி தேர்வுதான் மிக கடுமையானது. உங்களுக்கு உண்மையிலே ஒரு ஸ்டார்டப் துவங்க வேண்டுமா? பொருளியல் ரீதியில், உங்கள் வேலை வாழ்க்கையை மிகக்குறுகிய அளவிற்கு சுருக்குகிறீர்கள். சாதாரணமாக நாற்பது வருடங்கள் உழைப்பதற்கு பதில், வெறித்தனமாக நான்கு வருடங்கள் உழைப்பீர்கள். கடைசியில் எதுவும் இல்லாமல் போகலாம் (அப்படியென்றால் அதற்கு நான்கு வருடங்கள் தேவைப்படாது.)

இந்த காலகட்டத்தில் நீங்கள் வேலையை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால் நீங்கள் வேலை செய்யாத போது, உங்கள் போட்டியாளர்கள் வேலை செய்வார்கள். என்னுடைய ஒரே பொழுதுபோக்கு ஓடுவது மட்டுமே. நீண்ட நேரம் வேலை செய்வதற்கு ஓட்டம் உதவியது. இரவில் ஒரு பதினைந்து நிமிடங்கள் புத்தகங்கள் படிப்பேன். மூன்று வருட காலத்தில் மொத்தமாக இரண்டு மாதங்களுக்கு எனக்கு ஒரு காதலி இருந்தாள். சில வாரங்களுக்கு ஒரு முறை ஒரு சில மணிநேரங்களுக்கு ஏதோ ஒரு புத்தகக்கடையிலோ அல்லது நண்பர்கள் வீட்டில் இரவுணற்கோ செலவிடுவேன். இரண்டு முறை என் பெற்றோர்களை சென்று பார்த்தேன். மற்றபடி வேலைதான் செய்தேன்.

வேலை செய்வது சில நேரங்களில் ஜாலியாக இருந்தது. ஏனென்றால் என் சிறந்த நண்பர்களுடன் வேலை செய்தேன். சில சமயங்களில் தொழில்நுட்ப ரீதியிலும் ஆர்வமூட்டியது. ஆனால் 10% தான். மற்ற 90% பற்றி பின்னால் யோசித்தால் அன்று நினைத்தைவிட நன்றாக இருக்கிறது என்று சொல்லலாம். கேம்பிரிட்ஜில் ஆறு மணி நேரம் மின்சாரம் இல்லாத ஒரு நாளில் பெட்ரோலில் ஓடக்கூடிய ஒரு ஜெனரேட்டரை அலுவலகத்தின் உள்ளே ஓட்ட முயற்சித்தோம். அதை மீண்டும் முயல மாட்டேன்.

சாதாரணமான ஒரு வாழ்வில் உள்ள வேலையில் எவ்வளவு சில்லறைத்தனங்களை எதிர்கொள்வீர்களோ அதைவிட குறைவாகவே ஒரு ஸ்டார்டப்பில் எதிர்கொள்வீர்கள். ஸ்டார்டப் குறுகிய காலம் என்பதால் நிறைய சில்லறை சச்சரவுகள் இருப்பது போல தோன்றும். ஒரு ஸ்டார்டப் உங்களுக்கு நேரத்தை தருகிறது. நீங்கள் ஒரு ஸ்டார்டப் துவங்க வேண்டுமா என்று முடிவுசெய்ய, இப்படி யோசியுங்கள்: நாற்பது வருடங்கள் சம்பளத்திற்கு வேலை செய்வதற்கு பதில் சில வருடங்கள் ஸ்டார்டப் துவங்கி உங்களுடைய பணப்பிரச்சனையை தீர்த்துக்கொள்வேன் என்று நினைப்பவராக இருந்தால், நீங்கள் ஸ்டார்டப் துவங்கலாம்.  

நிறைய பேருக்கு இருக்கும் சிக்கல் ஸ்டார்டப் துவங்குவதா அல்லது முதுகலை பட்டப்படிப்பிற்கு செல்வதா என்பது. முதுகலை மாணவர்கள்தான் ஸ்டார்டப் துவங்குவதற்கு சரியான வயதில் இருக்கும் சரியான ஆட்கள். நீங்கள் ஸ்டார்டப் துவங்கினால் உங்கள் எதிர்கால கல்லூரி வாழ்க்கை பாதிக்கப்படலாம் என்று நினைக்கலாம். நீங்கள் ஒரு ஸ்டார்டப்பிலும் இருந்து கொண்டு, முதுகலை படிப்பையும் தொடர முடியும் (ஸ்டார்டப்பின் ஆரம்ப காலத்தில்). எங்கள் ஸ்டார்டப்பின் மூன்று நிறுவனர்களில் இருவர் கல்லூரியில் முழுநேர மாணவர்களாக இருந்து, பட்டம் பெற்றனர். எல்லாவற்றையும் ஒத்திப்போட்டு கொண்டே இருக்கும் முதுகலை மாணவர்களிடம் இருக்கும் அதிவேக ஆற்றலுக்கு இணையான ஊற்றுகள் குறைவே. 

நீங்கள் உங்கள் கல்லூரியை விட்டு விலக வேண்டுமென்றாலும், அதிகபட்சம் அது ரொம்ப காலத்திற்கு இருக்காது. உங்கள் ஸ்டார்டப் தோற்குமென்றால், அது விரைவாகவே தோற்றுவிடும். நீங்கள் உங்கள் கல்லூரி வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம். அது வெற்றி பெற்றால், உங்களுக்கு ஒரு துணை பேராசிரியர் ஆகவேண்டும் என்ற வேட்கை குறைந்திருக்கும். 

உங்களுக்கு துவங்க வேண்டும் என்று தோன்றினால், துவங்குங்கள். வெளியே இருந்து பார்ப்பதற்கு தோன்றுவதைப்போல அது ஒன்றும் பெரிய மர்மம் அல்ல. உங்களுக்கு “வணிகம்” தெரிந்திருக்க வேண்டியதில்லை. பயனர்கள் விரும்பும் ஏதோ ஒன்றை செய்யுங்கள், வரவைவிட குறைவாக செலவு செய்யுங்கள். அது அவ்வளவு கடினமா?

குறிப்புகள்

[1] கூகிளின் வருமானம் ஆண்டிற்கு இரண்டு பில்லியன் டாலர்கள், அதில் பாதி வேறு தளங்களின் விளம்பரங்களில் இருந்து வருகிறது.

[2] ஸ்டார்டப்களுக்கு பெரிய நிறுவனங்களை விட ஒரு வசதி இருக்கிறது. தொழில் துவங்கும்போது எந்த பாகுபாடு சட்டங்களும் இல்லை. உதாரணமாக, சிறு குழந்தைகள் இருக்கும் (அல்லது சிறிது காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும்) பெண்ணோடு ஒரு நிறுவனம் துவங்குவதற்கு நான் யோசிப்பேன். ஆனால் சட்டத்தின் படி உங்கள் எதிர்கால ஊழியர்களிடம், நீங்கள் குழந்தை பெற்றுகொள்ள போகிறீர்களா என்று கேட்க முடியாது. நம்புகிறீர்களோ இல்லையோ அமெரிக்க சட்டத்தின்படி, புத்திசாலித்தனத்தின் அடிப்படையிலும் நீங்கள் ஊழியர்களிடையே பாகுபாடு காட்ட முடியாது. நீங்கள் உங்கள் ஸ்டார்டப்பை துவங்கும்போது, நீங்கள் யாரோடு துவங்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்து, அதில் எப்படிப்பட்ட பாகுபாடும் காட்டிக்கொள்ளலாம்.  

[3] பிஸினஸ் கல்லூரியைவிட மிக குறைவான விலையில் கொந்துவது எப்படி என்று கற்றுக்கொள்ளலாம். நீங்களே கற்றுகொள்ளலாம். ஒரு யுனிக்ஸ் கம்ப்யூட்டர், கே&ஆர் புத்தகத்தின் காப்பி, உங்கள் பக்கத்துவீட்டுக்காரரின் பதினைந்து வயது மகனின் சில மணிநேர அறிவுரையுடன் நீங்கள் உங்கள் பயனத்தை துவங்கலாம். 

[4] இருப்பதிலே பெரிய கம்பெனியான அரசாங்கத்திற்கு விற்க விரும்பும் ஸ்டார்டப்பை துவங்க வேண்டாம். அவர்களுக்கு தொழில் நுட்பம் விற்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதை வேறு யாரவது ஒருவர் துவங்கட்டும்.

[5] ஜெர்மனியில் தொழில் துவங்கிய நண்பர், அவர்கள் கண்டிப்பாக நீங்கள் சமர்பித்த படிவங்களை சரி பார்ப்பார்கள் என்றார். அதனால்தான் அங்கே நிறைய ஸ்டார்டப்கள் இல்லை.

[6] எங்கள் விதை முதலீட்டு கட்டத்தில், எங்கள் மதிப்பு  $100,000. ஜூலியனின் பங்கு 10%. ஆனால் இது ஒரு தவறான எண். ஏனென்றால் பணத்தைவிட அவர் எங்களுக்கு அதிகமாக நிறைய தந்திருந்தார். 

[7] உங்களை வாங்க விரும்பும் நிறுவனத்திற்கும் இது பொருந்தும். சிலர் உங்கள் திட்டங்களை தெரிந்து கொள்வதற்காக உங்களை வாங்குவது போல நடிப்பார்கள். உங்களால் சரியாக கனிக்க முடியாது. அதனால், அவர்களிடமும் எல்லாவற்றையும் சொல்வதுபோல தோற்றத்தை ஏற்படுத்தி, சில முக்கியமானவற்றை சொல்லிவிட வேண்டாம்.

[8] நான் மோசமான ஊழியனாக இருந்தேன். அதற்காக அங்கே நான் வேலை செய்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

[9] DMV (அமெரிக்க RTO) செய்வதற்கு நேர்மாறாக செய்து, உங்கள் பிசிஸில் வெற்றி அடையலாம். 

ட்ரேவோர் பிளாக்வெல், சாரா ஹார்லின், ஜெஸ்ஸிகா லிவிங்ஸ்டன், ராபர்ட் மோரிஸிற்கு கட்டுரையின் வரைவை படித்ததற்காக நன்றிகள். என்னை உரையாற்ற அழைத்ததிற்காக ஸ்டீவ் மெலெண்டஸ் மற்றும் கிரெகொரி பிரைஸிற்கு என் நன்றிகள்.